You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது? சர்ச்சை கிளப்பும் மைத்ரேயன்
அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் கட்சிக்குள் பிரச்சனை நீடித்து வருவதாக பரவலாக பேசப்பட்ட விடயம் தற்போது அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி மைத்ரேயனின் முகநூல் பதிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இருவேறு அணிகளாக இருந்த அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சமரசம் ஏற்பட்டு இணைந்தனர். இந்த இணைப்பிற்கான பேச்சுவார்த்தையில் முக்கியப்பங்கு வகித்தவராக கருதப்படும் அதிமுகவின் மாநிலங்களவை எம்பி மைத்ரேயன் இதுகுறித்து நேற்று தனது முகநூலில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தார்.
அப்பதிவில் "ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" என்று மறைமுகமாக அதிமுகவின் உள்ளே நிலவும் சலசலப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மைத்ரேயன் கருத்தை நான் கவனிக்கவில்லை. ஆனால், எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. கட்சி விவகாரங்களை யாரும் வெளிப்படையாக வெளியில் கூறக்கூடாது" என்று மட்டும் கூறினார்.
இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, "மைத்ரேயனின் ஃபேஸ்புக் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து. இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்பது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. இரட்டை இலை சின்னத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைச் சந்திப்போம்' என்று கூறியிருந்தார்.
இச்சூழ்நிலையில், தம்பிதுரையின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மைத்ரேயன், "நேற்று நான் எனது முகநூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்" என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், "மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் தொடரும். மைத்ரேயன் மனதில் மட்டுமல்ல அங்கிருக்கும் எல்லோரது மனதிலும் இப்படிப்பட்ட எண்ணம் வரும்" என்று இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் தினகரன் தரப்பினரிடமிருந்து தொடர் குற்றச்சாட்டுகளை சந்தித்து வரும் சூழ்நிலையில் மைத்ரேயனின் பதிவுகளும், தம்பிதுரையின் பதிலும் அவர்களுக்குள்ளாகவே கருத்து வேற்றுமை இருப்பதை காட்டுகிறது.
என்ன பிரச்சினை?
மைத்ரேயனின் பதிவில் பின்னூட்டமிட்ட, ஓபிஎஸ் ஆதரவாளர்களாக தங்களைப் பதிவு செய்துகொண்ட பலர், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் அவமதிக்கப்படுவதாகவும், ஒதுக்கப்படுவதாகவும் பதிவிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஐயப்பன் ஐயப்பன் என்ற பெயருடைய முகநூல் பதிவர் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் எப்படி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள் என்பதை தமது பின்னூட்டத்தில் விவரித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்