You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எடப்பாடி - ஓ. பன்னீர்செல்வம் அணிகளுக்குள் மீண்டும் பிளவா?
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டு, பிறகு இணைந்த நிலையில் முன்பு ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், இரு அணிகளுக்கும் இடையில் தற்போதும் இடைவெளி இருப்பதைப்போல முகநூலில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
"ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" என மைத்ரேயனின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, நிதியமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், அதற்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும்படியும் கோரப்பட்டார்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாகப் பிரிந்துசென்றார். வி.கே. சசிகலா, மீதமிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு முதல்வராகப் பதவியேற்கவிருந்த நிலையில், அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராகப் பதவியேற்றார். சில நாட்கள் சசிகலாவின் உறவினரும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாக இருந்த டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
இதன் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் அணியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு அணிகளும் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஒன்றாக இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஓ. பன்னீர்செல்வத்திற்கு நிதியமைச்சர், வீட்டு வசதித் துறை அமைச்சர் பொறுப்போடு, துணை முதல்வர் பதவியும் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன. அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டனர்.
இருந்தபோதும், இரு அணிகளுக்கிடையிலும் பல்வேறு உரசல்கள் நீடித்தபடியே இருந்தன. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் கலந்துகொள்ளும் விழாக்களில் இரு அணியினரும் தனித் தனியே பேனர்களை வைத்தனர்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டாலும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே. பழனிச்சாமியின் ஒப்புதலோடுதான் முடிவுகள் எடுக்கப்படும் வகையில் கட்சியின் விதிகள் திருத்தப்பட்டன. இதில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. .
அணிகள் இணைந்த பிறகு நடந்த பொதுக்குழுவில் கட்சிக்கு வழிகாட்டும் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக் குழு அமைக்கவில்லை. இதனால், ஆட்சிப் பொறுப்பு முழுமையாக எடப்பாடி அணி வசமே இருக்கும் நிலையில், கட்சியிலும் தனித்து முடிவெடுக்க முடியாத நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறார்.
இந்த நிலையில்தான், முன்பு ஓ. பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், இரு அணிகளும் மனதளவில் இணையவில்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.
மைத்ரேயனின் இந்தக் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஊடகங்கள் கேட்டபோது, "மைத்ரேயன் கருத்தை நான் கவனிக்கவில்லை. ஆனால், எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. கட்சி விவகாரங்களை யாரும் வெளிப்படையாக வெளியில் கூறக்கூடாது" என்று மட்டும் கூறினார்.
"மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் தொடரும். மைத்ரேயன் மனதில் மட்டுமல்ல அங்கிருக்கும் எல்லோரது மனதிலும் இப்படிப்பட்ட எண்ணம் வரும்" என டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்
- முகாபே பதவி விலக வேண்டும்: பதவி நீக்கப்பட்ட துணை அதிபர்
- "தீபிகாவின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்" - கமல்
- தொடர்ந்து 22 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சி - எப்படி இருக்கிறது குஜராத்?
- இந்திரா காந்தியின் பாணியை மோதி பின்பற்றுகிறாரா?
- ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்