You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம் விவாதம்: "தேசிய கீதத்துக்கு நிற்பதைவிட ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காமல் இருப்பதே தேசபக்தி"
திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசியம் கீதம் இசைக்கப்பட்டு, அதற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே திரைப்படம் தொடங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. அப்போது தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இல்லை.
நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் பலவற்றை எதிர்கொண்ட அந்தத் தீர்ப்பு இப்போது நாடு முழுவதும் அமலில் உள்ளது.
தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் நீதிபதிகளில் ஒருவரான, நீதிபதி டி.ஒய்.சந்தரசூத், "நாட்டுப்பற்று நம் தோள்களில் வேண்டியதில்லை. மக்கள் பொழுதுபோக்கிற்காகவும் மன அழுத்தத்தை போக்கவும் திரைப்படம் பார்க்க வருகின்றனர். டீ-சர்ட் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்திருப்பவர் தேசிய கீதம் இசைக்கப்படுவதால் திரையரங்குகளுக்கு வரக் கூடாது என்று சொல்லப்படலாம்," என்று கூறியுள்ளார்.
தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்பதை மாற்றி விரும்பினால் இசைக்கலாம் என்று முந்தைய தீர்ப்பு மாற்றி எழுதப்படலாம் என்று அந்த அமர்வு கூறியுள்ளதுடன், இது குறித்த சட்டம் இயற்றுவதற்காக மத்திய அரசின் பதிலையும் கேட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்தக் கருத்து ஊக்கமளிக்கிறதா, குழப்புகிறதா என்று பிபிசி தமிழின் வாதம் - விவாதம் பகுதியில் ஃபேஸ்புக்கில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிபிசி தமிழ் நேயர்கள் பின்னூட்டங்களில் பதிவிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகள் இதோ.
"தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பதை விட லஞ்ச அலுவலர்களை வேலையை விட்டு தூக்குவதும், ஊழல் பேர்வழிகளுக்கும் வாக்களிக்காமல் இருப்பதும் தான் உண்மையான தேசபக்தி." என கூறியுள்ளார் மனோகர்.
லிபின் என்ற நேயர்," தேசப்பற்றை ஊட்டுதல் வேறு திணித்தல் வேறு..ஆகவே உச்சநீதிமன்ற கருத்து சரியானதே." என தெரிவித்துள்ளார்.
"நிற்கக் வேண்டியது கடமை. ஆனால் கட்டாயப்படுத்த இயலாது.. திரையரங்குகளில் தேசியகீதம் தவறு." என தொல்காப்பியன் கூறியுள்ளார்.
"இந்தியன் என்ற உணர்வு இருந்தால் போதும்." என கிருபானந்தன் கூறுகிறார்.
"திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நல்லது தான். இது நமது பெருமையை தான் காட்டுகிறது" என பாலாஜி பதிவிட்டுள்ளார்.
இதற்கு எதிர் கருத்துகளை சிலர் பதிவிட்டுள்ளனர்."பொழுதுபோக்கு இடங்களின் தேசிய கீதம் தேவை இல்லை" என லோகேஷ் கூறுகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்