You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம் விவாதம்: கந்துவட்டிக்கு வழிகாட்டுகிறதா நிர்வாக நடைமுறை ?
கந்துவட்டி சமூக கொடுமைக்கு எதிரான தங்கள் கோரிக்கைகள் கேட்கப்படவில்லை என்று திருநெல்வேலியில் இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் தீக்குளித்த சம்பவம் கந்துவட்டி தொடர்பாக சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது.
தீக்குளித்த குடும்பத்தினரில், தந்தை எசக்கிமுத்துவை தவிர அவரது இளைய மகள் மற்றும் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் இறந்துள்ளனர்.
பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட செய்யும் "வாதம் விவாதம்" பகுதியில், "கந்து வட்டிக் கொடுமைகளை தடுக்க முயாததற்கு காரணம் நிர்வாக நடைமுறை கோளாறுகளா அல்லது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்மையா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.
அது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
நிதியும் நீதியும் ஏழைகளுக்கு எட்டாக்கனி?
ராஜேஷ் கண்ணா என்ற நேயர், "ஏழைகளுக்கான மத்திய, மாநில அரசின் நிதியுதவியும், கடன் திட்டங்களும் கடைக்கோடி ஏழைகளுக்கு சென்று சேரவில்லை, சென்றடையாமல் பார்த்துக் கொள்கின்றனர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும். நிதியும், நீதியும் இன்றும் ஏழைகளுக்கு எட்டாக்கனியே!. என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நிர்வாக கோளாறுதான் காரணம் என்று கூறும் சாம் குட்டி என்பவர், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏழை மக்கள் வேறுவழியில்லாமல் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். தெரிந்துதான் வாங்குகின்றனர். ஆனால், இதனை வசூலிக்க போலீஸ் உடந்தையாக இருப்பதுதான் கொடுமை என்று கூறியுள்ளார்.
வங்கிகளும் குற்றவாளிகளே
வங்கிகளின் அலைக்கழிப்பு, அவசரத்திறகு நாடினால் அதை கொண்டு வா இனை கொண்டு வா என்று போதிய விவரங்கள் இல்லாமல் விரட்டியடிப்பது, கிராமங்களில் வாழும் பலருக்கும் வங்கிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் கந்து வட்டி கொடுப்போருக்கு வரமாக உள்ளது என்கிறார் சஜன் சின்னதுரை.
திருடனிடம் சாவியை கொடுத்த கதை
கந்துவட்டிக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என்று கருத்து பதிவிட்டுள்ள சவாத் மெஸ்ஸி, "திருடனிடம் சாவியை கொடுத்த கதைதான் இது என்று கூறியுள்ளார். இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று கூறுவதற்கு வழியே இல்லை என்பது இவரது வாதம். நிர்வாகம் சரியாக இருந்தால், ஏழைகள் வட்டிக்கு கடன் வாங்க செல்ல மாட்டார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தில் உள்ளவர்களே இம்மாதிரியான தொழிலில் ஈடுபடுகின்றனர்" என்கிறார்.
நிர்வாக சீர்கேடு, கையூட்டு வாங்கும் காவல் அதிகாரிகள், கடமையை மறக்கும் அரசு ஊழியர்கள் காரணம் என்கிறார் ரம்ஸான் அலி.
பொருளாதார கொள்கை
அரசின் பொருளாதார கொள்கையே இதற்கு காரணம் என்கிற மாரியப்பன் நடராஜன். வேலையின்மை, மருத்துவ செலவு, கல்வி செலவு, விவசாயத்தில் நட்டம், தொழிலில் நட்டம், எதிர்பாராத செலவுகள் ஆகியவை கந்துவட்டிக்கு வழிவகுக்கின்றன என்கிறார்.
தனி நபர்கள் வசூலித்தால் அது கந்துவட்டி, அரசாங்கமே வசூலித்தால் அது ஜி.எஸ்.டி என்று ரமேஷ் குமார் என்பவர் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்