டெல்லியில் தடை: தமிழகத்திற்கு திரும்பும் பட்டாசு சரக்கு லாரிகள்

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக வடமாநிலத்திற்கு அனுப்பப்பட்ட பட்டாசு சரக்குகள் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவதாக பட்டாசு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசுப் பொருட்கள் மீது ஏற்கனவே மத்திய அரசு அமல்படுத்திய 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியால் வணிகர்கள் சிரமத்தில் உள்ள நேரத்தில், விற்கப்பட்ட பட்டாசுகள் திருப்பி அனுப்பப்டுவதால், பெருமளவு நஷ்டத்தை தயாரிப்பாளர்கள் சந்திக்கவுள்ளதாக கூறுகிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவில் பட்டாசு விற்பனை தொய்வடைந்துள்ளதாகவும், டெல்லிக்கு அனுப்பப்பட்ட பட்டாசு சரக்கு மூட்டைகளில் எழுபது சரக்கு லாரிகள் கடந்த இரண்டு நாட்களில் சென்னையை வந்தடைதுள்ளன என்கிறார் ஜார்ஜ்டவுன் அனைத்து வணிகர் சங்க துணை தலைவர் அலீப்.

''டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த விலக்கின் பேரில்தான் சரக்குகள் தயாரிக்கப்பட்டன. புதிய தீர்ப்பு நவம்பர் மாதம் வரை பட்டாசு வெடிக்க தடையை கொண்டுவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் ரூ.500 கோடி அளவிலான சரக்குகள் தமிழகத்திற்கு திரும்பியுள்ளன. இன்னும் பல சரக்கு லாரிகள் பாதிவழியில் நிறுத்தவைக்கப்பட்டுள்ளன,'' என அலீப் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

தற்போது திருப்பி அனுப்படும் சரக்குகளை தென்மாநிலங்களில் வெறும் இரண்டு நாட்களில் விற்கவும் முடியாத நிலை உள்ளது என்கிறார் மற்றொரு வணிகர் அனீஸ்ராஜா.

''பெங்களுரு நகரத்தில் அதிக மழை, தமிழகத்தில் பரவலாக மழை என பல சிக்கல்கள் உள்ளன. இதோடு சேர்த்து ஜிஎஸ்டி வரியை கணக்கிட்டு வாடிக்கையாளர்களும் பட்டாசுக்காக செலவிடுவதை குறைத்துக் கொள்வார்கள்,'' என்கிறார் அவர்.

வணிகர்களின் லாபத்தைவிட பட்டாசு மீதான ஜிஎஸ்டி வரிஅதிகமாக உள்ளதாக அனீஸ்ராஜா கூறுகிறார்.

''ஒருவர் ரூ.1,௦௦௦-க்கு பட்டாசு வாங்கினால் ரூ.280 வரியாக செலுத்த வேண்டும் என்ற நிலையில், வணிகர்கள் எடுக்க நினைக்கும் லாபத்தைவிட பல மடங்கு வரியாக அரசு எடுத்துக்கொள்கிறது,'' என்றார் அனீஸ்ராஜா.

சிவகாசியில் குறைந்த உற்பத்தி

சரக்குகள் திருப்பி அனுப்பப்படுவது ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தியும் குறைந்துள்ளதாக சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆசைத்தம்பி கூறுகிறார்.

''சிவகாசியில் உள்ள சுமார் 850 உற்பத்தியாளர்கள் மூலம் கடந்த ஆண்டு ரூ.4,000 கோடிக்கு பட்டாசு தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு அதில் 35 சதவீதம் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்கு, மத்திய அரசின் 28 சதவீத ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் வடமாநிலங்களில் உள்ள வியாபாரிகள் ஆர்டர்களை குறைத்துக்கொண்டனர்,'' என்றார் ஆசைதம்பி.

தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் சரக்குகள் பற்றி கேட்டபோது தற்போது வரை சிவகாசிக்கு எந்த சரக்கும் வந்து சேராததால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றார் ஆசைதம்பி.

''டெல்லி அல்லாத மாநிலங்களில் தடை இல்லை. மேலும் குறைந்த அளவில் சரக்குகள் தயாரிக்கப்பட்டதால் ஓரளவு சிரமம் இருக்காது என்று நம்புகிறோம்,'' என்றார் ஆசைத்தம்பி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :