இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட 15 கிலோ தங்கம் பிடிபட்டது

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குக் கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கம் உட்பட பல நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட 15 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை கைப்பற்றியுள்ளது.

இலங்கையிலிருந்து பெருமளவு தங்கம் படகு மூலமாக நாகப்பட்டினத்திற்குக் கடத்திவரப்பட்டு, அங்கிருந்து கார் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு தம்பதியும் ஓட்டுனரும் இருந்த ஹோண்டா சிவிக் கார் ஒன்று நிறுத்தப்பட்டது.

அந்தக் காரில் 10.84 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. காரில் இருந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர். விசாரணையில் இந்தத் தங்கம் இலங்கையிலிருந்து படகு மூலமாக தமிழகத்திற்குக் கடத்திவரப்பட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும் துபாயிலிருந்து மும்பை வந்த விமானத்தில் 2.44 கிலோ தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டுவந்த நபரும் பிடிபட்டார். அதே விமானத்தில் ஹைதராபாத் சென்ற அந்த நபர் ஹைதராபாதில் கைதுசெய்யப்பட்டார்.

அதேபோல, இரு வெளிநாட்டினர் விமானம் மாறும்போது தாங்கள் கடத்திவந்த தங்கத்தை, உள்ளூர்ப் பயணிகளிடம் கைமாற்றும்போது பிடிபட்டனர். இவர்களிடமிருந்தும் 2.44 கிலோ தங்கம் பிடிபட்டதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

பழையத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து தங்கம் எடுப்பு

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :