காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயற்சி நடக்கிறதா? கொப்பளிக்கும் எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மானிடரிங் பிரிவு
- பதவி, பிபிசி
காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டவிதியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனு, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரமாக வசிப்பவர்கள் என்று கருதுபவர்களுக்கு வேலை மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் `35ஏ சட்டவிதி` சிறப்பு சலுகையை அளிக்கிறது. மேலும் வெளிநபர்கள் நிலம் மற்றும் வீடுகளை வாங்குவதையும் அது தடுக்கிறது.
1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஜூலை மாதம் மத்திய அரசு இது தொடர்பாக விவாதத்தை கிளப்பியதிலிருந்து காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் கவலை தெரிவித்துள்ளனர். சட்ட விதி 370ன் படி மாநிலத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் ஒரு நடவடிக்கையாக அவர்கள் இதனை கருதுகின்றனர்.
சட்டவிதியை ரத்து செய்யக் கோரிய மனு
35ஏ சட்டவிதியை ரத்து செய்யக் கோரிய மனுவை நிராகரிக்கக் கோரி இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் அரசாங்கம் நீதிமன்றத்தில் மனு அளித்த பிறகுதான் சட்ட விதி 35ஏ கவனத்திற்கு வந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசு, மாநில அரசிற்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக இந்த "மிக முக்கிய" விஷயத்தை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முடியும் முன்னதாக இந்த வழக்கை முடிக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
`வி தெ சிட்டிசென்ஸ்` (We the Citizens) என்னும் டெல்லியைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தால், சட்டவிதி 35ஏ ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மனு 2014ஆம் ஆண்டு தொடரப்பட்டது. இது "சட்டவிரோதமானது'' என்றும், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறி, அந்த சட்ட விதியை ரத்து செய்யக் கோருகின்றனர்.
இந்த அரசு சாரா நிறுவனம், இந்துத்துவா வலது சாரி நிறுவனங்களின் ஆதரவு பெற்றது என்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் நிறுவனம் என்றும் பல ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை, "காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை பறிப்பதற்கு அரசு முயல்கிறது" என்ற சந்தேகத்திற்கு வித்திடுவதாக உள்ளது என ஃபர்ஸ்ட் போஸ்ட் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஸ்ரீநாத் ராகவன் எழுதிய கட்டுரையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரை, பூகோள ரீதியாக மாற்றியமைக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என காஷ்மீர் மக்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
சட்ட விதி 370ன் படி இந்திய அரசியல் அமைப்பில், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்த தன்னாட்சி அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த சட்ட விதி மாநில அரசாங்கம் தனக்கேற்ற சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், மாநிலத்தின் தனிப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
அரசியல் எதிர்ப்புகள்
இந்த நடவடிக்கைகள், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தை ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட, ஜம்மு காஷ்மீரின் பல தரப்புகளின் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது;
இந்த சட்ட விதி ரத்து செய்யப்பட்டால், காஷ்மீரில் கலவரம் உருவாகும் எனவும், இது காஷ்மீர் இந்தியாவில் எத்தனை காலம் இணைந்திருக்கும் என்ற விவாதத்தையும் கிளப்பும் எனவும் காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் எச்சரிக்கின்றன.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், "மாநிலத்தில் இந்தியாவின் கொடி பறக்காது" என காஷ்மீரின் முதல்வர் மெகபூபா முக்தி கடந்த மாதம் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி, எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா, இந்த சட்டவிதி ரத்து செய்யப்பட்டால், 2008ஆம் ஆண்டு நடைபெற்றதை காட்டிலும் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளதாக உள்ளூர் நாளிதழ்`கிரேட்டர் காஷ்மீர்` தெரிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டு, இந்து புனித தளம் ஒன்றிற்கு சில நிலங்களை கொடுக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த விஷயம் தொடர்பாக பிரிவினைவாத தலைவர்கள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஊடகங்களின் கவலைகள்
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் என இந்திய நிர்வாகத்திற்குற்பட்ட காஷ்மீரில் உள்ள ஊடகங்களும் அஞ்சுகின்றன.
"பிற மாநிலத்தவர் இங்கு சொத்து வாங்குவதற்கு தடை, உள்ளர் தேர்தலில் வாக்களிக்கத் தடை, மாநில அரசுப் பணிகளில் நியமனம் பெறத் தடை ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற ஹிந்து தீவிரவாதிகளின் கனவை நனவாக்குவதற்கான முயற்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையாக இது அமையும்" என ஆங்கில நாளேடான காஷ்மீர் மானிடர் எச்சரித்துள்ளது.
மேலும் குழப்பங்களும், பிரச்சனைகளும் மாநிலத்தில் தவிர்க்க முடியாதவை என அது கணித்துள்ளது.
சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக நீதிமன்றம் முடிவெடுத்தால், அது முடிவில்லா கலவரத்துக்கு வழிவகுப்பதாகவே அமையும் என்று இன்னொரு ஆங்கில நாளேடான காஷ்மீர் அப்ஸர்வர் கருத்துத் தெரிவித்துள்ளது.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













