மரணத்துக்குப் பிறகும் துரத்தும் ஆதார்!

இந்தியர் ஒருவர் தாய்நாட்டில் இறந்து விட்டால் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் எண் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அவசியம் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பும் கிண்டல் செய்தும் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மக்கள் தொகை தலைமைப் பதிவாளர் ஓர் அறிவிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

இறந்தவரின் உறவினர்கள், அவரை சார்ந்தவர்கள், நெருங்கியவர்கள் போன்றோர் அளிக்கும் தகவல், இறந்த நபரின் ஆதார் பதிவுடன் உள்ள தகவலுடன் ஒத்துப் போகிறதா என்பதை சரிபார்க்க முடியும் என்றும், மோசடி அடையாளத்தை தடுக்கவும் முடியும் என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு பதிவுக்கு பொறுப்புள்ள சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் அரசுத் துறைகள், இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய மக்கள் தொகை தலைமைப் பதிவாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதுபற்றி சன்னி தியோல் என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர் "அப்படியென்றால் நாங்கள் ஆதார் இல்லாமல் வாழவோ சாகவோ முடியாதா" என்று ஆச்சரிய ஸ்மைலி போட்டு கருத்து பதிவிட்டுள்ளார்.

சதீஷ் மகேந்திர என்ற பயன்பாட்டாளர் "பொழுது விடிந்தால், ஆதார் பற்றிய அறிவிக்கை தொலைக்காட்சிகளில் வெளியாகி வருகிறது. இறப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வருமான வரி, பான் எண்ணுடன் இணைப்பு என தகவல் வருவது கவலை தருகிறது" என்று கூறியுள்ளார்.

ஜஹாங்கீர் ஆலம் என்பவர் "அசாம்வாசிகளான எங்களுக்கு ஆதார் எண் கிடையாது என்பதால், செப்டம்பர் 30-க்குள் நாங்கள் இறந்து விட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பி கருத்து பதிவிட்டுள்ளார்.

ஆகாஷ் தேஷ்முக் என்பவர் "இந்தியர்களுக்கு எப்போதும் வாழ்வதற்காக ஆதார் தேவைப்படுகிறது. கண்காணிக்கப்பட ஆதார் கார்டு தேவைப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

தனி நபரின் இறப்புப் பதிவுக்கு ஆதார் அவசியம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல் ஏராளமான ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை வெவ்வேறு ட்விட்டர் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :