You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி
இந்தியாவில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக, மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்ற வளாகத்தில், 18 எதிர்க்கட்சிகள் கலந்துக்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவரது பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டது.
கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, அனைத்துக் கட்சிகளும் இணைந்து, ஒருமனதாக கோபாலகிருஷ்ண காந்தியை தேர்ந்தெடுத்தெடுத்திருப்பதாக அறிவித்தார்.
"கோபாலகிருஷ்ண காந்தியிடம் பேசி, வேட்பாளராக அவரது பெயரை அறிவிப்பதற்கான ஒப்புதலையும் பெற்றுவிட்டோம்" என்று சோனியாகாந்தி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எதிர்க்கட்சிகளில் இருந்து மாறுபட்ட கருத்தை வெளியிட்ட ஐக்கிய ஜனதாதள கட்சியின் சார்பில் ஷரத் யாதவ் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் நரேஷ் அகர்வால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்த்ர மிஷ்ரா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தால் அது ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று நடைபெறும். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்படும்.
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக ராம் நாத் கோவிந்தை அறிவித்துவிட்டாலும், குடியரசு துணைத்தலைவருக்கான வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்