கல்வியும், ஆன்மீகப் பயிற்சியும் அளிக்கும் பாரம்பரிய இந்திய மகளிர் பள்ளிக்கூடம்

இந்தியாவின் புனித நகரமான வாரணாசியிலுள்ள மகளிர் உறைவிடப் பாரம்பரியப் பள்ளிக்கூடம் ஒன்று, அந்த நகரத்திலேயே ஒரேயொரு மகளிர் பள்ளிக்கூடம் என்ற வரலாற்றால் சிறப்பு பெறுகின்றது.

மா அனந்தமாயி கான்யாபீத், சிறுமியருக்கான ஒரு பெண் துறவியர் மடம்போல உள்ளது. நாட்டிலுள்ள இளம் பெண்களுக்கு கல்வி மற்றும் ஆன்மீகப் பயிற்சி வழங்குகின்ற சில இடங்களில் இது ஒன்றாகும்.

பல வழிகளில் இதனை ஒரு குருகுலம் என்று கூறலாம். மாணவர்கள் தங்களுடைய குருவுக்கு அல்லது ஆசிரியருக்கு அருகில் வாழும் உறைவிடப் பள்ளிக்கூடம் போன்றதுதான் குருகுலம். புகைப்படக் கலைஞர் பரோமிதா சட்டர்ஜி இந்த அசாதரணமான ஆசிரமத்தை அல்லது ஆன்மீக தியான இடத்தை பார்வையிட்டார்.

இந்து மதத்தின் மத தலைநகரான வாரணாசியில் 69 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை கடந்து ஓடும் இந்தியாவின் மிகவும் புனிதமான ஆறான கங்கையில் மூழ்கி நீராட ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான புனித பயணியர் வருகின்றனர்.

வங்கதேசத்தில் பிறந்து, புனித பயணியாக இந்தியாவில் பரவலாக பயணம் மேற்கொண்ட மா அனந்தமாயி என்பவரால் இந்தப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.

இந்தப் பள்ளிக்கூடத்தின் வழக்கமான நாள் அதிகாலை 4 மணிக்கே தொடங்கிவிடுகிறது. அந்த நாளின்போது, மாணவியர் முறையான கல்வியையும், ஆன்மீகப் பயிற்சியையும் பெறுகின்றனர்.

இங்கு கல்வி கற்பதற்கு ஐந்து வயது சிறுமியர் முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வயதுக்கு வரும் வரை இந்த ஆசிரமத்தின் வழிகாட்டுதலில் வைக்கப்படுகின்றனர். முற்பகல் 10 மணிக்கு பாட வகுப்புகள் தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெறுகின்றன.

வேதங்கள் உள்பட முற்கால இந்து நூற்கள், நாளைக்கு இருமுறை கற்றுக்கொடுக்கப்படுகிறது. சமஸ்கிருத இலக்கணம், ஆங்கிலம், இந்தி, கணிதம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் போன்ற பல பாடங்களும் இந்த குழந்தைகளுக்கு கற்றுதரப்படுகின்றன.

ஒரு நாள் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்பட்ட பின்னர் இரண்டு மணிநேர விளையாட்டு நேரமும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இசை, வீட்டு வேலைகள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், தையல், பூ வேலைப்பாடு, சமையல் மற்றும் பின்னல் பயிற்சிகளும் வழங்கப்படுவதாக இந்தப் பள்ளியின் இணையதளம் தெரிவிக்கிறது.

இந்த சிறுமியர் தங்கி, தூங்குகின்ற பொது தங்குமிடங்களும், விடுதி வசதிகளும் சொகுசானவை அல்ல.

இந்த மாணவியர் வளர்ந்து பள்ளியில் படிக்கின்றபோது வெள்ளை சேலையை பள்ளியின் சீருடையாக வைத்து கண்டிப்பான ஆடைமுறையை இந்த பள்ளி பின்பற்றுகிறது. அனைத்து காலகட்டங்களிலும் அவர்கள் தங்கள் தலைமுடியை சிறியதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வெளி உலகிற்கு சென்று, அவர்கள் விரும்புகிற வேலையை தெரிவு செய்யலாம் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் கல்வி கற்றோர், இந்த நிறுவனத்தையே தங்களுடைய முழு வாழ்க்கையும் கழிக்கின்ற வீடாக கொண்டால், அவர்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன.

புகைப்படங்கள்: பரோமிதா சட்டர்ஜி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்