You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : பயணத் தடையை மீண்டும் வலியுறுத்தும் டிரம்ப்
லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், இத்தாக்குதல் குறித்து உலகத்தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
''லண்டன் மற்றும் பிரிட்டனிற்கு அமெரிக்காவால் என்ன உதவிகளை செய்ய முடியுமோ அதை நிச்சயமாக செய்வோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.
அமெரிக்க நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டு தற்போது விசாரணையை எதிர்கொண்டு வரும் ஆறு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு அதிபர் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக பிரிட்டனின் பக்கம் ஃபிரான்ஸ் உள்ளதாக அதிபர் இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
''இந்த புதிய துயரத்தை எதிர்கொண்டுள்ள பிரிட்டனின் தரப்பில் முன்னெப்போதும் இல்லாததைவிட ஃபிரான்ஸ் உடனிருக்கும். என்னுடைய எண்ணங்கள் தாக்குதலில் பலியானவர்களுக்கும், அவர்களுடைய அன்புக்குரியவர்களுக்கும் சென்றடையட்டும்'' என்று கூறியுள்ளார்.
மக்ரோங் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் சம்பவத்தில் இரு ஃபிரெஞ்சு பிரஜைகள் காயமடைந்திருப்பதாகவும், அதில் ஒருவர் மோசமான காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
''ஜெர்மனியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பயங்கரவாதத்தின் எல்லா வடிவங்களுக்கும் எதிராக ஜெர்மனி தொடர்ந்து சண்டையிடும். பிரிட்டன் பக்கம் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்'' என்று செய்திக்குறிப்பு ஒன்றில் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.
''இன்று இரவு லண்டனிலிருந்து மோசமான செய்தி வந்துள்ளது. நிலைமையை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
''லண்டனில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள பிரிட்டன் மக்களுக்கு எங்களுடைய பிரார்த்தனைகளும், உறுதியான ஒற்றுமையும் இன்றும் எப்போதும் இருக்கும்.'' என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ர்ன்புல் தெரிவித்துள்ளார்.
''நியூஸிலாந்தின் எண்ணங்கள் இன்றைய தாக்குதலில் பலியானவர்களுடன் இருக்கும்,'' என்று நியுசிலாந்து பிரதமர் பில் இங்கிலிஷ் கூறியுள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்