You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி அருகே நடுரோட்டில் காரை மடக்கி 4 பெண்கள் மீது பாலியல் பலாத்காரம்
தலைநகர் டெல்லிக்கு அருகில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தவர்களை வழிமறித்த கொள்ளையர்கள், நான்கு பெண்களை துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மாநிலத்தின் மேற்கு பகுதியில் ஜேவர் காவல் நிலைய சரகத்திற்குள் வரும் இடத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயரை துப்பாக்கியால் சுட்டு, பஞ்சர் செய்த மர்ம நபர்கள், அவர்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர்.
காரில் இருந்த பெண்களை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களை தடுத்த அவர்களது உறவினர் மார்பில் துப்பாக்கியால் சுட்டனர் கொள்ளையர்கள்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தால் காயமடைந்தவரை காப்பாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜேவர் என்ற இட்த்தில் இருந்து புலந்த்ஷகர் செல்லும் வழியில், சபெளதா கிராமத்திற்கு அருகில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
"தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தோம், வேறு எந்த வாகனங்களோ, காவல்துறை ரோந்து வாகனங்களோ அந்தப் பகுதியில் இல்லை, என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் கூறுகிறார்.
"கொள்ளைக் கும்பலில் ஐந்து பேர் இருந்தார்கள். ஆனால் அவர்களில் யாரும் எங்களுக்கு தெரிந்தவர்கள் இல்லை. அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி இருந்தது என்று அவர் கூறுகிறார். கொலை செய்யப்பட்டவர் 40 வயதானவர், அவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர்.
புலந்த்ஷகரில் உறவினர் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதால், அதற்கு தேவையான பணத்தை உறவினர்கள் கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை உதவி கண்காணிப்பாளர் லவ் குமார், கூட்டு பாலியல் வல்லுறவு வழக்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கை சவாலாக எடுத்துக் கொண்டு, குற்றவாளிகளை தீவிரவமாக தேடி வருவதாக அவர் தெரிவித்தார். குற்றமிழைத்தவர்கள், விரைவில் பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று காவல்துறை உயரதிகாரி உறுதியளிக்கிறார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்