You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொடரும் மர்ம மரணங்கள்: மு.க.ஸ்டாலின் கேள்வி
ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், கோடநாடு கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்படும் கனகராஜ் ஆகியோரின் மர்ம மரணங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென திமுக செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கோரியிருக்கிறார்.
நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் வசித்துவந்த சுப்பிரமணியன் என்பவர் நேற்று அவரது பண்ணை வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தற்கொலைசெய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இவர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் நண்பர் என்று கூறப்படும் நிலையில், பல்வேறு அரசு கட்டடப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஏழாம் தேதியன்று அமைச்சர் விஜய பாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது சுப்பிரமணியனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டையில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை சுப்பிரமணியனே செய்துவந்தார். இந்த நிலையில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது.
திங்கட்கிழமையன்று அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றில் கேள்வியெழுப்பியுள்ள எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், "அமைச்சர் விஜயபாஸ்கரின் நட்பு அவருக்குக் கிடைத்த பிறகுதான் அரசு ஒப்பந்தங்கள் அவரைத் தேடி அணிவகுத்து வந்திருக்கின்றன" என்று குற்றம் சாட்டினார்.
"அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையில் கட்டடப் பணிகளுக்கான முக்கியமான டெண்டர்களை எல்லாம் இவர்தான் எடுத்தார் என்பதும் வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. "
"மிகப்பெரிய ஊழலுக்கு முக்கிய சாட்சியான இவருடைய மரணத்தை "தற்கொலை" என்று நிச்சயம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
"அதேபோல, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியில் தேடப்பட்டுவந்த கனகராஜ் என்பவர் விபத்தில் மரணமடைந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், "கோடநாடு விவகாரமாக இருந்தாலும் சரி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமான வரித்துறை ரெய்டு விவகாரமாக இருந்தாலும் சரி, இப்படி திடீர் திடீரென "விபத்து" என்றும் "தற்கொலை" என்றும் நிகழும் மரணங்கள் அதிர்ச்சியளிப்பதாக மட்டுமல்ல- மர்மம் நிறைந்தவையாகவும் இருக்கின்றன" என்றார்.
"ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் மரணம்" வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ள ஆதாரங்களுக்கு வலு சேர்க்கும் முக்கிய சாட்சிகளை அழிக்கும் முயற்சியா, "கனகராஜின் மரணம்" கொடநாடு மர்மத்தை காப்பாற்றும் "விபத்தா" என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது" என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இந்த மரணங்களை தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மை தெரியவராது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இந்த விவகாரங்களை விசாரிக்க வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதபழி வராமல் காப்பாற்றிக்கொள்ள பாஜகவுக்கு தெரியும் : குருமூர்த்தி விநீக்கம் செய்ய வேண்டுமென்றும் மு.க. ஸ்டாலின் கோரியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்