அதிகாரத்தை கைப்பற்றப் பயன்படுத்திய சினிமா மீது திராவிடக் கட்சிகள் செலுத்தத் தவறிய தாக்கம் - கட்டுரை

    • எழுதியவர், தியடோர் பாஸ்கரன்
    • பதவி, திரைத்துறை ஆய்வாளர்

தமிழ்நாட்டில் சினிமா-அரசியல் தொடர்பு சுதந்திரப் போராட்டத்தின் போதே ஆரம்பித்து விட்டது.

பராசக்தி

பட மூலாதாரம், Avmproductions

படக்குறிப்பு, திரைப்படத்துறையில் திருப்புமுனை - `பராசக்தி`

சினிமாவின் சகல பரிமாணங்களையும் அரசியலுக்கு முதலில் பயன்படுத்திய காங்கிரஸ் தொடங்கி வைத்த இந்த ஊடாட்டம் திராவிட இயக்க ஆட்சி காலத்தில் உச்சக்கட்டத்தை எட்டியது.

கே.பி.சுந்தரம்பாள், நாகையா போன்ற பல சினிமா நடிகர்கள், காங்கிரஸுக்கு தங்களது ஆதரவைத் தந்ததுடன் நேரிடை அரசியலிலும் ஈடுபட்டனர்.

இவர்களை இணைத்து வழி நடத்தி சென்ற சத்தியமூர்த்தி 1943இல் மறைந்த பின், தலைமையில்லாமல் கலைஞர்கள் தடுமாறிக் கொண்டிருந்த போது. அந்த மாபெரும் சக்தியை அன்றைய தி மு க தலைவர்கள் அண்ணதுரை, கருணநிதி போன்றார் உணர்ந்து பயன்படுத்தி கொண்டார்கள்.

அவர்களும் சினிமா உலகில் நுழைந்து வசனகர்த்தாக்களாக புகழ் பெற்றனர். இயக்குனர்களாக அல்ல.

1967 திராவிடக் கட்சிகளின் ஆட்சி

திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் வந்த `பராசக்தி`,(1952) `வேலைக்காரி` (1949) , `ரங்கோன் ராதா` (1956) போன்ற கருத்தாழம் கொண்ட படங்கள், அவ்வியக்கம் ஆட்சியைக் கைப்பற்றிய பின் வரவில்லை.

சில இயக்க தலைவர்கள் படத்தயாரிப்பளாராக உருவெடுத்த பின்னரும் ஆட்டபாட்டம் நிறைந்த பொழுது போக்கு படங்களையே தந்தனர்.

தி மு க தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின் சினிமாவின் உள்ளடக்கத்தில் மாற்றம் ஒன்றையும் காண முடியவில்லை.

திரைப்படம் பொழுதுபோக்கிற்கான ஒரு உபகரணம் என்ற நோக்கே ஓங்கியிருந்தது.

அதுமட்டுமல்ல. பல நடிகர்கள் திரை மூலம் கிடைத்த தங்களது பிரபல்யத்தை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டனர். பலர் வெற்றியும் அடைந்தனர்.

இந்த காலகட்டத்தில் மின்சார வசதி கிராமப்புறங்களில் பரவிய பின் டூரிங் டாக்கீஸுகள் மூலம் சினிமாவின் வீச்சு தமிழ்நாட்டில் மூலைமுடுக்குகளில் எட்டியது. எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர் போன்ற பல நடிகர்கள், அரசியலில் நேரடியாக ஈடுபட்டு தமிழ்நாட்டில் ''நட்சத்திர அரசியல்வாதிகள்' உருவாக அடித்தளமிட்டனர்.

எம்ஜியார்,சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கருணாநிதி
படக்குறிப்பு, திரையுலகிலிருந்து அரசியலுக்கு.....

இரு சினிமா நட்சத்திரங்கள், அடுத்தடுத்து தமிழக முதல்வர்களாக சில பத்தாண்டு காலங்கள் கோலோச்சிய போதும் தமிழ் சினிமா எந்தவித மேம்பாட்டையும் பதிவு செய்யவில்லை.

இங்கே ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அரசியல் நோக்கங்களுக்காக தயாரிக்கப்படும் சினிமாவிற்கும், அரசியல் சினிமாவிற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. அரசியல் சினிமாவின் உள்ளடக்கத்தில் அரசியல் சித்தாந்தம் அடங்கியிருக்கும். அது அந்த கதையோடு ஊடோடியிருக்கும். அதிலே பாத்திரப்பேச்சு மூலம் பிரசங்கம் செய்ய தேவையில்லை. சினிமாவின் இயல்புகளை நன்கு உணர்ந்து அதை பயன்படுத்துபவர்களால் தான் அரசியல் சினிமாவை உருவாக்க முடியும்.

திராவிட முன்னேற்றக்கழகம் சினிமாவில் ஈடுபாடுகொண்ட பின், பல கலைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்.

எம்.ஜி.ஆர் பெரிய அளவில் தன் பிரபலத்தை தி.மு.க பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார்.

கட்சியின் நிழல் போல செயல்பட்ட அவரது ரசிகர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக ஒரே கருத்துக்களை கொண்டிருந்தனர்.

அதனால்தான் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்த போது அவரை ஒருமுகமாக ஆதரித்தனர்.

ஆனால் சிவாஜி கணேசன் 3000 ரசிகர் மன்றத்துடன் அரசியலில் ஈடுபட்டபோதும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சினிமா நடிகர்கள் அரசியலில் செயல்படுவதும், திரை-அரசியல் ஊடாட்டமும் பல பரிமாணங்களில் இன்றும் தொடர்கின்றது.

சினிமாத்துறையும் தொழிற்சங்க இயக்கமும்

எம்.ஜி.ஆர்
படக்குறிப்பு, திரைப்பட நடிகராயிருந்து முதல்வரான எம்.ஜி.ஆர்

எம் ஜி ஆர் 1977இல் முதலமைச்சராக பதவியேற்று 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார். தமிழ் சினிமா உள்ளடக்கத்தில் இது எந்த விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து 14வது ஆண்டில், 1980இல், தென்னிந்திய திரைத்துறை பேசும்படத்தின் பொன்விழாவை கொண்டாடியபோது, நான்கு மாநிலங்களிலும் மொத்தம் 98 ஸ்டுடியோக்களும் , 2742 தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கிக் கொண்டிருந்தன.

அவைகளில் பெரும்பாலானவை சென்னையில் இருந்தன.

ஆயிரக்கணக்கான ஊழியர் பங்கேற்ற இந்த மாபெரும் துறையில் தொழிலாளர்களுக்கென சங்கத்திற்கான இயக்கம் பல ஆண்டுகளாக உருவாகவில்லை.

மத்திய அரசும் இந்தக் குறைபாட்டை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசும் இந்த பிரச்சனையை அணுகவில்லை.திரைப்படத்தயாரிப்பு ஒரு தொழிலாக அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் சினிமா தொழிலாளர்களில் நிலை பரிதாபமாகவே இருந்தது.

தொழிற்சங்க இயக்கம் திரைப்படத்துறையில் காலம் கழித்து தோன்றியதற்கு முக்கிய காரணம், அரசும் மக்களும் சினிமாவின்பால் காட்டிய உதாசீனப்போக்குத்தான் என உறுதியாக கூறலாம்.

சினிமா எனும் பொழுதுபோக்குச் சாதனத்தின் மேல் நாம் கொண்டிருக்கும் பாரம்பரிய நோக்குதான் இது.

நாடகம் போன்ற பொழுதுபோக்கு கலை சார்ந்தவர்களை கீழ்நிலை மக்களாக பார்க்கும் மனப்பான்மையை ஆசியநாடுகளில் எல்லாவற்றிலுமே காணலாம் .

சாதிக் கட்டமைப்பால், அடுக்கு போலமைந்த சமுதாயமாக இருந்த்தால் இந்தியாவில் இந்த நோக்கு சற்று அழுத்தமாகவே இருந்தது. இன்னொரு காரணம் சினிமா தொழில் மற்ற உற்பத்தித் தொழில்கள் போலல்லாமல் இருப்பது.

பராசக்தி

பட மூலாதாரம், AVMproductions

கல்விப்புலமும் திரையும்

இந்த காலகட்டத்தில், ஆண்டிற்கு நூறு படங்களுக்கு மேல் தயாரிக்கப்பட்டாலும், தமிழ் இலக்கியம் அடைந்திருந்த உன்னத நிலையுடன் ஒப்பிடும்போது, சினிமா அந்த அளவுக்கு வளரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

இலக்கியம், சங்கீதம் தொடர்பாக ஆழமான அறிவு கொண்டவர்கள்கூட, சினிமா பற்றிப் பேசும்போது, எழுதும் போது பாமரத்தனமான கருத்துகளை வெளியிட்டனர்.

நாடகத்திற்கும் சினிமாவிற்கும் உள்ளான அடிப்படை வேறுபாடு பலரால் அறியப்படவில்லை.

கல்விப்புலத்திலிருந்து யாரும் சினிமா எனும் இந்த மாபெரும் கலாச்சார-அரசியல் சக்தியை கண்டு கொள்ளவில்லை.

இன்றளவும் சினிமா துறையில் ஆழமான ஆய்வுகள் பல்கலைக்கழகங்களிலிருந்து வராமல், தனியார் ஆய்வு மையங்களிலிருந்துதான் வருகின்றன.

1998ஆம் ஆண்டு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) தமிழ் சினிமா பற்றிய ஒரு முக்கியமான கருத்தரங்கை நடத்தியது. அந்நிறுவனத்தில் பணி புரிந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எம் ஜி ஆரின் அரசியல் வாழ்வைப்பற்றி The Image Trap: M G Ramachandran in FIlm and Politics என்ற சீரிய நூலென்றை எழுதினார். (இந்நூல் தமிழில் பிம்பச்சிறை என்ற தலைப்பில் வெளிவந்திருக்கின்றது.)

எம்ஜியார்,கருணாநிதி,அண்ணா
படக்குறிப்பு, திரையுலகுடன் பின்னிப் பிணைந்த திராவிட இயக்கம்

சினிமா ரசனை

எண்ணிக்கையில் நிறைய படங்கள் வெளி வந்திருந்தாலும், பன்னாட்டளவில் தமிழ் சினிமா எத்தகைய கவனிப்பையும் பெறவில்லையே? ஏன்?

படைப்பாக்கமுள்ள பொழுதுபோக்குச் சாதனமாக இருக்க வேண்டிய சினிமா, சமூகத்தையே ஆட்டிப்படைக்கும் அரசியல் அசுர சக்தியாக மாறி நம் அன்றாட வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் ஊடுருவியுள்ளது. ஏன்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான்.

சினிமா ரசனை வளரவில்லை.

நல்ல படம் வந்தால் நம்மால் அதை அடையாளம் கண்டுகொள்ளக்கூட முடிவதில்லை.

சினிமா ரசனை வளர எந்த விதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் ஓவியம், நிழற்படம், திரைப்படம் போன்ற கட்புல ஊடகங்கள் தொடர்பான எந்தவிதப் புரிதலையும் பாடத்திட்டம் தருவதில்லை.

தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகத்திலும் இசைத்துறை இருந்தாலும் சினிமா சார்ந்த துறை இல்லை.

ஆகவே காட்சிப் பிம்பங்களை எதிர்கொள்ளும் திறன் மாணவர்களிடையே வளர்க்கப்படுவதில்லை.

அதே போல பத்திரிக்கைகளிலும் சினிமா விமரிசனம் வளரவில்லை.

இதையும் மீறித்தான் அத்திப்பூத்தாற்போல `அவள் அப்படித்தான்` (1976) `அக்கிரகாரத்தில் கழுதை` (1977). போன்ற படைப்புகள் வெளி வந்தன.

ஜான் ஆபிரகாம் இயக்கிய இந்தப்படம் அகில இந்திய ரீதியில் பரிசு பெற்ற போது, இதை அப்போதிருந்த ஒரு அமைச்சர் 'கழுதைப்படம்' என்று கிண்டல் செய்தார்.

இந்த ஐம்பது ஆண்டுகளில் பெரும்பகுதியில் எம்.ஜி ஆர், சிவாஜி கணேசன் இருவரும் நட்சத்திரக்கோலோச்சி வந்த காலம். இரு நடிகர்களுக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் தோன்றி சினிமாவுலகில் பெரும் தாக்கத்தை தோற்றுவித்தன. எம் ஜி ஆர் தனிக் கட்சி தொடங்கியபோது ரசிகர் மன்றங்கள் அரசியல் அலகுகள் போல் இயங்கின.அந்த பத்தாண்டுகளில் அழகியலிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தமிழ்ச்சினிமா ஒரு தேக்க நிலையிலிருந்தது.

இந்த ஐம்பது ஆண்டுகளில் கட்சி அரசியலின் தாக்கம், அவர்களுக்குள் நடந்த பூசல், மோதல் இவை சினிமாவின் வளர்ச்சியை பாதித்தது.

பாலுமகேந்திரா
படக்குறிப்பு, நட்சத்திர ஆளுமைகளை சாராத இயக்குநர்கள் அபூர்வம் ( படத்தில் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா)

நட்சத்திர ஆளுமை காரணமாக, புதிய தலைமுறை இயக்குனர்களோ, நடிகர்களோ தோன்றுவது சிரமமாக இருந்தது.

பாலு மகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்ற சிலர் நட்சத்திரங்களை சாராமல் இயங்கினாலும் தேக்க நிலை தொடர்ந்தது.

முதன் முதலாக ஒரு தமிழ்ப்படம் - `மறுபக்கம்` (1991) - நாட்டின் சிறந்த படம் என்று ஜனாதிபதி விருது பெற்ற போது அதை இங்கு கண்டு கவனிப்பாரில்லை.

அதே போல் லெனின் தனது `ஊருக்கு நூறு பேர்` (2001) படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது பெற்றபோதும் அதை யாரும் இங்கு கண்டு கொள்ளவில்லை.

தமிழ்த்திரைக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்த ஜெயகாந்தன் இந்த காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகை கடுமையாக விமர்சித்தார்.

( கட்டுரையாளர் திரைத்துறை ஆய்வாளர்)

தொடர்புடைய கட்டுரைகள்:

இவற்றையும் பார்க்கலாம் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்