You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை
உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில், ஓராண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவருக்கு பாகிஸ்தானில் உள்ள ராணுவ நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. அதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பதற்றமான பகுதியான பலூசிஸ்தானில், உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறி கடந்த ஆண்டு பலூசிஸ்தானில் கைது செய்யப்பட்டதாக குல்பூஷன் ஜாதவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவுடன், பாகிஸ்தான் வெளியிட்ட காணொளியில், தான் உளவு பார்த்ததை அவர் ஒப்புக்கொண்டதாகத் கூறுவதைப் போல் இருந்தது.
அவர் இந்திய பிரஜை என்று கூறியுள்ள இந்திய அரசு, உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், இரானில் இருந்து கடத்தப்பட்டார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
பலூசிஸ்தானில் பிரிவினைவாதக் கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் பின்னணியில் இருப்பது இந்தியா என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
ஜாதவ், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகக் கூறுகிறது.
"பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்ட உளவாளிக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது", என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை வெளியிட்ட ஓர் அறி்க்கையில் தெரிவித்துள்ளார்.
ஜாதவ் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது அறிவிக்கப்படவில்லை.
கேலிக்கூத்து
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, கேலிக்கூத்தானது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
"ஜாதவ், கடந்த ஆண்டு இரானிலிருந்து கடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானில் இருப்பது தொடர்பாக எந்த நேரத்திலும் வெளிப்படையாக விளக்கமளிக்கப்படவில்லை", என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜாதவுடன் ராஜாங்க ரீதியான தொடர்புகளுக்காக, 13 முறை கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் பாகிஸ்தான் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்றும், அவர் மீது விசாரணை நடத்தப்படும் தகவலும் எந்த நேரத்திலும் வெளியிடப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டால், அதை திட்டமிடப்பட்ட படுகொலையாகவே இந்தியா கருதும் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும், உளவாளிகளை தங்கள் நாட்டுக்குள் அனுப்புவதாக அடிக்கடி பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
பாகிஸ்தான்: ஆண்டுக்கு 1200 சிறுநீரகங்கள் விற்பனை:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்