You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம் சாடல்
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, தேர்தல் ஆணையத்தின் தோல்வியே எனறு மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து ராம் கூறுகையில், '' இடைத்தேர்தலை ரத்து செய்வது நல்ல விஷயமல்ல. ஆனால் , வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
''ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் வரை தரப்படுவதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்த வண்ணம் இருந்தது. அப்படி இருக்கும் போது, இது தேர்தல் ஆணையத்தின் செயலற்ற மற்றும் உதவியற்ற நிலையை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது. இடைத்தேர்தல் ரத்து நடவடிக்கை தேர்தல் ஆணையத்தின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது '' என்று ராம் மேலும் குறிப்பிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் முறைகேடு நடைபெறுவதாக செய்திகள் வந்த நிலையில், தேர்தல் ஆணையம் எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, பதிலளித்த என். ராம், ''இந்த முறைகேடுகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். எப்போது பணம் தருகிறார்கள், யார் தருகிறார்கள் என்பதை கண்டறிந்து இருக்க வேண்டும். வருமான வரி சோதனை நடைபெற்றதால்தான் சில தகவல்கள் கிடைத்து தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
''நாடு முழுவதும் அல்லது ஒரு மாநிலம் முழுவதும் தேர்தலை நடத்துவது சவாலான காரியம். ஆனால், ஒரு மாநிலத்தில் நடக்கும் ஓர் இடைத்தேர்தலை முறையாக நடத்த முடியாவிட்டால், தேர்தல் ஆணையம் எதற்காக உள்ளது? என்று என். ராம் வினவினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொது தேர்தலில், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் பெருமளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அங்கு தேர்தல் நடந்த போது பிரதான கட்சிகளின் சார்பாக அதே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது குறித்து ராம் குறிப்பிடுகையில், ''ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் நடத்தப்படும் போது புகார் கூறப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது என்பது மிகவும் கடினமான செயலாகும். புகார்களை நிரூபிப்பது மிகவும் சிரமமான செயலாகும். அதனால், இப்பிரச்சனைக்கு வேட்பாளர் தகுதி நீக்கம் மூலம் தீர்வு காண இயலாது'' என்று மேலும் தெரிவித்தார்.
மேலும் ராம் கூறுகையில், ''அதே வேளையில் அரசியல் கட்சியினர் அரசியல் பணம் தருகிறார்கள் என்று பொது மக்களும் அதனை வாங்கிக் கொண்டால், எந்தத் தீர்வும் ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கு இது குறித்த தெளிவினை ஏற்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஏரளாமான தேர்தல் பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது இந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்ற வினாவுக்கு பதிலளித்த என். ராம், ''இதற்கு ஜனநாயகமும் , தேர்தல் முறையும் தான் பொறுப்பாகும்'' என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், '' கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக மோதி அரசு தெரிவித்தது. தற்போது 200 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது கறுப்புப் பணம் தானே?'' என்று வினவினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்