You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பொம்மை சடலத்தை வைத்து தேர்தல் பிரசாரம்
சென்னை ராதாகிருஷ்ணன் (ஆர்.கே.) நகர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் சடலத்தைப் போன்ற பொம்மையை வைத்து ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிற கட்சிகளின் எதிர்ப்பையடுத்து இந்தப் பிரசாரம் கைவிடப்பட்டது.
ஜெயலலிதாவின் தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி அவரது மறைவுக்குப் பிறகு காலியான நிலையில், அந்தத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இன்று அ.தி.மு.கவின் புரட்சித் தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்தவர்கள் (முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணி) விநோதமான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அந்தத் தொகுதியில் உள்ள பாரதி நகரில் இன்று மாலையில் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தலைமையில் அழகு தமிழ்செல்வி, அந்தத் தொகுதியில் ஓ.பி.எஸ். அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாகப் பிரசாரத்தைத் துவங்கினார். அப்போது, நின்று கொண்டிருந்த ஜீப்பின் முன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சடலம் போன்ற ஒரு பொம்மை வைக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைந்த பிறகு ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்த பொம்மை மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்ததைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த பொம்மையைக் காண்பித்து பேச ஆரம்பித்த அழகு தமிழ்ச்செல்வி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவரது தோழி சசிகலா மீது குற்றம் சுமத்தினார்.
ஜெயலலிதாவின் சடலம் போன்ற பொம்மையைப் பார்க்க பெரும் கூட்டமும் அங்கு திரண்டது. ஆனால், இருபது நிமிடங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொம்மையைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறியதையடுத்து அந்த பொம்மை அகற்றப்பட்டது.
மேலும் சில செய்திகள்:
ஜெயலலிதா சமாதியில் சசிகலா மும்முறை சபதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்