இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தது சரியா?
இலங்கையில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் பயனாளிகளுக்கு வழங்கும் விழாவிற்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்கு செல்லவிருந்த ரஜினிகாந்த் தனது பயணத்தை ரத்துசெய்துள்ளதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் வாழ்வுரிமைக் கட்சி, ம.தி.மு.க. மற்றும் பாமக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி தெரிவித்திருந்தை அந்த கட்சிகள் வரவேற்றுள்ளன.
ஆனால், இலங்கையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம், ரஜினியின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று பிபிசி தமிழிளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ''இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு வழங்கும் விழாவில் பங்கேற்க இவர் ஏன் மறுக்கவேண்டும். இந்த முறை தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு எதிர்காலத்தில் தனது பயணத்தைத் தடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது முறையல்ல,'' என்றார்.
தனது திரையுலக அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளவும், புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தங்களது படங்கள் விற்பனையில் ஏற்படும் பாதிப்பதை தடுக்கவே ரஜினி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தனபாலசிங்கம் குற்றம் சாட்டுகின்றார்.
''சமீபத்தில் வைரமுத்து இலங்கைக்கு வந்திருந்தார். பல திரையுலகினர் வந்துள்ளனர். இங்கு ரஜினி ஒரு நிகழ்வில் பங்குகொள்வதால் அடுத்த நாள், இலங்கை அரசு, தமிழர்களின் விவகாரத்தில் அனுகூலமான நடவடிக்கை எடுத்துவிட்டதாக உலகில் யாரும் ஏமாந்துபோக மாட்டார்கள்'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஞானி, `எப்போதும் போல ரஜினியின் அரசியல் முடிவுகளில் குழப்பம் இருபப்பத்தைத்தான் இந்தச் செயல் காட்டுகிறது' என்றார்.
''தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ளவதற்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ரஜினி தனது நிலையை முன்னிறுத்துவதற்குப் பதிலாக சில காரணங்களை அடுக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை,'' என்றார்.
ரஜினி தனது கடிதத்தில் குறிப்பிட்டது போல மீனவர் பிரச்சனை , போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து இலங்கை அரசிடம் பேசியிருந்தால் அதைப் பல மக்களும் வரவேற்றிருப்பார்கள் என்றார் ஞானி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












