உலகில் வாழ்வதற்கான செலவு குறைவான மலிவான முதல் 10 இடங்களில் பெங்களூரு, டெல்லி மற்றும் சென்னை :அறிக்கை

வாழ்வதற்கான செலவினங்கள் குறித்த 2017 ஆம் ஆண்டின் அறிக்கையில், உலக அளவில் செலவு அதிகமாகும் நகரங்களில் முதல் இடத்தை சிங்கப்பூர் நான்காவது முறையாக தக்க வைத்துக்கொண்டுள்ளது.

அந்த நகரங்களில் வாழும் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், செலவு மலிவான நகரங்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில், இந்தியாவின் நான்கு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பெங்களூரு மூன்றாவது இடத்திலும், சென்னை, மும்பை மற்றும் டெல்லி முறையே ஆறாவது, ஏழாவது மற்றும் பத்தாவது இடத்திலும் இருப்பதாக பொருளாதார புலனாய்வு பிரிவின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியத் துணைக்கண்டம் கட்டமைப்புரீதியாக மலிவாக இருந்தபோதிலும், குடியிருப்பு (வீட்டு வாடகை) தொடர்பான நிலையற்ற தன்மை தொடர்ந்து அதிகரித்து வருவது, முக்கிய காரணியாக மாறியிருப்பதாக, "உலக அளவில் வாழ்வதற்கான செலவு" குறித்த 2017 ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது. மேலும், இந்தக் காரணி, இந்திய நகரங்களுக்கானது மட்டுமானதல்ல, (எல்லா நகரங்களுக்கும் பொதுவானது) என்று இந்த அறிக்கை கூறுகிறது.

கஜகஸ்தானின் மிகப்பெரிய மாநகரமான அல்மாடி, மலிவான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் நைஜீரியாவின் லாகோஸ் தொடர, பாகிஸ்தானின் கராச்சி நகரம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக, சிங்கப்பூர் செலவு அதிகமாகும் நகரம் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஹாங்காங்கும், ஜூரிச்சும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வட அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தான் அதிக செலவு பிடிக்கும் முதல் பத்து நகரங்களில் இடம் பிடித்திருக்கும் ஒரே அமெரிக்க நகரம்.

வாழ்வதற்கான செலவினங்கள் குறித்த அறிக்கை ஆண்டுக்கு இரு முறை வெளியிடப்படுகிறது. உணவு, பானம், உடை, வீட்டு வாடகை, போக்குவரத்து, கட்டணங்கள், பொழுதுபோக்கு செலவுகள் உட்பட 160 பொருட்கள் மற்றும் சேவைகளின் 400 தனிப்பட்ட விலைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்