ரஜினி நடிக்கும் 2.0 படப்பிடிப்பில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; ஷங்கர் வருத்தம்

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது, நாளிதழின் புகைப்படக் கலைஞர்கள் இருவர் படப்பிடிப்புக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். இயக்குனர் ஷங்கர் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஷங்கர்
படக்குறிப்பு, வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஷங்கர்

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 2.0 என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவிலிருந்து திருவல்லிக்கேணி பகுதியின் சில பகுதிகளில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இன்று காலையில் திருவல்லிக்கேணியில் உள்ள ஈஸ்வரதாஸ் தெருவில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதற்காக அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும், நாளிதழ் ஒன்றின் புகைப்படக் கலைஞர்கள் அப்பகுதி வழியாகச் செல்ல முயன்றபோது படப்பிடிப்புக் குழுவினருக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் புகைப்படக் கலைஞர்கள் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து பல்வேறு ஊடகங்களின் செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் ஒன்று திரண்டு ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து உதவி இயக்குநர்கள் உட்பட மூவர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் மூன்றரை மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குனர் ஷங்கர், தனக்குத் தெரியாமல் இம்மாதிரி நடந்துவிட்டதாகவும் பொதுமக்களுக்கு எப்போதும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றே தான் தன் குழுவினருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறினார்.

நடந்த சம்பவத்திற்கு வருத்தம் கோருகிறேன்: ஷங்கர்
படக்குறிப்பு, நடந்த சம்பவத்திற்கு வருத்தம் கோருகிறேன்: ஷங்கர்

சம்பவம் நடந்தபோது தான் அந்த இடத்தில் இல்லையென்றும் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் கோருவதாகவும் ஷங்கர் கூறினார்.

இந்தப் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்