மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு; ஒருவர் கைது

தில்லியில் மரணமடைந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தில்லியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல், தற்போது அவரது சொந்த ஊரான அரிசி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந் நிலையில் இன்று காலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அங்கு வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.

இதற்குப் பிறகு பொன் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்காக தயாரான போது, அவர் மீது அங்கிருந்த ஒருவர் தனது காலணியைக் கழற்றி வீசினார். இதையடுத்து செருப்பை வீசியவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையின் அவர் இந்திய மக்கள் முன்னணி என்ற அமைப்பின் மாநில அமைப்பாளர் சாலமன் எனத் தெரிய வந்தது. அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்