You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீருக்கு பாதிப்பா? பேராசிரியர் இளங்கோ பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திங்கள்கிழமை விளக்கமளித்துள்ள நிலையில், இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் பிரிவின் தலைவரான பேராசிரியர் இளங்கோ பிபிசி தமிழோசையிடம் உரையாடினார்.
ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், நிலத்தடி நீர் பெரும் பாதிப்புள்ளாகும் என்று கூறப்படுவது குறித்து பேராசிரியர் இளங்கோ கூறுகையில், ''பொதுவாக இயற்கை வாயு மற்றும் எண்ணெய் ஆகியவை, பூமிக்கு பல மீட்டர் ஆழத்தில் தான் கிடைக்கும். இவை உருவாகுவதற்கு 'கேப் ராக்' எனப்படும் இறுகிய களிமண் படிவம் இருக்க வேண்டும் '' என்று தெரிவித்தார்.
''மேற்கூறிய 'கேப் ராக்' படிவத்தின் மேல் தான் நிலத்தடி நீர் இருக்கும். தமிழகத்தில் எங்கும் 2000 மீட்டருக்கு மேல் இயற்கை வாயு , மற்றும் எண்ணெய் ஆகியவை கிடைக்காது'' என்று தெரிவித்த பேராசிரியர் இளங்கோ, இந்த களிமண் படிவம் எண்ணெய் மற்றும் நிலத்தடி நீர் இருக்கும் 2 படிவங்களையும் பிரிக்கிறது என்று தெரிவித்தார்.
உலகெங்கும் இதே நடைமுறைதான்
மேலும் அவர் கூறுகையில், ''அதனால், எண்ணெய் மற்றும் நிலத்தடி நீர் இருக்கும் படிவங்களுக்கு எந்த தொடர்புமில்லை. இரண்டாயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ள எண்ணெய்யை துளையிட்டு எடுக்கிறோம். உலகெங்கும் இந்த முறையை பின்பற்றி தான் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆனால், இங்கு மட்டும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறுவது சரியல்ல'' என்று பேராசிரியர் இளங்கோ கூறினார்.
விவசாயம் பாதிக்கப்படுமா?
ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், விவசாயம் பாதிக்கப்படுமா என்று கேட்டதற்கு பதிலளித்த பேராசிரியர் இளங்கோ, ''ஒரு எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு ஒரு சிறிய இடத்தை கையகப்படுத்த வேண்டும். உதாரணமாக 150 x 150 மீட்டர் அளவுக்கு, அந்த இடத்தில் மட்டும் விவசாயம் செய்ய இயலாது. ஆனால், அந்த கிணறு தோண்டி முடித்த பின்னர் அந்தளவு இடம் கூட தேவைப்படாது'' என்று தெரிவித்தார்.
மேற்கூறிய அளவு இடத்தில் கால்வாசி அளவை மட்டுமே அவர்கள் நிரந்தரமாக தங்கள் பணிக்காக பயன்படுத்துவர். அதனை தவிர மற்ற இடங்களில் விவசாய பணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காதுஎன்று பேராசிரியர் இளங்கோ கூறினார்.
''எண்ணெய் எடுப்பதற்கு கிணறு தோண்டப்பட்டு, அங்கு எண்ணெய் இல்லையென கண்டறியப்பட்டால், அந்த இடத்தை மூடிவிட்டு மீண்டும் விவசாயம் செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது'' என்று அவர் மேலும் கூறினார்.
எண்ணெய் எடுக்கும் முயற்சியில் அதிக நீர் பயன்பாடு ஏன்?
''எண்ணெய் வரத்து குறைந்து இருந்தால், பாறைகளுக்குள் அதிக அழுத்தம் தந்து மணலோடு நீரை பாய்ச்சி அடிக்கும் முறையில் அதிக நீர் தேவைப்படுவது உண்மை தான். இவ்வாறு செய்தால் அதிகளவு எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறை தேவையில்லை என்று கூறலாம். ஆனால், அதே சமயத்தில் எண்ணெய் எடுக்கும் முயற்சியை முற்றிலும் புறக்கணிப்பது தவறு'' என்று பேராசிரியர் இளங்கோ எடுத்துரைத்தார்.
முன்னதாக, தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திங்கள்கிழமையன்று விளக்கமளித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்