You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதம்: திமுக உண்ணாவிரதம்
சட்டமன்றத்தில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற விதம், ஜனநாயக விரோதமானது என்று கூறி திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டம், தென்னூர் உழவர் சந்தையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு அதற்கு தலைமை வகிக்கிறார்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பிற ஆதரவு அமைப்புகளும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டன.
சென்னையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
போராட்டம் குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆளும் அதிமுகவினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அவை மரபுகளுக்கு மாறாக திட்டமிட்டு, காவல்துறை உயர் அதிகாரிகளை சட்டமன்றத்திற்குள் வரவழைத்து, பிரதான எதிர் கட்சியான திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தி கூண்டோடு வெளியேற்றிவிட்டு, சட்டப்பேரவை விதிகளுக்கு புறம்பாக ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியள்ளது. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறுவதாக திமுக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்