You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செல்லா நோட்டு நெருக்கடியில் பிறந்த குழந்தை உ.பி பிரசார மையத்தில்
நரேந்திர மோதியின் செல்லா நோட்டு அறிவிப்பை அடுத்து ஏற்பட்ட பண நெருக்கடியில், வங்கிகளின் முன் குவிந்த கியூக்களில் ஒன்றில் நின்ற பெண் பிரசவித்த குழந்தை ஒன்று இப்போது உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின் மையமாக மாறியுள்ளது.
இரண்டரை மாதமான அக்குழந்தைக்கு அதிக நேரம் தூக்கம்தான் . ஆனால் பசியால் விழிக்கும்போதெல்லாம் , தன்னை யாராவது தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அக்குழந்தை விரும்புகிறது.
கஷாஞ்சி நாத் என்ற அக்குழந்தைக்கு இரண்டு மாதங்கள் 11 நாட்கள்தான் வயதாகிறது.
உபி முதல்வர் அகிலேஷ் யாதவின் தேர்தல் பிரசாரத்தில் ஒரு அசாதாரணமான நட்சத்திரம் இக்குழந்தை. .
கஷாஞ்சி என்றால் "பொருளாளர்" என்று பொருள்படுகிறது. தாயான சர்வெஷா தேவி வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, வரிசையில் நின்றிருந்தபோது பிறந்த குழந்தைதான் இவர்.
சர்தார் பூரிலுள்ள வீட்டில் வைத்து அவரை சந்தித்த பிபிசி செய்தியாளரிடம் ஜிஞ்ச்காக் நகரின் வங்கிக்கு சென்று, பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது மகப்பேறு வலி ஏற்பட்டு கஷாஞ்சி பிறந்ததாக சர்வெஷா தேவி தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய 10 வயது மகள் பிரித்தியுடன் 35 வயதான இந்த தாய், 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வங்கிக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வரிசையில் பணம் எடுப்பதற்காக காத்து நின்றிருந்திருக்கிறார்.
இந்தியாவில் மிகவும் ஏழையாக, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாக இருக்கின்ற பைகா பழங்குடியினத்தை சேர்ந்தது தான் இவரது குடும்பம்.
எலும்புருக்கி நோயினால் துன்புற்ற அவருடைய கணவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார், பாம்பாட்டியாக பிழைப்பு நடத்தி வந்தவர் அவர்.
அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான், மிகவும் ஏழைகளாக இருப்போருக்கு அரசு உதவியோடு வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில், சர்வெஷா தேவி தகுதி பெற்றிருந்தார்.
அதனை முன்னிட்டு வங்கியில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுத்துவர அன்று அவர் சென்றிருக்கிறார்.
பெண்களுக்கு என்று தனிப்பட்ட வரிசை இருந்தபோதும், அவருக்கு முன்னால் டஜன் கணக்கானோரும், பின்னால் டஜன் கணக்கானோரும் நின்றிருந்திருக்கின்றனர்.
மதியமானபோது, பிரசவ வலியை அவர் உணர தொடங்கியிருக்கிறார்.
உடனடியாக தன்னுடைய மருமகளுக்கு பிரசவ வலி வந்துவிட்டது என்றும், பணத்தை உடனடியாக கொடுத்துவிட்டால், விரைவாக வீட்டுக்குபோய்விடுவோம் என்றும் சாஷி தேவி வங்கி அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளார்.
ஆனால், அதற்கு அவர்கள் பல சாக்குப்போக்குகளை சொல்லியுள்ளனர். அப்போது பிரசவ நேரம் நெருக்கிவிட்டதை அறிந்த சாஷி தேவி, தன்னுடைய மருமகளை அருகிலுள்ள மாடிப்படிகளுக்கு அடியில் ஒதுங்க செய்ய, 10 வயது மகள் ஒரு சால்வையை மறைக்கும் திரையாக மாற்றி பிடித்துகொள்ள, பிறந்த குழந்தை தான் கஷாஞ்சி நாத்.
அதன் பின்னர், நிலைமையின் கனத்தை புரிந்து கொண்ட வங்கி அதிகாரிகள், தாயின் கைரேகை பதிவை எடுத்துகொண்டு, பணத்தை அவருடைய மாமியாரிடம் வழங்கியுள்ளனர்.
உடனடியாக, அவசர மருத்துவ ஊர்தியை அழைக்க முடியாமல் போகவே, காவல்துறையிடம் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தாயும் சேயும், அருகிலுள்ள சிகிச்சை மையத்தில் பரிசோதனை செய்து எவ்வித சிக்கலும் இல்லை என்று உறுதிப்படுத்திய பின்னர் காவல்துறையின் வாகனத்திலேயே அவரை வீட்டில் சேர்த்துள்ளனர்.
வங்கியில் வைத்து பிறந்த குழந்தையாதலால், கஷாஞ்சி நாத் என்று பெயரிட கிராமப் பேரவை பரிந்துரைத்திருக்கிறது.
ஆனால், அவர்கள் இன்னும் என்ன பெயரிட்டு அழைப்பது என்று முடிவு செய்வில்லை என்று சர்வெஷா தேவி கூறியிருக்கிறார்,
கஷாஞ்சி நாத் தன்னுடைய குடும்பத்திற்கு அதிஷ்டத்தை கொண்டு வந்திருப்பதாகவே சொல்ல வேண்டும். அந்த குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆவதற்குள் உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ரூ. 2 லட்சம் வழங்கியிருக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையின் விளைவாக பிறந்த குழந்தை என்று வர்ணிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படுவது, அரசியல் லாபத்தோடு செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், தங்களின் குழந்தை உலக அளவில் புகழ்பெற்று விட்டது என்று சர்வெஷி தேவியின் குடும்பம் மகிழ்ச்சியடைகிறது.
கஷாஞ்சி நாத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டு கொண்டதாகவும், அதற்கு தான் உறுதிமொழி அளித்திருப்பதாகவும் சர்வெஷி தேவி தெரிவித்திருக்கிறார்.
கஷாஞ்சி நாத் பள்ளிக்கு செல்ல வேண்டும். நல்ல கல்வி பெற வேண்டும். நாங்கள் இத்தகைய கனவுகளோடு இருக்கின்றோம். அதன் பின்னர் அவனுடைய தலையெழுத்தை பொறுத்து அமையட்டும்" என்கிறார் சர்வெஷா தேவி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்