You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தவறுதலாக இந்தியாவிற்குள் நுழைந்த சீனர் 50 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்
இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சீன நாட்டை சேர்ந்த ஒருவர் இறுதியாக தன்னுடைய குடும்பத்தாருடன் ஒன்றிணைந்துள்ளார்.
ராணுவ நில அளவையாளராக இருந்த வாங் சி, 1963 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் தற்செயலாக நுழைந்துவிட்டதாக கூறியிருந்தார்.
மேலும், நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தேவையான எந்த அவணங்களும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதுபற்றி பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.
பின்னர், அவரை சந்தித்த சீன தூதரக அதிகாரிகள், வாங் சியை மீண்டும் சீனாவிற்கு அழைத்து செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
வாங் சி பற்றி விரிவாக படிக்க : இந்திய எல்லைக்குள் வழிதவறிய சீனரின் அரை நூற்றாண்டு சோகம்
பெய்ஜிங்கிற்கு விமானம் மூலம் சென்றடைந்த வாங் சியை அவரது உறவினர்கள் வரவேற்றனர்.
அவர் தற்போது தான் பிறந்த நகரான ஸியான்யங்கிற்கு விமானம் மூலம் செல்ல உள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு தில்லியிலிருந்து தன்னுடைய மகனுடன் வாங் சி சீனா புறப்பட்டார்.
இந்தியாவிலிருந்து வாங் சி வெளியேறுவதற்கான ஆவணம் ஒன்றை வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கியது.
புறப்படுவதற்கு முன்னதாக, வாங் சியையும் அவரது குடும்பத்தாரையும் ஒரு பெரிய வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்குவதற்காக சீன அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
வாங் சியின் குடும்பத்தார் அவருடன் வெளியேற விரும்பும் பட்சத்தில், அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்திய அரசின் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன.
ஆனால், இந்திய பிரஜையான வாங் சியின் மனைவி அவருடன் சீனா செல்லவில்லை.
வாங் சி மீண்டும் இந்தியா வருவதற்கான திட்டங்களை வைத்துள்ளாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இந்தியாவில் இருந்த போது அவருக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. 2013ல் அவருக்கு சீன பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
சீன ராணுவத்திற்காக சாலைகளை அமைக்கும் பணியில் தான் ஈடுபட்டதாக வாங் சி கூறியுள்ளார்.
கடந்த 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய எல்லைப்பகுதிக்குள் தவறுதலாக நுழைந்துவிட்டார்.
''சுற்றிப்பார்ப்பதற்காக என்னுடைய முகாமிலிருந்து வெளியே வந்தேன். ஆனால், பாதையை மறந்துவிட்டேன். செஞ்சிலுவை வாகனம் ஒன்றை கண்டு அவர்களிடம் உதவி கோரினேன். அவர்கள் என்னை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர்'' என்கிறார் வாங் சி.
அதன்பிறகு, அடுத்த 7 ஆண்டுகளை பல சிறைச்சாலைகளில் கழித்தார் வாங் சி.
1969ல் வாங் சியை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மத்திய பிரதேசத்தில் டிரோடி என்ற தொலைத்தூர கிராமம் ஒன்றுக்கு வாங் சியை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அன்றிலிருந்து நாட்டைவிட்டு வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்