'நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது': நடிகர்கள் சத்யராஜ் மற்றும் மாதவனுக்கு கமல்ஹாசன் அழைப்பு

அண்மைய நாட்களில் தனது ட்விட்டர் வலைதளத்தில் பல முக்கிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் மாதவன் ஆகியோருக்கு விடுத்த தனித்தனி ட்விட்டர் செய்திகளில், 'நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது , உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சத்யராஜின் பெயரை குறிப்பிட்டு விடுத்த ஒரு ட்விட்டர் செய்தியில், 'சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப் பேசும் நாம,இந்த நேரத்துல ஒரு dubsmashஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர்கள், பிறகு தான் நடிகர்கள்' என்று கூறியுள்ளார்.

இதே போல் நடிகர் மாதவனுக்கு அனுப்பியுள்ள ஒரு ட்விட்டர் செய்தியில், ' மாதவன், தமிழகத்தில் தற்போதுள்ள நெருக்கடி நிலை குறித்து பேசவும். மோசமான அரசியலுக்கு எதிராக உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் எதிர்மறை கருத்துடையவராக இருந்தாலும், அதனை பதிவு செய்யுங்கள்' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் செய்தியில், ''பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடுத்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா?'' என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

''தமிழகத்தை தனி நாடாக உடைத்து விடாதீர்கள்'' என்று கேட்டுக் கொண்ட கமல்ஹாசன், அகிம்சை வழியில் நடக்கும் ஒரு உள்நாட்டு போரில் ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழகத்துக்காக போராடும் என்று என்னால் உறுதி கூற முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும், நேற்று (செவ்வாய்க்கிழமை) கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு ட்விட்டர் செய்தியில், சில வருடங்களுக்கு முன்னர் வந்த பிப்ரவரி 7-ஆம் தேதி மக்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று ஒரு கலைஞனுக்கு ஆதரவாக நிற்பார்கள் என்று தனக்கு புரிய வைத்ததாக குறிப்பிட்டார்.

நேற்றிரவு வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் செய்தியில், அனைவரும் உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்னதாக அவர்கள் எழுந்து விடுவார்கள் என பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்