அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: அரசியல் மாற்றத்துக்கு அச்சாரமா?

    • எழுதியவர், தங்கவேல் அப்பாச்சி
    • பதவி, பிபிசி தமிழ்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் மூன்றாவது எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இது. பத்து நாட்கள் இடைவெளிக்குள் இரண்டாவது கூட்டம்.

ஜனவரி 27-ஆம் தேதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதற்குள் ஏன் இன்னொரு கூட்டம் என்ற கேள்வி எழலாம். வரும் 24-ஆம் தேதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய முதல் பிறந்த நாள் விழா என்பதால் அதை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால், அதையும் தாண்டி அரசியல் முக்கியத்துவங்கள் நிறைய இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள், அதன் இறுதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைச் சமாளிக்க வேண்டிய சவால் புதிய அரசுக்கு ஏற்பட்டது.

அதில், அரசுக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. அதே நேரத்தில், வன்முறையைக் கையாண்ட விதத்தால், கடுமையான கண்டனங்களும் ஏற்பட்டன. மிக விரைவாகச் செயல்பட்டு, டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து அவசரச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வதுக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால், அந்த நடவடிக்கைகள் அனைத்தும் சசிகலாவின் ஆலோசனையின்பேரில் மேற்கொள்ளப்பட்டவை என்று சசிகலா ஆதரவாளர் தரப்பில் கூறப்படுகிறது.

அப்படியானால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கையும் சசிகலா அனுமதியோடுதான் நடத்தப்பட்டதா, இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் தானே என்று சசிகலா ஒப்புக்கொள்வாரா என்று கேள்வி எழுப்புகிறது அவரது தலைமை குறித்துக் கேள்வி எழுப்பும் தரப்பு.

நண்பனா, பகைவனா?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, உடனடியாக வெற்றிடத்தை நிரப்ப, பன்னீர் செல்வம் முதல்வராக்கப்பட்டார். ஆனால், அவரைத் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது ஆபத்தானது என்பது சசிகலா ஆதரவாளர்களின் கருத்தாக இருப்பதாகப் பேசப்படுகிறது.

ஏற்கெனவே, பாரதீய ஜனதாவின் மறைமுக ஆதரவு பன்னீர் செல்வத்துக்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பன்னீர் செல்வத்தைப் பாராட்டிப் பேசினார். ஐந்து ஆண்டுகள் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

இது, சசிகலா ஆதரவாளர்கள் தரப்பில் ஒருவிதக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. பன்னீர் செல்வத்தைப் பொருத்தவரை, அவர் எப்போதுமே தாற்காலிக ஏற்பாடுதான் என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.

ஜெயலலிதா மறைந்து சில நாட்களிலேயே, கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சசிகலா, மிக விரைவாக ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றால்தான் முழுமையான கட்டுப்பாடும் தன்னிடம் இருக்கும் என்று அவரது தரப்பு நம்புவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கடந்த முறை நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின்போது, சசிகலாவும், அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனனும் மட்டும்தான் மேடையில் அமர்ந்திருந்தார்கள். முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூட எம்.எல்.ஏ.க்கள் வரிசையில்தான் அமர்ந்திருந்தார்.

அவருக்கு எந்த இடத்தைக் கொடுக்க வேண்டும் என்பது சசிகலாவுக்குத் தெரியும் என்பதற்கான ஆதாரமே இதுதான் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

அதற்கு இன்னொரு சான்று, வெள்ளிக்கிழமை அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த சசிகலா வந்தபோது, பன்னீர் செல்வத்தைவிட, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், கட்சியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில் கூட, தனக்கு ஆதரவானவர்களுக்கு சசிகலா பதவி கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, செங்கோட்டையன், சைதை துரைசாமி, கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் கொடுக்கப்பட்டது. அதாவது, ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்டவர்களுக்குக் கூட இப்போது முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்து வரும் அமைச்சரவை மாற்றத்தில், இவர்களில் சிலர் அமைச்சர்களாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகார மையங்கள்!

அதற்கு அடுத்தபடியாக, ஜெயலலிதாவின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக இருந்தவர்களை வெளியேற்றும் பணி துவங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. 2014-ஆம் ஆண்டு, தலைமைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, அரசின் சிறப்பு ஆலோசகராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் ஷீலா பாலகிருஷ்ணன். ஜெயலலிதா ஆட்சியிலும், அவர் உடல் நலமின்றி இருந்த நேரத்திலும், ஏறத்தாழ ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக செயல்படுத்தியவர் அவர்தான் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஷீலா பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுபற்றி எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

பல அதிகார மையங்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி, தனது நிலையைப் பலவீனப்படுத்திவிடும் என்பதால்தான் சசிகலா இத்தகைய காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இவர்களால் தனது அதிகாரத்துக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்ச உணர்வின் காரணமாகவே சசிகலா இவர்களை ஓரங்கட்ட முயற்சிப்பதாக இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

மேலும், அதிகாரம் கையில் இருந்தால்தான் மக்களைக் கவர முடியும். பன்னீர் செல்வத்தைத் தொடர அனுமதிப்பது, தனது அரசியல் வாழ்க்கைக்கு தானே குழிதோண்டுவதைப் போல ஆகிவிடும் என்று சசிகலா கருத வாய்ப்புள்ளது. அதனால்தான், எவ்வளவு விரைவில், அத்தனை அதிகாரங்களையும் தன் வசப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் தான் அரசியலில் காலூன்ற முடியும் என்று நம்புகிறார் என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதுமட்டுமன்றி, அரசியலில் அதிகாரம் மிக்க சக்தியாக, ஜெயலலிதாவைப் போல் தாக்குப் பிடிக்க வேண்டுமானால், மத்தியில் இருக்கும் கட்சியையோ, மாநிலத்தில் உள்ள துதிபாடும் கட்சிகளையோ நம்பியிருக்காமல், மக்களின் செல்வாக்கைப் பெறுவது மட்டுமே சரியான வழி என்ற ஜெயலலிதாவின் யுத்திதான் சரியாக இருக்கும் என சசிகலா உறுதியாக நம்புகிறார். அதற்கு அதிகாரம் வேண்டும். அதனால், அடுத்து வரும் சில தினங்கள், சசிகலா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முதல்வர் நாற்காலியை நோக்கி முன்னேறிச் செல்வதற்கான நகர்வாகவே இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இப்போது இருப்பதைப் போல, அதிமுக எப்போதும் நிசப்தமாக, சலசலப்பு இல்லாமல் இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி, எதிர்க்கட்சியினரிடம் மட்டுமன்றி, ஆளுங்கட்சியினரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்