You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு தடைக்கும், நாட்டுக் காளைகள் குறைவதற்கும் தொடர்பு இல்லை - பீட்டா
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து பீட்டா அமைப்பு சார்பாக அரசுடன் தொடர்பு கொள்ளும் அதிகாரி நிகுன்ச் ஷர்மா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.
தமிழகத்தில் தன்னெழுச்சியாக திரண்டுள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்கார்கள் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். உங்கள் கருத்து?
வாயில்லா ஜீவன்களுக்காக நாங்கள் பேசுவது அவ்வளவு பெரிய குற்றமா? பீட்டா (PETA ) மற்றும் AWBI (Animal Welfare Board of India) சேர்த்துத்தான் இந்த வழக்கை தொடுத்தது. 2014ல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை வரவில்லை. மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பிரபலமாக இருந்த காளைகளை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. காளை சண்டையை முழுவதுமாக தடை செய்யப்பட்டுவிட்டது.
தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நீங்கள் குறிப்பிட்ட எல்லா கலாசார விளையாட்டுகளும் தற்போது தடை செய்யப்பட்டு விட்டதா?
தடை உள்ள போதும் சட்டத்திற்கு புறம்பாக சில இடங்களில் இந்த விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஜல்லிக்கட்டு மற்றும் காளை சண்டைகள் தடை செய்யப்பட்டுவிட்டன.
இந்திய ராணுவத்தில் குதிரை மற்றும் ஒட்டகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய கோவில்களில் யானைகள் உள்ளன. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?
தென் இந்தியாவில் உள்ள கோவில்களில் சபரிமலை அல்லது எந்த வித கோவில்களிலும் யானைகளை பயன்படுத்த கூடாது என்று கோரி நாங்கள் வழக்கை நடத்தி வருகிறோம். தற்போது அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இந்திய ராணுவத்தில் மோப்ப நாய்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்தலாம்.
இந்திய ராணுவத்தில் குதிரை மற்றும் ஒட்டகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக பீட்டா குரல் எழுப்புமா? இது தொடர்பாக வழக்கு தொடருமா என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சிலர் கேட்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன ?
பல விவகாரங்கள் உள்ளன. முக்கியமான விஷயங்களை தேர்ந்தெடுத்து நாங்கள் வேலை செய்து வருகிறோம். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இருந்து ஒட்டகங்கள் ராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் அழுத்தம் கொடுப்போம். நிச்சயமாக எங்களுக்கு தேவையான உதவிகள் கிடைத்தால், இது தொடர்பான வழக்கை தொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்று எங்களது சட்ட ஆலோசனை குழுவுடன் தொடர்பு கொண்டு முடிவு எடுப்போம்.
விலங்குகளுக்கு துன்பம் ஏற்படும் எந்த இடமாக இருந்தாலும் அவற்றுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். இந்திய ராணுவத்தில் விலங்குகள் துன்பப்படுவது தெரியவந்தால் என்று அதற்காக நாங்கள் குரல் கொடுப்போம்.
ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்ந்தால் நாட்டு ரக காளைகள் அழிந்து விடும் என்று தெரிவிக்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்து.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அதிக பால் உற்பத்தி வேண்டும் என்பதற்காக கலப்பின பசுக்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துகின்றனர் அதனால் நாட்டு ரக காளை மாடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது என 1997-2003 வரையிலான கால்நடை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
2006ல் நாங்கள் நடத்திய கருத்தரங்கில் பேசிய தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தை சேர்ந்தவர்கள் விவசாயிகளின் உழவு செய்யும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தான் நாட்டு ரக காளை மாடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று தெரிவித்தனர்.
இது ஜல்லிக்கட்டு மீதான தடை வருவதற்கு முன்பே நடந்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்கும், நாட்டு'ரக காளைகள் அழிவதற்கு தொடர்பு இல்லை. வெறும் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடக்காமல் போனால், அது எப்படி பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும்? இந்த வாதத்தை வைப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை.
சமீபத்தில் ஒரு கட்டுரையில் பீட்டா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜொஷிப்பூரா ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது பெண்களுக்கு எதிரான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் போராட்டக்களத்தில் பல பெண்கள் குவிந்துள்ளனர். பெண்கள் தான் காளைகளை வளர்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டக்கார்கள் காளைகள் தங்களது பிள்ளைகள், குடும்ப நண்பர்கள் என்கிறார்கள். பிறகு ஏன் ஜல்லிக்கட்டை தடை செய்தால் காளைகள் ஏன் அடிமாடாக அனுப்படும் என்கிறார்கள். தங்களது பிள்ளையை ஏன் மற்றவர்கள் ஜல்லிக்கட்டில் துரத்தவும், ரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்தவும் அனுமதிக்கிறார்கள். தங்களது குழந்தைகளுக்கு மது கொடுக்கவும் பிற சிரமங்களை ஏற்படுத்த அனுமதிப்பார்களா? தமிழகத்தில் சட்ட வரையரைக்கு உட்பட்டு இதை நடத்திய போதும் பல காளைகள் மற்றும் நபர்கள் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் சட்ட வரையறைக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட போது ஏதாவது வரையறைகள் மீறப்பட்டதா? இது தொடர்பான படங்கள், காணொளி அல்லது பிற ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா?
கர்நாடகாவில் ஜனவரி 2017ல் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் இருவர் இறந்தனர். இதே போட்டியில் ஜனவரி 17ம் தேதி தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் ஒருவர் இறந்துள்ளார்.ஜனவரி 15ம் தேதி ஆந்திராவில் இரண்டு காளைகள் இருந்துள்ளன. 2008- 2014 வரை 5,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் 43 நபர்கள் ஜல்லிக்கட்டால் இறந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண ;பிபிசி தமிழ் யு டியூப்