You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு போராட்டம் - வெளியிலிருந்து திரண்ட ஆதரவும், உள்ளூர் மனநிலையும்
- எழுதியவர், முரளீதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, செய்தியாளர்
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நடத்தும் போராட்டங்களை தொடர்ந்து ஆதரிப்பதில் உள்ளூர் மக்களுக்கு பல சங்கடங்கள் இருக்கின்றன. இருந்தபோதும் தற்போதைய கைது நடவடிக்கையை அவர்கள் எதிர்த்துள்ளனர்.
விலங்குகள் நல அமைப்புகளின் தீவிர முயற்சியின் காரணமாக காளை மாடுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இடம்பெற்றது. இதையடுத்து, இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பொங்கல் திருநாளை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடையை விதித்துள்ளது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை ஒட்டி, ஜல்லிக்கட்டு நடத்தப்படும் ஊர்களில் இது தொடர்பாக போராட்டங்கள் நடப்பதும் வழக்கமாக இருந்து வந்தது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நடைபெற்றுவந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு ஏதும் வெளியாகாத நிலையில், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சமூக வலைதளங்களின் மூலமாக ஒன்றிணைந்து சென்னையில் போராட்டம் ஒன்றை ஆர்வலர்கள் நடத்தினர். இதற்குப் பிறகு மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தினர். தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மதுரை வரை இருசக்கர வாகனப் பயணத்தை மேற்கொண்டார். மேலும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தினத்தில் அனைவரும் அங்கு குவிய வேண்டும் என சமூக வலைதளங்களின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே பெரும் எண்ணிக்கையில் அலங்காநல்லூரில் இளைஞர்கள் குவிய ஆரம்பித்தனர். ஜல்லிக்கட்டு நடக்கும் தினமான திங்கட்கிழமை வாடிவாசலிலிருந்து சிறிது தூரத்தில் குழுமிய அவர்கள் வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிட வேண்டுமெனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகு, சிறு சிறு குழுக்களாக மதுரை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர், வாடி வாசல் பகுதிக்குச் செல்வதிலிருந்து தடுத்தனர்.
இதற்குப் பிறகு, வாடிவாசலுக்கு அருகில் குவிந்திருந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், உள்ளூர் விழாக்குழுவைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டம் குறித்து பெரிதாக உற்சாகத்தை வெளிப்படுத்தவில்லை.
மாலை ஐந்து மணியளவில் உள்ளூர்விழாக் குழுவின் சார்பில் வைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளில், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டது.
"அலங்காநல்லூர் மிக அமைதியான ஊர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்பதற்காக வந்த உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம். ஆனால், இந்தப் போராட்டம் வேறு வடிவங்களை எடுக்கக்கூடாது. தயவுசெய்து கலைந்துசெல்லுங்கள்" என்று அந்தக் கோரிக்கையில் கூறப்பட்டது.
அப்போதும் அவர்கள் வெளியேறாத நிலையில், அப்பகுதியின் தாசில்தார் ஒலிபெருக்கியின் மூலம் கோரிக்கை விடுத்தார். பிறகு மீண்டும் அலங்காநல்லூரில் வசிக்கும் பொதுமக்களின் சார்பில் இதே கோரிக்கை திரும்பத் திரும்ப விடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, மிகப்பெரிய ஒலிபெருக்கிகளில் சினிமா பாடல்களும் ஜல்லிக்கட்டு ஆதரவு பாடல்களும் பெரும் சத்தத்துடன் ஒலிபரப்பட்டன.
இருந்தபோதும் அடுத்த நாள், காலையில் காவல்துறை போராட்டக்காரர்களைக் கைதுசெய்யும்வரை உள்ளூரில் இருந்து, உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இருந்தபோதும், போராட்டக்காரர்களோடு முழுமையாக அவர்கள் இணைந்து செயல்படவில்லை.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தங்களது கையை மீறிப்போவதை உள்ளூர்க்காரர்கள் விரும்பவில்லை என்பதும், அலங்காநல்லூர் கலவரப்பகுதியைப் போல மாறுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதும் தெளிவாக தெரிந்தது.
தனிப்பட்ட முறையில் பேசிய விழாக்குழுவைச் சேர்ந்தவர்கள், "ஜல்லிக்கட்டு நடத்தும் தினம் முடிந்துவிட்ட நிலையில், எப்படி மாடுகளை அவிழ்க்க முடியும்? அவர்கள் தொடர்ந்து எங்கள் ஊரில் போராட்டம் நடத்துவது சரியல்ல" என்று கூறினர்.
இருந்த போதும் செவ்வாய்க்கிழமை காலையன்று போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டவுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென அலங்காநல்லூரைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் வரை இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் உடனுக்குடன் ஒளிபரப்பாகிவந்த நிலையில், மதியத்திற்குப் பிறகு இந்தச் செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. பிறகு இரவிலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக இந்தச் செய்திகள் சில தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன.
இதற்கிடையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்களுக்கு தேசிய அளவில் ஒளிபரப்பாகும் ஊடகங்கள் போதுமான அளவில் கவனம் கொடுக்கவில்லையென அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் பலர் திரண்டு ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்