You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு போதிய ஆதாரமில்லை : பெங்களூரு ஆணையர்
தென்னிந்திய நகரமான பெங்களூருவில் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்றதாக சொல்லப்படும் பெருமளவிலான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்க இதுவரை ஒரு பெண் கூட முன்வரவில்லை என்றும், அந்த சம்பவங்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் அந்நகர காவல் ஆணையர் பிரவீன் சூத் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு ஆணையர் பிரவீன் சூத், ''31 ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்றதாக சொல்லப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கேள்விப்பட்டு, இதுபற்றி ஒரே ஒரு பெண் முன்வந்து புகார் கொடுத்தால் கூட ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் பாலியல் வன்கொடுமையின் கீழ் புகார் ஒன்றை பதிய நாங்கள் தயங்க மாட்டோம் என்று பொதுமக்களிடம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம். இந்த அறிவிப்பை தொடர்ந்து எங்களை அணுகிய பெண் ஒருவர், தன்னிடம். தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை செல்போனில் படம்பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அதனை, ஆராய்ந்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது ஊர்ஜிதமானது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை கூட நாங்கள் பெறவில்லை. எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு வழக்கு பதிந்துள்ளோம். அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் நிச்சயம் தண்டனை பெறுவார்கள்''என்றார்.
ஊடகங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
மாநிலம் முழுக்க பெண்கள் மீது பரவலாக நடைபெற்றதாக சொல்லப்படும் பாலியல் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஆணையர், நிறைய எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக ஊடகங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும், போலிஸ் நடத்திய தடியடியில் 30 நொடிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது அதனை பாலியல் வன்கொடுமை என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த விஷயத்தில் ஒரு பெண் கூட புகார் கொடுக்க முன்வரவில்லை என்றார் பிரவீன் சூத்.
2 ஆம் தேதி தான் பொறுப்பேற்றேன்
பெங்களூரு ஆணையராக தான் 2 ஆம் தேதிதான் பொறுப்பேற்றதாகவும், கூடுதல் போலிசார் நியமிக்கப்பட்டிருந்தால் கைகலப்பு ஏற்பட்டிருப்பதை தடுத்திருக்கலாம் என்றும் கூறிய பிரவீன் சூத், ஆனால் இந்த காரணத்தை வைத்து அதிகளவிலான பாலியல் வன்கொடுமை குற்றம் நடத்தது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.
மகாத்மா காந்தி சாலையிலிருந்த 70 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தததாகவும், அப்போது போலிசார் நடத்திய சிறிய தடியடியை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போல சித்தரிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து 1 ஆம் தேதியோ அதற்கு மறுநாள் 2 ஆம் தேதியோ யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி காரணமாக இந்த விவகாரம் வேகமாக பரவியது என்றும் பிரவீன் சூத் தெரிவித்துள்ளார்.