You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தைப் பார்க்க குவியும் தொண்டர்கள்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் அ.தி.மு.க தொண்டர்கள் அந்த வீட்டைப் பார்த்துச் செல்கின்றனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி இரவு காலமானார். அதற்குப் பிறகு அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அவரது சமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, புதன்கிழமை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடற்கரையில் மொட்டையடித்து அஞ்சலி
சிலர், கடற்கரையிலேயே மொட்டையடித்தும் அஞ்சலி செலுத்துகின்றனர். பெரும் எண்ணிக்கையில் ஜெயலலிதா சமாதியில் தொண்டர்கள் குவிவதால், அங்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.
அங்கு வரும் தொண்டர்கள் அங்கிருந்து நேராக போயஸ் கார்டன் பகுதியில் அமைந்திருக்கும் ஜெயலலிதாவின் வீட்டிற்கும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
81, போயஸ் கார்டன் என்ற முகவரியில் வேதா நிலையம் என்று பெயரில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லம், 24,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவால் அந்த இடம் வாங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வீடு கட்டப்பட்டது.
அனைவருக்கும் அனுமதி
புதன்கிழமையன்று, வீட்டின் வாசலுக்கு வெளியே மூடப்பட்ட கதவுகளை மட்டும் பார்க்க அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமையில் இருந்து 20 - 20 பேராக உள்ளே அழைத்துச்செல்லப்பட்டு, போர்டிகோ வரை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு இன்று, வரிசையாக பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். ஆனால், வீட்டினுள் செல்லும் கதவுகள் மூடப்பட்டே இருக்கின்றன. பார்வையாளர்கள் சிறிது தூரத்திற்கு முன்பே தங்கள் காலணிகளை கழற்றிவிடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதேபோல, வீட்டின் முன்பாகவோ, வீட்டிற்குள்ளோ புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
தங்களை ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிற்குள்ளும் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சிலர் கோரினர். போர்டிகோவில் வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் படத்திற்கும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா குறித்த பிற செய்திகளுக்கு