You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தளங்கள் வேறு, இலக்கு ஒன்று: சமூக உரிமைக்காகப் போராடும் 2 பெண் `போராளிகள்'
- எழுதியவர், தங்கவேல் அப்பாச்சி
- பதவி, பிபிசி தமிழ்
பிபிசி-யின் 100 பெண்கள் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை - உரிமைப் போராளிகளைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். இருவருமே, சமுதாயத்துக்காகப் போராடுபவர்கள். ஆனால், அந்த இருவரின் போராட்டக் களங்கள் வேறுபட்டவை. அவர்கள் நிற்கும் தளங்கள் மாறுபட்டவை. ஏந்தியிருக்கும் ஆயுதங்கள் வித்தியாசமானவை. அவர்கள் தங்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்த அலசல்.
நாம் பார்க்க இருக்கும் பெண்களில் ஒருவர், அரசியல்வாதி. பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்.எல்.ஏ.க்களில் ஒரே பெண். எஸ். விஜயதாரணி.
குடும்பமே காங்கிரஸ் பின்னணி கொண்டது. வழக்கறிஞர் பட்டமும் பெற்ற விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,
பெற்றோர் இருவருமே மருத்துவர்களாக இருந்தாலும், அவரது தாயார் பகவதி, 1977-ஆம் ஆண்டிலேயே மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
அவரது குடும்பத்தில் மூன்று குழந்தைகள். மூவரும் பெண்கள். 9 வயதாக இருக்கும்போதே விஜயதாரணியின் தந்தை இறந்துவிட்டார். தாயார்தான், சவால்களைக் கடந்து மூன்று பெண் குழந்தைகளையும் ஆளாக்கினார்.
சென்னை சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் இணைந்த விஜயதாரணி, 25 வயது வரை இளைஞர் காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்டார். அதன்பிறகு பிரதான காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார்.
1999-ஆம் ஆண்டு சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவராக விஜயதாரணியை நியமித்தார். தேசிய அளவிலும் மகளிர் காங்கிரஸ், பிரதான கட்சி நடவடிக்கைகள் என பல பொறுப்புக்கள் அவருக்கு வழங்கப்பட்டன.
2011-ஆம் ஆண்டு முதன் முதலாக விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
"நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவோடு இருந்த எனக்கு, 23 ஆண்டு கட்சிக்காக உழைத்த பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. வருத்தமாக இருந்தாலும் வாய்ப்பை இழக்கக் கூடாது என ஏற்றுக் கொண்டேன். மூன்று முறை கம்யூனிஸ்ட் கட்சி வசம் இருந்த அந்தத் தொகுதியில் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காட்டினேன்'' என்று பிபிசியிடம் தெரிவித்தார் விஜயதாரணி.
2015-ஆம் ஆண்டு மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
"2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வந்தபோது, எனக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்கக்கூடாது என்பதற்காக, பல்வேறு நபர்கள், பல விதமான தடைகளை ஏற்படுத்தினார்கள். அதையும் மீறி எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த முறை, கடந்த தேர்தலை விட அதிகமாக, அதாவது 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காட்டினேன். மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிமுக, எனது தொகுதியில் மட்டும்தான் டெபாசிட்டை இழந்தது என்பதை நான் சாதனையாகக் கருதுகிறேன்'' என்று பெருமைப்பட்டார் விஜயதாரணி.
"ஆனால், அந்தப் பெருமையை அடைவதற்குள், எனது கட்சிக்காரர்கள் எனக்குக் கொடுத்த மன உளைச்சல்கள், சகிக்க முடியாதவை. தேர்தல் பிரசாரத்தின்போது என்னை எவ்வளவு முடியுமோ அந்த வகைகளில் எல்லாம் கேவலப்படுத்தினார்கள். ஒரு பெண் என்று கூட பார்க்காமல், மிக மிக மோசமான வார்த்தைகளால் என்னை சித்தரித்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு எனது கணவரையும் இழந்த மன வேதனையில் இருந்த என் மனதை அவர்கள் மீண்டும் மீண்டும் காயப்படுத்தினார்கள். இருந்தாலும் என் மன உறுதியும், ஆதரவாளர்களின் அன்பும், அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு எனக்கு உதவியாக இருந்தன" என்றார்.
சோனியா, ராகுல் ஊக்கம்
"அதைவிட, எனது தலைவி சோனியா காந்தி ஒரு முறை என்னிடம், `நீ போராளி. எளிதில் தளர்ந்துவிடாதே. போராடு' என்று சொன்னது என் காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அத்துடன், எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தியும், எனது உண்மையான உழைப்பையும் நேர்மையையும் அங்கீகரிப்பவர். அவரது ஆதரவும் எனக்கு பலமாக இருக்கிறது" என்கிறார் விஜயதாரணி.
மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் கூட, மாநில காங்கிரஸ் தலைவர்களால் பல அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். உண்மைகள் தலைமைக்குத் தெரியும் என்றாலும் கூட, ஒரு சில நிர்பந்தங்களால் கட்சி சில நேரம் பொறுமை காக்க வேண்டிய நிலை இருந்த உண்மை நிலவரத்தை உணர்ந்தவராகவும் அவர் இருந்தார்.
"எவ்வளவு பெரிய அரசியல் பின்புலம், அனுபவம் இருந்தாலும், ஒரு பெண் என்று வந்துவிட்டால், இன்னும் பல இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது கசப்பான உண்மை. ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூகத்தில், குறிப்பாக அரசியலில் இந்த சவால்கள் பலமடங்கு அதிகம். எந்த ஒரு நிலையிலாவது நாம் சோர்ந்துபோய், விலகி நின்றுவிடுவோம் என்று எதிர்பார்ப்பவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்ட சவாலை நாம் எதிர்கொள்ளப் பழகிவிட்டால் படிப்படியாக வெற்றிகளைப் பெற முடியும். அப்போது நம்மை எதிர்ப்பவர்கள் விலகிவிடுவார்கள் என்பது எனது ஆழமான நம்பிக்கை" என்கிறார் விஜயதாரணி.
மூத்த வழக்கறிஞராகவும் உள்ள அவர், நாடாளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற தனது இலக்கை இன்னும் கைவிட்டுவிடவில்லை. "சோதனை என்ற வாசற்படியை மிதிக்காமல் சாதனைக் கோட்டைக்குள் நுழைய முடியாது. மனதில் உறுதி வேண்டும் என்ற பாரதியின் வரிகள், எந்த நேரமும் நமக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்கிறார் ஒளிபடைத்த கண்களுடன் விஜயதாரணி.
அவரைப் போன்றே, இன்னொரு உரிமைப் போராளியைச் சந்திக்க சென்னையில் இருந்து மதுரைக்குப் பயணமானோம்.
மதுரை நகரில் கே.புதூர் பகுதியில் உள்ள சிறிய தெருவில் சென்று விசாரித்தோம். அந்தப் பெண்ணின் பெயரைச் சொன்னதும், ஒரு சிறுவன் குறுகலான சந்து வழியாக நம்மை அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பெண், நம்மை கைகூப்பி வரவேற்றார்.
நந்தினி
சமூகத்துக்காகப் போராடும் ஓர் இளம் பெண். எந்த ஆரவாரமும் இல்லாமல், சாந்தமான முகத்துடன் நம்மை வரவேற்றார் நந்தினி ஆனந்தன். தமிழகம், சமீப ஆண்டுகளாக சந்தித்துக் கொண்டிருக்கும் அவர், குறைந்தபட்ச, அடிப்படை வசதிகள் கொண்ட தனது வீட்டுக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.
சிறிய வீடாக இருந்தாலும், உரிமைக்குக் குரல் கொடுக்கும் பதாகைகளும், துண்டுப்பிரசுரங்களும் பாதி வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
சட்டக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவியாக, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு நடத்தும் மதுபானக் கடைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார் நந்தினி. 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மதுரை வைகை ஆற்றில், பொங்கல் வைத்து மது அரக்கன் ஒழியட்டும் என தனது போராட்டத்தைத் துவக்கினார்.
அப்போது முதல், காவல் துறையினராலும் ஆட்சியாளர்களாலும் அவர் சந்தித்து வரும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
"தமிழ்நாட்டில், சுமார் ஒரு கோடி பேர் கல்லீரல் பாதிப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குடியால் ஆண்மையிழப்பு ஏற்பட்டு, பெண்கள் தவறான பாதையில் செல்ல வழிவகுக்கிறது. சாதாரணமாக, ஒரு பள்ளியில் 15 முதல் 20 மாணவ, மாணவிகள், குடியால் தந்தையை இழந்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, அடித்தட்டு மக்கள் இதில் அதிகம்", என்கிறார் நந்தினி.
"இந்திய குற்றவியல் சட்டம் 328-ஆவது பிரிவின்படி, உடல் நலனைக் கெடுக்கக் கூடிய, போதை தரக்கூடி, மதிமயக்கம் தரக்கூடிய பொருட்களை தனி நபர் கொடுத்தால் 10 ஆண்டுகள் தண்டனை கொடுக்க முடியும். அப்படியானால், அரசாங்கம் மட்டும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எப்படி செயல்பட முடியும். அரசாங்கம் டாஸ்மாக் நடத்துவதும் இந்த வகையில் சட்டவிரோதம்தான்" என்று வாதிடுகிறார் சட்டம் படித்த நந்தினி,
துவக்கத்தில், சக மாணவ, மாணவிகள் தன்னுடைய போராட்டத்துக்கு ஆதரவாக துணை நின்றார்கள். ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் மூலமாக, அந்த மாணவர்களின் பெற்றோர் மிரட்டப்பட்டதால், அவர்களது நேரடி ஆதரவு நின்றுபோனது. ஆனால், அவர்களின் தார்மீக ஆதரவு எப்போதும் இருக்கிறது என்கிறார் நந்தினி.
அரசு மதுக்கடைகளை மூடக்கோரி தனது தந்தை ஆனந்தனுடன் திடீரென பொது இடத்தில் போராட்டத்தில் அமர்ந்துவிடுவார் நந்தினி. மற்றவர்களைப் பொறுத்தவரை, கூட்டம் சேர்த்து போராட்டம் நடத்துவார்கள். ஆனால், நந்தினியைப் பொருத்தவரை, அவர் போராடத் துவங்கிய பிறகுதான் கூட்டம் வரும். பொதுமக்கள் கூட்டம் வருகிறதோ இல்லையோ, போலீசாரின் கூட்டம் முதலில் வந்துவிடும், அவரை அப்புறப்படுத்துவதற்காக.
சமூக வலைத்தளங்கள் பிரசாரக் களமாகப் பயன்படும் இந்தக் கால கட்டத்தில், நந்தினியும் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினார். 2015 முதல் அவரது சமூக வலைத்தளக் கணக்கையும் செயல்படாமல் முடக்கிவிட்டதாக புகார் கூறுகிறார். தற்போது, நட்புக்களின் சமூக வலைத்தளங்கள்தான் அவரது போராட்டக் களத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஊடகங்கள்.
அரசு மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதால், வாடகை வீட்டில் குடியிருப்பதற்குக் கூட பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருப்பதாகச் சொன்னார் நந்தினி. வீட்டு உரிமையாளரை மிரட்டி, எங்களை காலி செய்ய வைப்பார்கள் என காவல்துறை மீது புகார் கூறினார். தற்போதிருக்கும் வீட்டில் கூட அப்படிப்பட்ட நிர்பந்தம் ஏற்படுவதாகக் கூறினார்.
"திடீரென போலீசார் எங்கள் வீட்டு முன் வந்து அமர்ந்துவிடுவார்கள். நாங்கள் எங்கும் செல்ல முடியாது. பின்தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். முதலில் எங்களை மிரட்டிய அவர்கள், பின்னர் அடிக்கவே தொடங்கிவிட்டார்கள். சமீபத்தில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் மதுக்கடைக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்தபோதும் ரத்தம் சொட்டச் சொட்ட போலீசார் தன்னை அடித்ததாக ஆதங்கப்பட்டார் நந்தினி.
2013-ஆம் ஆண்டு, ஏழு நாட்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
"குடிகாரக் கணவர்களைக் கொன்றுவிட்டு சிறைக்கு வந்த பல பெண்களை அங்கு சந்தித்தேன். அவர்களது குழந்தைகள் தெருவில் நிற்கிறார்கள். அவர்களின் வேதனைகள், எனது போராட்ட எண்ணத்தை மேலும் வலுவடையச் செய்தது" என்றார் நந்தினி.
இதுவரை, 63 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் நந்தினி. அவரது தந்தை ஆனந்தன் 67 முறையும், சட்டம் படிக்கும் சகோதரி மூன்று முறையும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 51 வயதான ஆனந்தன், சிவில் என்ஜினியராக இருந்தார். சமுதாயப் பணிக்காக, 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டார். கிடைக்கும் ஓய்வூதியத்தில், பாதித் தொகை குடும்பத்துக்கு, மீதித் தொகை சமூகப் போராட்டத்துக்காக.
நந்தினிக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அவரை முடக்கிப் போடும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 2015-ம் ஆண்டு சட்டப்படிப் படிப்பை முடித்த நந்தினியால், முறைப்படி வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியவில்லை. காரணம், கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் அவ்வாறு பதிவு செய்ய முடியாது என்கிறார் நந்தினி. அந்த வழக்குகள் எப்போது முடியும், தான் எப்போது வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியும் என்பது அவருக்குத் தெரியாது.
24 வயதான அந்த இளம் பெண்ணின் கண்களில், தன் எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்கள் தெரியவில்லை, சமுதாயத்தைப் பற்றிய கவலைகள்தான் தெரிந்தன.
சராசரி பெண்களைப் போல தானும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை, வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு இல்லை. ஆனால், தனது போராட்டக் களத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்ற வேட்கை மட்டுமே தெரிகிறது.
குடும்பத்தாரைத் தவிர, தனது போராட்டத்துக்கு பின்புலம் யாரும் இல்லை என்ற வருத்தம் நந்தினிக்கு இல்லை.
பின்புலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், போராட்டக் களத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு, தளராத மனமும், ஓயாத போர்க்குணமும் மட்டுமே உந்து சக்தி என்பதை உணர்த்திக் கொண்டிருப்பவர்கள், விஜயதாரணியும், நந்தினியும்!