You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுஷ்மா ஸ்வராஜின் உதவியால் திருமணத்தில் முடிந்த இந்தியா - பாகிஸ்தான் காதல் கதை
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மணப்பெண்ணிற்கு விசா கிடைக்க உதவியதால், இந்திய - பாகிஸ்தான்காதல் கதை திருமணத்தில் முடிந்துள்ளது.
வட இந்தியாவின் ஜோத்பூரைச் சேர்ந்த நரேஷ் திவானி என்பவர், தனது பாகிஸ்தானிய மணப்பெண்ணான பிரியா பச்சானியின் விசா தாமதமாவதால் அது குறித்து தனக்கு உதவுமாறு சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டு ட்வீட் செய்திருந்தார்.
திங்களன்று (7.11.16) நடைபெறும் திருமணத்திற்கு பச்சானியின் குடும்பத்தைச் சேர்ந்த 35 உறுப்பினர்களும் வருவார்கள் என உறுதியளித்திருந்தார் சுஷ்மா.
அந்த இரண்டு குடும்பங்களும் சுஷ்மா ஸ்வாரஜின் நடவடிக்கை இருநாட்டிற்குமான உறவில் உள்ள பதற்றத்தை குறைக்கும் என நம்பியதாக தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் மத்தியில் பதற்றம் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில் தகுந்த நேரத்தில் தங்களுக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜிற்கு மணமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியை பிரிக்கும் நடைமுறையில் உள்ள எல்லையில், பதற்றங்களை அதிகரிப்பதாக இருநாடுகளும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியிருந்தனர்.
"கடைசியில் அன்பு ஜெயித்துவிடும். இரண்டு நாடுகளிலும் அன்பு பரவிக்கிடக்கிறது. ஆகையால்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்." என்று மணப்பெண்ணின் தந்தை கிரிதர்லால் பச்சானி பிபிசி உருது சேவையிடம் தெரிவித்துள்ளார்.
விசா தாமதமானதால் பதற்றமான சில வாரங்களுக்கு பிறகு, தற்போது நிம்மதியடைந்திருப்பதாக மணமகனின் தந்தை தெரிவித்துள்ளார்.
மணமகன் நேரடியாக சுஷ்மாவிடம் உதவி கோரியதால் இந்த பிரச்சனை முடிந்துள்ளதாக தெரிகிறது.