You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரசாயனம் ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டு விபத்து: 'செர்னோபிள்' அனுபவம் என்று கூறும் உள்ளூர் மக்கள்
- எழுதியவர், பெர்ண்ட் டெபியூஸ்மான் ஜூனியர்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் கிழக்கு பாலஸ்தீனம் என்ற ஊரில் வசிக்கும் ஜாண் மற்றும் லிசா ஹாம்னர் ஆகியோர் பிப்ரவரி 3 அன்று இறவு 8.55 மணிக்கு, தங்கள் வாழ்நாளில் எதிர்கொள்ளாத அசாதாரண சூழலை எதிர்கொண்டனர்.
அந்த நாளில்தான் ரசாயனப் பொருள் ஏற்றிவந்த ரயில், அவர்களின் குப்பை சேகரிக்கும் வணிகம் நடைபெறும் பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் தடம் புரண்டது.
தங்களது தொழிலை வெறும் 5 வாடிக்கையாளர்களுடன் தொடங்கிய அவர்கள் கடந்த 18 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டு 7,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களாக வளர்த்தனர்.
"இந்த சம்பவம் எங்கள் வாழ்க்கையையே முற்றிலும் அழித்துவிட்டது" என தனது வணிக இடத்தின் வாகன நிறுத்தத்தை பார்த்து கண்ணீருடன் கூறினார் லிசா ஹாம்னர். தடம் புரண்ட ரயிலில் இருந்து வெளியேறிய ரசாயனங்கள் மற்றும் கந்தகத்தின் துர்நாற்றம் அப்பகுதியில் கடுமையாக வீசுகிறது.
"இங்கிருந்து வெளியேறிவிடலாம் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். நாங்கள் வேறு இடத்துக்கு செல்ல போகிறோம். இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது " என்று அவர் தெரிவித்தார்.
ஹாம்னரின் கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. கிழக்கு பாலஸ்தீனம் என்ற ஊரில் கவிழ்ந்த ரயிலில் இருந்து கசிந்த ரசாயனம்தான் தனது இந்த நிலைக்கு காரணம் என்று அவர் கூறுகிறார்.
அதேநேரத்தில், தங்களுடைய உண்மையான காயம் என்பது வெளியே தெரியாதது, மன ரீதியிலானது என்றும் ஹாம்னர் மற்றும் அவரது மனைவி பிபிசியிடம் தெரிவித்தனர்.
"எனக்கு தூக்கம் வரவில்லை. ஏற்கனவே இரண்டு முறை டாக்டரிடம் சென்றுவிட்டேன், தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன்"என்றார் ஹாம்னர்.
"இது எனது வாழ்வாதாரத்தை இழப்பதை விட 10 மடங்கு மோசமானது. நாங்கள் இந்த வணிகத்தை கஷ்டப்பட்டு உருவாக்கினோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
தங்களது தொழில் குறித்தும் தங்களது ஊழியர்கள் குறித்தும், 20 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த நகரம் குறித்தும் கவலைப்பட்டு தனது தூக்கத்தை தொலைத்துவிட்டதாக
ஹாம்னரின் மனைவியும் தெரிவித்தார்.
ஏற்கனவே, அவர்களின் நீண்டகால வாடிக்கையாளர்கள் பலர், தங்கள் சேகரிப்பு சேவைகளை ரத்து செய்துவிட்டு, ஊரை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக அவர்களிடம் கூறியுள்ளனர்.
"இங்கு வாழும் மக்கள் குறித்து நான் பயப்படுகிறேன்," என்று ஹாம்னரின் மனைவி கூறுகிறார். " எனக்கு தெரிந்து இங்கு இருக்கும் யாராலும் தூங்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், இது உங்கள் தொழில் குறித்தது, உங்கள் உடல்நலம் குறித்தது, உங்கள் நண்பர்களின் நலம் குறித்தது," என்றார்.
தடம் புரண்ட ரயிலின் பெட்டிகள் எரிந்த நிலையில் இருப்பதை ஒரு மண் மேட்டின் மீது நின்று பார்த்தப்படி பேசிய ஹாம்னர், இந்த சம்பவத்தை கடந்த 1986ல் சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்துடன் ஒப்பிட்டார் அவர். மேலும், `கிழக்கு பாலஸ்தீனத்தின் செர்னோபிள்` என்றும் இதனை அவர் குறிப்பிட்டார்.
அவர் மட்டும் அல்ல, இந்த ஊரைச் சேர்ந்த பலரும் கடந்த இரண்டு நாட்களாக இந்த சம்பவத்தை தங்களது நகரத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாகக் கருதுவதாகத் தெரிவித்தனர். பிப்ரவரி 3ஆம் தேதி பேரழிவுக்கு முன்பு நடந்தது என்ன , அதற்கு பின்னர் நடந்தது என்ன என்பதை வைத்தே அவர்களின் எதிர்கால வாழ்க்கை அளவிடப்படும்.
பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை அருந்தும்படி அப்பகுதி மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ரயில் தடம் புரண்ட சம்பவத்திற்குப் பிறகு ஓரிரு நாட்கள் கழித்து பின்னர் மக்கள் ஊருக்கு செல்வது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்புகின்றனர்.
ரயில் தடம் புரண்டபோது வெளியான வினைல் குளோரைடு, ப்யூட்டில் அக்ரிலேட் போன்ற ரசாயனங்கள் குமட்டல், புற்றுநோய் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் உடையவை.
"இந்த நகருக்கு இந்த சம்பவம் என்பது பேர்ள் ஹார்பர் தாக்குதல் அல்லது இரட்டை கோபுரத் தாக்குதல் போன்றது என்றுதான் மக்கள் அதிகம் பேசுகின்றனர்" என்கிறார் அப்பகுதியில் உள்ள தேநீர் விடுதியின் உரிமையாளர் பென் ரட்னர்.
இந்த சம்பவத்தில் தனது மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சி ஆகியவை உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின் கலவையாக வெளிப்பட்டதாக அவர் கூறினார்.
ஒரு காலத்தில் வழக்கமான சத்தத்தில் போகும் ரயில்கள், தற்போது கடந்த காலத்தில் இருந்ததை விட சத்தமாகவும் அதிக சிராய்ப்புத்தன்மையுடனும் செல்வதாக அவர் எண்ணுகிறார்.
மேலும், ரசாயனம் ஏற்றிவந்த ரயில் தடம் புரண்ட சம்பவத்தை தொடர்ந்து, கிழக்கு பாலஸ்தீனத்தில் உள்ளவர்கள் தற்போது எளிதில் பீதியடைபவர்களாகவும், தொடர்ந்து எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவர்களாகவும் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
"உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் நீண்டகால தாக்கம் குறித்து நாம் பார்க்க தொடங்க வேண்டும் " என்றும் அவர் தெரிவித்தார்.
"ரயில் சத்தம் கேட்டாலோ, தங்கள் குழந்தைகள் வெளியே செல்வதை நினைக்கும்போதோ, தங்கள் வளர்ப்பு நாய் வெளியே சென்று நச்சு கலந்த தண்ணீரை குடித்துவிடுமோ என்பதை நினைத்து மக்கள் கவலைப்படுகின்றனர். மேலும், கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது உள்ளூர் குழந்தைகள், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவத்துடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று ராட்னர் கூறினார்.
இந்த நிகழ்வு பல தலைமுறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். வாயுக்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை விட குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த தீவிரமான விஷயங்கள் இதில் நிறைய உள்ளன என்று தெரிவித்தார்.
நீடிக்கும் அவநம்பிக்கை
வியாழன் அன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (EPA), மைக்கேல் ரீகன், கிழக்கு பாலஸ்தீனம் என்ற இந்த அமெரிக்க கிராமத்துக்கு சென்று மீட்பு முயற்சிகளை மேற்பார்வையிடவும், உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து, அரசாங்கம் அவர்களுக்குப் பின்னால் நிற்கிறது என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்தவும் செய்தார்.
"நாங்கள் உங்களை பார்க்கிறோம், உங்கள் குரலை கேட்கிறோம், ஏன் பதற்றமான சூழல் இங்கு உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கூடுதலாக, ஓஹியோவின் செனட்டர்கள் ஜேடி வான்ஸ் மற்றும் ஷெரோட் பிரவுன் இருவரும் அப்பகுதி மக்களிடம் ஆதரவாக பேசினர். அதே நேரத்தில் ஓஹியோ கவர்னர் மைக் டிவைன் கூட்டாட்சி அதிகாரிகளிடம் உதவி கோரினார்.
தடம் புரண்ட ரயிலை இயக்கிய நோர்போக் சதர்ன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஷா தனது கடிதத்தில், அப்பகுதி குடியிருப்பாளர்கள் சோர்வாகவும், கவலையாகவும், "பதில் இல்லாத கேள்விகளுடன்" விடப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
நகரத்தின் மீது மீதமுள்ள கோபத்தில் இருந்தும் பயத்தில் இருந்தும் வெளியே வருவதற்கு தங்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருசிலர் தெரிவிக்கின்றனர்.
ரயில் தடம் புரண்டு 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அதிகாரிகள் தங்களின் நிலை குறித்து இதுவரை எதுவும் கேட்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
"எங்களிடம் பேசுவதற்கு யாருக்கும் நேரம் இல்லை" என்று தடம் புரண்ட இடத்திலிருந்து ஒரு மைல் (1.6 கிமீ) தொலைவில் வசிக்கும் கிம் ஹான்காக் கூறினார்.
"எல்லோரும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்று அவர்கள் எப்படி எங்களிடம் கூற முடியும்? அதற்கு வாய்ப்பே இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்