You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவின் 'உளவு பலூன்' - உடைந்த பாகங்களைத் தேடும் அமெரிக்கா
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன "கண்காணிப்பு பலூனின்" உடைந்த பாகங்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படை டைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேடுதல் பணி விரைவாக நடக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அதையடுத்து அப்பாகங்களை நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கண்காணிப்பு பலூனை கடந்த சனிக்கிழமை அமெரிக்க கடல் பகுதியில் போர் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தினர். பலூனின் உடைந்த பாகங்கள் அப்பகுதியை சுற்றி உள்ளன.
இந்த பலூன் தங்கள் நாட்டின் முக்கியமான ராணுவ மையங்களை கண்காணித்ததாக அமெரிக்கா நம்புகிறது.
இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராஜரீதியிலான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கென் கடந்த வார இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பயணத்தை உடனடியாக ரத்து செய்தார்.
அப்பலூன் உளவு பலூன் அல்ல எனவும் வானிலை ஆராய்ச்சிக்கான பலூன் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் முன்னாள் தலைவரான அட்மிரல் மைக் முல்லன், பிளிங்கெனின் சீனப் பயணத்தை சீர்குலைப்பதற்காக அந்நாட்டு ராணுவம் வேண்டுமென்றே பலூனை ஏவியிருக்கலாம் என, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சமீப ஆண்டுகளில் அமெரிக்கா -சீனாவுக்கு இடையேயான உயர்மட்ட சந்திப்பாக பிளிங்கெனின் பயணம் இருந்திருக்கக்கூடும்.
"இது ஒரு விபத்து அல்ல. வேண்டுமென்றே பலூன் ஏவப்பட்டது, அப்பலூன் உளவு சார்ந்தது," என்றும் அவர் கூறினார்.
அந்த பலூனை தடையின்றி நாடு முழுவதும் செல்ல அனுமதித்ததாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடமை தவறியதாகவும் குடியரசுக் கட்சியை சேர்ந்த தலைவர்கள், குற்றம் சாட்டினர்.
செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவரான மார்கோ ரூபியோ, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள அமெரிக்க அதிபரின் முக்கியத்துவம் வாய்ந்த 'ஸ்டேட் ஆஃப் யூனியன்' உரைக்கு முன்னதாக அதிபரை சங்கடப்படுத்துவதற்கான சீனாவின் "வெட்கக்கேடான முயற்சி இது" என்று சி.என்.என். ஊடகத்திடம் கூறினார்.
"ஒரு வெளிநாட்டு எதிரியை மொண்டானாவிலிருந்து எங்கள் வீட்டு வாசலுக்கு தடையின்றி பறக்க அரசாங்கம் எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்து எனக்கு கவலை உள்ளது," என அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திற்கு அருகே உள்ளா மர்ட்டில் பீச்சின் மேயர் பிரெண்டா பெத்துனே தெரிவித்தார்.
இது எவ்வாறு நடந்தது என்பது குறித்தும் வருங்காலத்தில் மீண்டும் இவ்வாறு நடக்காமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசாங்கம் விளக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன், மூன்று பேருந்துகளின் அளவை ஒத்ததாக இருக்கலாம். இந்த பலூன் எஃப்-22 என்ற போர் ஜெட் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. சனிக்கிழமை அமெரிக்க கடற்கரையிலிருந்து ஆறு கடல் மைல் தொலைவில் இந்த பலூன் கீழே விழுந்தது.
பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட தருணத்தை அமெரிக்க தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின.
அந்த பலூனை சுட்டு வீழ்த்தியதை படம்பிடித்த மார்ட்டின் வில்லிஸ் என்பவர் பிபிசியிடம் பேசுகையில், தான் பார்த்ததை தன்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்தார். "மிகவும் ஆச்சர்யகரமாகவும் வரலாற்று தருணமாகவும் அது இருந்தது," என அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தாங்கள் காணும் பலூனின் உடைந்த பாகங்களை தொட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "அதனை சேதப்படுத்துவது விசாரணையில் இடையூறை ஏற்படுத்தும்," என, ஹாரி கவுண்ட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த பலூனின் பாகங்கள் 47 அடி கடல் நீரில் தரையிறங்கியுள்ளது. இது அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட ஆழம் குறைவானது. மேலும், அந்த பாகங்கள் 11 கி.மீ. வரை பரவியுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகம் "ஆளில்லா விமானங்களை தாக்குவதற்கு அமெரிக்கா பலத்தை பயன்படுத்தியதற்கு கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும்" வெளிப்படுத்தியது.
தெற்கு கரோலினா கடற்கரையை சுற்றியுள்ள மூன்று விமான நிலையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டு விமானங்களை அமெரிக்க விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த சம்பவத்தால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ளன. தங்கள் நாட்டு இறையாண்மை மீதான "ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்" என, அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் இரண்டாவது சீன உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். அதே நாளில், கொலம்பியாவின் விமானப்படை, பலூன் போன்று அடையாளம் காணப்பட்ட பொருள் ஒன்று அமெரிக்க வான்வெளியில் 55,000 அடிக்கு மேல் கண்டறியப்பட்டது.
அது வான்வெளியை விட்டு வெளியேறும் வரை அந்த பொருளைப் பின்தொடர்ந்ததாகக் கூறியுள்ள விமானப்படை, இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும் கூறுகிறது.
இந்த இரண்டாவது பலூன் குறித்து சீனா எந்த கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்