You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து வெளியே இட்டுச் செல்லப்பட்ட முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ்
அதிகாரம் மிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், மேடையில் அதிபர் ஷி ஜின்பிங் அருகே அமர்ந்திருந்த முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ் திடீரென அங்கு வந்த அதிகாரிகளால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கு விளக்கம் ஏதும் தரப்படவில்லை.
2003 முதல் 2013 வரை சீனாவின் அதிபராக இருந்த ஹு ஜின்டாவுக்கு தற்போது வயது 79. இவருக்கு அடுத்தபடியாகவே, ஷி ஜின்பிங் பதவிக்கு வந்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருவார கால மாநாட்டின் இறுதியில் அதிபர் ஷி ஜின்பிங் மீண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனப் புரட்சியின் தலைவரும், முதல் அதிபருமான மா சே துங் காலத்துக்குப் பிறகு எவரும் தொடர்ந்து மூன்று முறை அதிபராக இருந்ததில்லை.
இப்போது மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஷி ஜின்பிங் மாவோவுக்குப் பிறகு மிகுந்த அதிகாரம் மிக்க தலைவராக தன்னை கட்சியில் நிலை நிறுத்திக்கொண்டுள்ளார்.
என்ன நடந்தது?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வார கால மாநாட்டின் இறுதி நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. மேடையில் அதிபர் ஷி ஜின்பிங் பக்கத்தில் அமர்ந்திருந்தார் ஹு ஜின்டாவ். அப்போது இரண்டு அதிகாரிகள் அவருக்குப் பின்புறமாக வந்து பேசினார்கள். அவர்களில் ஒருவர் ஹு ஜின்டாவின் அக்குளுக்கு கீழே கைவிட்டு அவரைத் தூக்கினார். அல்லது எழுவதற்கு உதவினார்.
பிறகு அவர் அவரது கைகளைப் பற்றி அழைத்துச் சென்றார். தயக்கத்துடன் அவருடன் நடக்கத் தொடங்கிய ஹு, ஷி ஜின்பிங் பக்கம் சாய்ந்து ஏதோ கேட்டார். அதற்கு 'ஆம்' என்பதைப் போல ஷி ஜின்பிங் தலையசைத்தார்.
பிறகு ஹு ஜின்டாவ், மக்கள் பேரரங்கம் என்ற அந்த அரங்கில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக சனிக்கிழமை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்கு 205 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சீன அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்துக்கு பிரதிநிதிகள் இசைவு வழங்கினார்கள். அதிபர் ஷி ஜின்பிங்கின் கருத்துகளை சீனாவின் எதிர்காலத்துக்கான வழிகாட்டுக் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளும் திருத்தம் அது.
ஹாங்காங் - தைவான் குறித்து
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பேசிய ஷி ஜின்பிங், ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு இயக்கத்தை நசுக்கிய செயலை ஆதரித்துப் பேசினார். குழப்பத்தில் இருந்து விடுபட்டு, ஆட்சியை நடத்திய நிகழ்வு என்று அதனை அவர் விவரித்தார்.
சுயாட்சி நடக்கும் தைவானை பலப்பிரயோகம் செய்து பிடிக்க தங்களுக்கு உரிமை இருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பதவி, நாட்டின் அதிபர் பதவி, நாட்டின் ராணுவப் படைகளின் தலைவர் பதவி ஆகியவற்றை ஷி தற்போது ஒன்றாகப் பெற்று, அதிஉயர் தலைவர் என்பதாக அழைக்கப்படுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் மூன்றாவது முறையாக உறுதி செய்யப்படுவார் என்று தெரிகிறது. இதையடுத்து அவர் மூன்றாவது முறையாக ஆட்சித் தலைவர் அல்லது அதிபர் பொறுப்பில் தொடர்வார்.
அதிபர் பதவியில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அவர் 2018ம் ஆண்டு நீக்கினார். இதையடுத்து காலவரையறை இல்லாமல் தொடர்ந்து அதிபராக பதவி வகிக்க அவருக்கு வழி பிறந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்