You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்லாம் மற்றும் முகமது நபிகள் குறித்து இந்தியாவுக்கு அறிவுரை கூறினாரா புதின்?
- எழுதியவர், பிரசாந்த் ஷர்மா
- பதவி, பிபிசி நியூஸ்
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ரஷ்ய அதிபர் புதினும் நபிகள் நாயகம் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு இந்திய அரசிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சமூக வலைதளங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரமாக ரஷ்ய அதிபர் புதினின் அறிக்கை, இந்தியா மற்றும் அரபு நாடுகளின் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, கடந்த வியாழன் அன்று தனது வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில், "முகமது நபியை அவமதிப்பது மத சுதந்திரத்தை மீறுவதாகவும், இஸ்லாத்தை நம்புபவர்களின் புனித உணர்வுகளை புண்படுத்துவதாகவும் இருக்கிறது," என்று குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்களில் புதினும், செளதி மன்னரும் ஒன்றாக இருப்பதை பார்க்கமுடிகிறது.
அதே படத்தின் கீழே, அதிபர் புதின் நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் குறித்து வெளியிட்ட அறிக்கை, காணப்படுகிறது. இந்தியாவுக்காக அவர் வெளியிட்ட அறிக்கை போல, சில பயனர்கள் இதை பகிர்கிறார்க்ள்.
இந்த வைரலான போஸ்ட்கார்ட், இந்தியா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைகள் பகிரப்பட்டுள்ளன.
இதை பகிர்ந்தவர்களில் தமிழ்நாடு காங்கிரஸும் அதன் தலைவரும் அடங்குவர்.
பிபிசி இந்த விஷயத்தை ஆராய்ந்தபோது, வைரலாகிவரும் படமும், அதனுடன் கூறப்பட்ட கூற்றுகளும் முற்றிலும் தவறானவை என்பதை கண்டறிந்தது.
முழு விவகாரம் என்ன?
முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா, ஒரு தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக நாட்டின் முஸ்லிம் சமூகத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, ஜூன் 4 மாலை முதல், பல அரபு நாடுகளின் சமூக ஊடகங்களிலும், நூபுர் ஷர்மாவின் விவகாரத்தை பற்றி காரசாரமாக கருத்து தெரிவித்த பலரும், இந்திய உற்பத்திப்பொருட்களை நிராகரிக்குமாறு கூறும் இயக்கத்தை துவக்கினர்.
அதைத்தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் செளதி மன்னர் ஆகியோரின் பழைய புகைப்படமும், புதின் கூறியதான அறிக்கையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்தை குறிப்பிட்டு அதிபர் புதின், முஸ்லிம் நாடுகளை ஆதரித்து இந்தியாவை கண்டனம் செய்தது போல சமூக வலைதளங்களில் இது காட்டப்படுகிறது.
புதின் இஸ்லாம் பற்றி எப்போது,என்ன சொன்னார்?
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி, தனது வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில், பிரான்சின் சார்லி ஹெப்டோ மற்றும் இஸ்லாம் சர்ச்சையின் பின்னணியில் ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்று ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
"முகமது நபிகளை அவமதிப்பது மத சுதந்திரத்தை மீறுவதாகவும், இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டவர்களை புண்படுத்துவதாகவும் உள்ளது," என்று அவர் கூறியிருந்தார்.
பிரான்சில் இஸ்லாம் மற்றும் சார்லி ஹெப்தோ விவகாரம் குறித்து அதிபர் புதின் வெளியிட்ட அறிக்கைக்கும், இந்தியாவில் தற்போதைய முகமது நபிகள் சர்ச்சைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நூபுர் ஷர்மா விவகாரம் குறித்து புதின் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
செளதி மன்னர் சல்மானுடன் பழைய புகைப்படம்
தற்போது பகிரப்படும் புதின் மற்றும் செளதி மன்னரின் புகைப்படம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், செளதி அரேபியாவிற்கு ரஷ்ய அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது என்பதை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் காட்டுகிறது.
வைரலாகி வரும் புகைப்படம் மற்றும் அதனுடன் கூறப்பட்ட கருத்துகள் இரண்டுமே தவறானவை என்பதை பிபிசியின் ஆய்வில் நாங்கள் கண்டறிந்தோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்