You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு: காரணம் என்ன?
- எழுதியவர், அனபெல் லியாங்
- பதவி, வணிக செய்தியாளர்
ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் திட்டத்தை கையாண்டது தொடர்பாக இந்த வழக்கை முதலீட்டாளர்கள் தொடர்ந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.
கலிஃபோர்னியா பெருநிறுவன விதிகளை ஈலோன் மஸ்க் பலவழிகளில் மீறியதாக தங்கள் வழக்கில் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க்கின் "தவறான அறிக்கைகள் மற்றும் சந்தை துஷ்பிரயோகம்" ஆகிய "சட்டவிரோத நடத்தை", பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் 'குழப்பத்தை' உருவாக்கியுள்ளது எனவும் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு பங்குக்கு ஈலோன் மஸ்க் அளிக்க முன்வந்த 54.20 டாலர்கள் விலையைவிட ட்விட்டர் பங்கு விலை 27% குறைவாக உள்ளது.
வழக்கில் கூறப்பட்டுள்ளது என்ன?
ட்விட்டரில் தனக்கு கணிசமான பங்குகள் இருப்பதையும், நிறுவனத்தின் இயக்குநர் வாரிய உறுப்பினர் ஆவதற்கான தனது திட்டத்தையும் அறிவிப்பதை தாமதப்படுத்தியதன் மூலம் ஈலோன் மஸ்க் நிதி ரீதியாக பலனடைந்ததாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
95 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வோரைக் கொண்டுள்ள ட்விட்டர் பயனரான மஸ்க் வெளியிட்ட பல ட்வீட்கள் "தவறானவை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கையில் சந்தேகங்கள் இருப்பதால், அந்நிறுவனத்தை வாங்கும் தனது ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் வெளியிட்ட ட்விட்டர் பதிவும் இதில் அடங்கும்.
மே 13 அன்று அவர் பகிரப்பட்ட இந்த ட்வீட், "போலி கணக்குகள் பற்றி தெரிந்துகொண்டு, ட்விட்டர் பங்குகளுக்கான சந்தையில் திருகல் வேலை செய்யும் முயற்சியை மேற்கொண்டதாக" அவ்வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டை பதிவிட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, ட்விட்டர் ஒப்பந்தத்தை "முன்னெடுத்துச் செல்ல முடியாது" என்று கூறியதன்மூலம், ட்விட்டர் மீதான தனது குற்றச்சாட்டுகளின் தாக்கத்தை மஸ்க் "இரட்டிப்பாக்கினார்" என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் முதலீட்டாளர்களுக்காக இவ்வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர்களுள் ஒருவரான ஃப்ராங்க் போட்டினி, பிபிசியிடம் கூறுகையில், மஸ்க் "நிறுவனத்தை வாங்குவதற்கான விலை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில், தான் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க விரும்பும் நிறுவனத்தை தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்" என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
"சான் பிரான்சிஸ்கோவில் நாங்கள் தொடுத்த இந்த வழக்கு, மஸ்க்கின் சட்ட விரோத நடத்தைக்கு பொறுப்பேற்க வைக்க முயல்கிறது" என போட்டினி தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்த பிபிசியின் கேள்விக்கு ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர்கள் மற்றும் டெஸ்லா நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.
பிபிசி தொடர்புகொண்டபோது ட்விட்டர் நிறுவனம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான வாய்ப்பை குறைக்க அல்லது ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான வழிகள் குறித்து மஸ்க் யோசிக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.
ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் அல்லது பாட்கள் குறித்து தான் அக்கறை கொண்டிருப்பதாக பல சமயங்களில் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
மென்பொருள் மூலம் இயக்கப்படும் பாட் (Bot), தானாக ட்விட்டர் பதிவுகளை வெளியிடும். இந்த பதிவுகள் பெரும்பாலும் தவறான தகவல்களுடன் தொடர்புடையதாகும்.
மேலும் மார்ச் மாதம் ட்விட்டர் நிர்வாகக்குழுவில் ஒப்புக்கொண்ட 44 பில்லியன் டாலர்களை விட குறைந்த தொகையை செலுத்த முற்படலாம் என்பதையும் மஸ்க் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், குறைந்த விலையில் ஒப்பந்தம் செய்வது "கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல" என்று கூறினார்.
கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கிளாஸ்-ஆக்ஷன் வழக்கு, முதலீட்டாளர் வில்லியம் ஹெரெஸ்னியாக் என்பவரால் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அவர் "தன் சார்பாகவும், இதேபோல் உள்ள மற்ற அனைவரின் சார்பாகவும்" வழக்கு தொடுத்திருப்பதாகக் கூறினார்.
'கிளாஸ் ஆக்ஷன்' வழக்கு என்பது, ஒரு குழுவினர் சார்பாக ஒருவரால் தாக்கல் செய்யப்படும் வழக்காகும்.
இந்த மாத தொடக்கத்தில், ட்விட்டர் அதன் நுகர்வோர் மற்றும் வருவாய் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய இருவர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தியது.
வணிக ரீதியிலான முக்கிய பணியிடங்களை தவிர பெரும்பாலான பணியமர்த்தலை ட்விட்டர் நிறுவனம் இடைநிறுத்திவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்