You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெக்சாஸ் துப்பாக்கி சூடு: 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடந்தது என்ன?
என்ன நடந்தது
அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை 11:32 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு தொடங்கியது, மேலும் தாக்குதல் நடத்தியவர் "இந்த சம்பவதின் போது தனியாகச் செயல்பட்டார்" என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதுவரை 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில், 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் ஈவா மிரெலெஸ் என்று அமெரிக்க ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு கல்லூரியில் ஒரு மகள் இருப்பதாகவும், ஓட்டம் மற்றும் நடைபயணத்தை அவர் விரும்புவதாகவும் கல்வி மாவட்ட இணையதளம் தெரிவிக்கிறது.
அதேசமயம், உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என காவல்துறையைக் குறிப்பிட்டு அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நடைபெற்றபோது, அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் படையைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் சற்று தொலைவில் இருந்துள்ளார். அவர்தான், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, விரைந்து சென்று சுட்டுள்ளார் என்று 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி முகமை தெரிவிக்கிறது.
சிபிஎஸ் செய்தியின்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், பாதுகாப்புக்கவச உடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே 18ஆம் தேதி, நியூயார்க் பஃபல்லோ பகுதியில் ஒரு மளிகைக்கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோதும், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்பட்ட சந்தேக நபர், கைத்துப்பாக்கியுடன் பாதுகாப்பு உடை அணிந்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் இருந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையிலிருந்து உரையாற்றிய அவர், "ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர்.
இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும்" என்று பேசினார்.
சம்பவம் குறித்து இப்படி பேசிய ஜோ பைடனிடம், இதற்கு பிறகு டெக்சாஸ் செல்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
( இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்