You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியாவில் கோவிட்: 10 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம்
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த வட கொரியத் தலைவர் கிம் ஜோங் - உன் மருந்துகளை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை "காய்ச்சல்" என்று மட்டுமே வட கொரிய அரசு ஊடகம் குறிப்பிடுகிறது.
சுமார் 50 பேர் இறந்துள்ளனர். ஆனால், கோவிட்டால் இறந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இவர்களில் எத்தனை பேருக்கு கோவிட் பரிசோதனையில் பாசிடிவ் வந்துள்ளது என்று தெரியவில்லை.
கோவிட் 19 வந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை வாய்ப்புகள் வட கொரியாவில் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன. எனவே, சிலருக்கே கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக பாதிப்புக்கு காரணம் என்ன?
தடுப்பூசி போடப்படாததாலும், மிகவும் பின் தங்கிய சுகாதாரக் கட்டமைப்பு காரணமாகவும், வட கொரிய மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். உலகின் பிற பகுதிகளில் இருந்து பெரிதும் துண்டிக்கப்பட்டு வாழும் இந்த நாட்டில் தேசம் தழுவிய பொது முடக்கம் அமலில் உள்ளது.
கடந்த வார இறுதியில் அவசர அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தை கூட்டிய நாட்டுத் தலைவர் கிம், தேசிய மருந்துக் கையிருப்பில் இருந்து சரியான முறையில் மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்கவில்லை என்று அதிகாரிகளை விமர்சித்ததாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
"தலைநகர் பியோங்யாங்கில் மருந்து விநியோகத்தை உடனடியாக ஸ்திரப்படுத்துவதற்கு, ராணுவத்தின் ஆற்றல்மிக்க" மருத்துவப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
தங்கள் நாட்டில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல் முதலாக கடந்த வாரம் அறிவித்தது வட கொரியா. ஆனால், நீண்ட காலமாகவே அந்நாட்டில் வைரஸ் தொற்று இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் வல்லுநர்கள்.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த அதிகபட்ச கட்டுப்பாடுகளை கிம் விதித்துள்ளார். பொது முடக்கம், வேலை செய்யும் இடங்களில் ஒன்று கூடுவதற்கான தடைகள் போன்றவை இதில் அடக்கம்.
அஸ்ட்ராஜெனீகா மற்றும் சீனாவில் உற்பத்தியான தடுப்பூசிகளின் மில்லியன் கணக்கான டோஸ்களை வட கொரியாவுக்கு அளிக்க கடந்த ஆண்டு சர்வதேச சமூகம் முன்வந்தது. ஆனால், தனது நாட்டின் எல்லைகளை மூடுவதன் மூலமாக கோவிட்டை கட்டுப்படுத்திவிட்டதாக 2020 ஜனவரியில் அறிவித்திருந்தது வடகொரியா.
வட கொரியாவின் நில வழி எல்லையில் தென் கொரியா, சீனா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. சீனா தனது மிகப் பெரிய மாநகரங்களில் ஒமிக்ரான் அலை பரவுவதைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தை அறிவித்துப் போராடிக் கொண்டிருக்கிறது சீனா.
'அளவற்ற உதவி செய்ய தென் கொரியா தயார்'
வட கொரியா கேட்குமானால், அளவு வரம்பில்லாமல், தடுப்பூசி டோஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவக் கருவிகள் போன்ற சுகாதார உதவிகளை அனுப்பிவைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது அதன் சகோதர நாடான தென் கொரியா.
அதிவேகமாகப் பரவும் கோவிட் 19 நோய் ஒரு பேரழிவு என்று கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டார் கிம்.
"நம் நாடு உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை சந்தித்த துன்பங்களிலேயே இந்த நோய் மிகப் பெரியது," என்று அவர் கூறியதாக அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. குறிப்பிட்டுள்ளது.
இந்த நோய்ப் பரவலால் நேரடியாக ஏற்பட்டுள்ள சுகாதாரத் தாக்கத்தைத் தவிர, உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது குறித்த அச்சமும் நிலவுகிறது. வட கொரியாவில் 1990களில் மோசமான பஞ்சம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள 2.5 கோடி மக்களில் 1.1 கோடி மக்கள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக இப்போது உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது. இந்த நோய்ப் பரவல் காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் உழவில் ஈடுபட முடியாமல் போனால், அதன் விளைவுகள் மிகத் தீவிரமாக இருக்கும் என்றும் உலக உணவுத் திட்டம் கணிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்