You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் போர்: மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?
யுக்ரேனில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, ரஷ்ய பெரு முதலாளிகள் மீது மேற்கு நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அந்த பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லும் பெரும்பாலான ரஷ்ய பணக்காரர்களின் புகலிடமாக துபாய் விளங்குகிறது.
ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வருவதாக, தொழில்துறை வல்லுநர்கள் பிபிசியிடம் கூறினர்.
2022ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் துபாயில் சொத்துகளை வாங்கும் ரஷ்யர்களின் எண்ணிக்கை 67 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அறிக்கை ஒன்று கூறுகிறது.
ரஷ்யா மீது எவ்வித தடைகளையும் ஐக்கிய அரபு எமிரேட் விதிக்கவில்லை. மேலும், யுக்ரேன் மீதான படையெடுப்பு குறித்தும் விமர்சிக்கவில்லை.
மேலும், பெரும்பாலான மேற்கு நாடுகளை போல் அல்லாமல், தடைகள் விதிக்கப்படாத ரஷ்யர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் விசாக்களையும் வழங்கிவருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் ரஷ்யாவிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்த சரியான எண்ணிக்கை கிடைக்கப்பெறவில்லை.
போர் தொடங்கிய முதல் 10 நாட்களிலேயே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறியதாக ரஷ்ய பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
உயரும் சொத்து விலைகள்
தங்களிடம் தற்போது அதிக எண்ணிக்கையில் ரஷ்ய வாடிக்கையாளர்கள் வருவதாக, துபாயில் நிறுவனங்களை நிறுவுவதற்கு வழிகாட்டும் நிறுவனமான விர்ச்சூசோன் (Virtuezone) கூறுகிறது.
"போர் தொடங்கியதிலிருந்து, எங்களிடம் பல்வேறு தகவல்களை கோரும் ரஷ்யர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது," என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் ஹாஜெய்ஜ் கூறுகிறார்.
"போரினால் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவு குறித்து அவர்கள் கவலைகொண்டுள்ளனர். எனவேதான் தங்களின் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் இங்கு வருகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.
"துபாயை இரண்டாவது வீடாக கருதுகின்றனர்"
இப்படி ரஷ்யர்களின் வருகையால், துபாயில் ஆடம்பர வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது. துபாய் வரும் ரஷ்யர்கள் அங்கு வீடுகளை வாங்க விரும்புவதால், சொத்து விலைகள் உயர்ந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சொத்துக்களை வாங்கும் ரஷ்யர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு உயர்ந்துள்ளதாக, துபாயில் செயல்பட்டுவரும் ரியல் எஸ்டேட் முகமையான 'பெட்டர்ஹோம்ஸ்' நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
ரஷ்ய மொழி பேசும் முகவர்கள் பலரை பணியில் அமர்த்தியுள்ளதாக, மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனமான மாடர்ன் லிவ்விங் பிபிசியிடம் கூறியது. அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தியாகோ கால்டஸ், துபாய்க்கு உடனடியாக இடம்பெயர விரும்பும் ரஷ்யர்களிடமிருந்து அதிகளவில் அழைப்புகள் வருவதாக தெரிவித்தார்.
"இங்கு வரும் ரஷ்யர்கள் முதலீட்டுக்காக மட்டும் சொத்துக்களை வாங்கவில்லை. அவர்கள் துபாயை இரண்டாவது வீடாக கருதுகின்றனர்," என அவர் தெரிவித்தார்.
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும், புதிதாக தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடம்மாற்றியுள்ளன.
ரஷ்யா மற்றும் யுக்ரேனில் அலுவலகங்களை கொண்டுள்ள பிளாக்செயின் தொழில்நுட்ப நிறுவனமான வீவே இன் (WeWay) இணை நிறுவனர் ஃபவுத் ஃபடுல்லேவ். யுக்ரேனில் போர் வெடித்தபின், அவரும் அவருடைய தொழில் கூட்டாளிகளும் தங்களின் நூற்றுக்கணக்கான பணியாளர்களை துபாய்க்கு இடம்மாற்றினர்.
"எங்களின் செயற்பாடுகளில் கடுமையான பாதிப்பை இந்த போர் ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான பணியாளர்களை யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு வெளியே இடம்மாற்ற வேண்டியிருந்ததால் எங்களால் பணிகளை தொடர முடியவில்லை" என்கிறார் அவர். ஃபவுத் ஃபடுல்லேவ், ஒரு ரஷ்ய குடிமகன்.
ஐக்கிய அரபு அமீரகம் தொழில்களை நடத்துவதற்கான பாதுகாப்பான பொருளாதார மற்றும் அரசியல் சூழலை வழங்குவதால், தங்கள் பணியாளர்களை அமீரகத்திற்கு இடம்மாற்ற தேர்ந்தெடுத்ததாக அவர் மேலும் கூறுகிறார்.
தடைகள் காரணமாக ரஷ்யாவில் இயங்குவது நம்பமுடியாத வகையில் கடினமாக இருந்ததால், அங்கிருந்து பல தொழில்கள் வெளியேறியதாக அவர் கூறினார். சர்வதேச வாடிக்கையாளர்கள் மற்றும் பிராண்டுகளுடன் தொழில் செய்யும் நிறுவனங்கள் எதிர்கொண்ட சவால்கள் மேலும் கடுமையாக இருந்ததாக, அவர் தெரிவித்தார்.
அலுவலகங்களை மூடிய உலகளாவிய நிறுவனங்கள்
உலகளாவிய நிறுவனங்களான கோல்ட்மேன் சேக்ஸ், ஜேபி மோர்கன், கூகுள் போன்றவை தங்கள் ரஷ்ய அலுவலகங்களை மூடிவிட்டன, மேலும், தங்கள் பணியாளர்கள் சிலரை துபாய்க்கு இடம் மாற்றியுள்ளனர்.
"தற்போது தொழில் ரீதியிலான கட்டுப்பாடுகள் இருப்பதால், பலரும் இங்கிருந்து வெளியேறிவிட்டனர்," என்கிறார் ஃபவுத் ஃபடுல்லேவ்.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பில்லியன் கணக்கான அந்நிய செலாவணி கையிருப்பை கையாள்வதற்கு ரஷ்யாவின் மத்திய வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளுக்கான சேவை அமைப்பான ஸ்விஃப்ட்டை பயன்படுத்துவதிலிருந்தும் சில ரஷ்ய வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தன் கையிருப்பை பாதுகாக்க, ரஷ்ய அரசாங்கம் மூலதனத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், குடிமக்கள் 10,000 டாலர்களுக்கு மேல் வெளிநாட்டு பணத்துடன் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது.
பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய சிக்கல்களால், பெரும்பாலான ரஷ்யர்கள் கிரிப்டோகரன்சிகள் மூலம் எந்தவொன்றையும் வாங்குகின்றனர். இதில் கிரிப்டோவை பெற்று, வாங்குபவர்கள் சார்பாக விற்பனையாளர்களுக்கு அதனை பணமாக மாற்றிக் கொடுப்பதற்கு இடைத்தரகர்களையும் சிலர் வைத்துள்ளனர்.
ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என மேற்கு நாடுகளிடமிருந்து வரும் அழைப்புகளை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகள் நிராகரித்துவிட்டன.
கடந்த பிப்ரவரி மாதம், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்கும் தீர்மானம் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்களிக்காமல் விலகி இருந்த மூன்று நாடுகளுள் ஒன்றாக சீனா, இந்தியாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டும் உள்ளது. மேலும், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவதற்காகாக ஏப்ரல் 7 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பிலும் ஐக்கிய அரபு அமீரகம் விலகியிருந்தது.
உலகளாவிய நிதி குற்றக் கண்காணிப்பு அமைப்பான FATF எனப்படும் ஃபினான்சியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டை 'கிரே லிஸ்ட்' எனப்படும் சுமார் பட்டியலில் சேர்த்த சில மாதங்களுக்குப் பின்னர் இந்த நாட்டில் ரஷ்ய முதலீடுகள் அதிகரித்துள்ளன.
இதனால், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை தடுப்பதற்கான ஐக்கிய அரபு எமிரேட்டின் முயற்சிகள் மேலதிகம் கண்காணிப்புக்கு உள்ளாகும். உள்ளே வரும் முதலீட்டை ஒழுங்குபடுத்த குறிப்பிடத்தக்க அளவுக்கு முயற்சி எடுத்துள்ளதாக கூறும் ஐக்கிய அரசு எமிரேட் FATF அமைப்புடன் நெருக்கமாக பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்