போர் குற்றங்களை ஆவணப்படுத்த இணையம் எவ்வாறு உதவுகிறது? - விளக்கும் சட்ட வல்லுநர்கள்

இணையத்தில் வெளியிடப்படும் புகைப்படங்கள் யுக்ரேனில் போர்க்குற்றங்களை விசாரிப்பதில் முக்கியமானதாக இருக்கும் என்று பிரிட்டனின் உள்ள சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

 ஒரு 'மாதிரி' போர் குற்ற விசாரணையின் போது, யேமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு காட்சிகள் குறித்து, இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள், அப்போரின் கொடூரங்களை ஆவணப்படுத்துவதை எவ்வாறு 'மாற்றியது' என்பதைக் காட்டியது என்கிறார் ஒரு சட்டப் பேராசிரியர் கூறினார்.

போர் நடக்கும் காட்சிகளில் 'மிகவும்' பயனுள்ள, சரிபார்க்கக்கூடிய தகவல்கள் இருப்பதாக ஓர் இணைய புலானாய்வாளர் கூறுகிறார்.

ஆனால், நேரில் கண்ட சாட்சிகளின் தகவல்கள் இதன் மூலம் மறைக்கப்படக் கூடாது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

யுக்ரேன் நாட்டில் நடக்கும் போர்க் குற்றங்களைச் செய்த நபர்களுக்கு எதிரான வழக்குகள், சட்டவிரோதமான கொலைகள், போர்க்கால பாலியல் வன்முறை மற்றும் சித்ரவதை ஆகியவற்றின் சரிபார்க்கப்படாத புகைப்படங்களைச் சார்ந்திருக்கலாம் என்று சுவான்சீ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யுவோன் மெக்டெர்மொட் ரீஸ் கூறியுள்ளார். 

திறந்தவெளி தகவல் (open-source information) என்று அழைப்படும் ஒன்று, மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிந்துக்கொள்ளும் எங்களின் வழியை முற்றிலும் மாற்றிவிட்டது என்று அவர் கூறினார். 

ஐ.நா விசாரணைக் குழுக்கள், உண்மையை கண்டறியும் குழுக்கள், ஹாக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும்கூட இதுப்போன்ற ஆதாரங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதை நாங்கள் பார்க்கிறோம் என்று பேராசிரியர் யுவோன் மெக்டெர்மொட் ரீஸ் விளக்குகிறார்.

 ஸ்விட்சர்லாந்து மற்றும் டச்சு நீதிமன்றங்களில், சிரியாவில் இருந்து திரும்பும் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் உறுப்பினர்கள் மீது விசாரணை நடத்த திறந்தவெளி தகவல்களும் பயன்படுத்தப்பட்டன என்று பேராசிரியர் யுவோன் மெக்டெர்மொட் ரீஸ் கூறினார். 

திறந்தவெளி தகவல் என்றால் என்ன?

திறந்தவெளி தகவல் என்பது இணையத்தில் இலவசமாக கிடைக்கும் தகவல். 

"ஒருவரது தலை துண்டிக்கப்படும் காணொளி உள்ளது. அது யூடியூப் அல்லது பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட அல்லது பகிரப்பட்ட காணொளியாக இருந்தால், அது ஆதாரமே," என்று அவர் கூறுகிறார்.

இது போன்ற தகவல் சமீபத்தில் பிரிட்டன் நீதிமன்றத்தில் பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டது 

2018 ஆம் ஆண்டில், யேமன் தலைநகரமான சனாவில் உள்ள அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் மீது ஒரு கொடூரமான வான்வழித் தாக்குதலுக்கு பிறகு நடந்த சம்பவம் குறித்து சரிபார்க்கப்படாத காட்சிகள் ட்விட்டரில் வெளியிடப்பட்டன. 

பெல்லிங்காட் என்ற திறந்த நிலை புலனாய்வு இணையதளம், இந்த தாக்குதலை ஆவணப்படுத்த புவி இருப்பிடம், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான படங்களின் ஒப்பீடு செய்து பயன்படுத்தியது.

போர் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு 'கற்பனையான' சவுதி விமானியின் 'மாதிரி' விசாரணையின்போது, அவர்களின் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

"இந்த காணொளிகளில் ஒன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பொது-சட்ட நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதைப் பார்க்க விரும்பினோம்," என்று பெல்லிங்கேட்டின் நீதிப் பொறுப்பாளர் நிக் வாட்டர்ஸ் கூறினார்.

இதன் விளைவாக "யுக்ரைனில் நடந்த சம்பவங்கள் குறித்து தகவல்களை சேகரித்து சரிபார்க்க, நாங்கள் இப்போது இதை பயன்படுத்துகிறோம்" என்று அவர் கூறினார்.

போரின் மத்தியில், அங்கிருப்பவர்கள் ஒரு குற்றவியல் விசாரணையைப் பற்றி சிந்திப்பது அரிது என்பதே இங்கே உள்ள பிரச்னை என்று பேராசிரியர் மெக்டெர்மொட் ரீஸ் கூறினார்.

"தாங்கள் கண்டதை உலகுக்குக் காண்பிக்கும் நோக்கத்துடன் அவர்கள் அதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்," என்று அவர் விளக்கினார்.

போர் குற்றங்களை ஆவணப்படுத்த செயலி

போர் நடக்கும் இடத்தில் இருப்பவர்கள், தாங்கள் போர்க்குற்றங்களின் காட்சிகளில் அடையாளங்கள் மற்றும் பிரபலமான கட்டடங்களைப் படமாக்குவதற்கும், ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ஐவிட்னெஸ் (iWitness) எனப்படும் அலைபேசி செயலியை பயன்படுத்துவதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இது ஒரு தகவல் பதிவுசெய்யப்பட்ட இடம், நேரம், நாள், அதன் மெட்டாடேட்டாவைப் (Meta Data) பதிவுசெய்வது போன்ற விஷயங்களை செய்கிறது", என்று அவர் கூறினார்.

"நீங்கள் இதைப் பதிவுசெய்தால், மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள், அங்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை குறித்தும் பதிவு செய்யுங்கள். அந்த இடத்தில் உள்ள நிலப்பரப்பு குறிகள் அல்லது கட்டடங்களை பதிவு செய்து சேர்க்க முடியுமா என்று பாருங்கள்", என்று அவர் கூறுகிறார். 

மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்த காணொளிகளைப் பயன்படுத்தும் 'விட்னெஸ்' என்ற தொண்டு நிறுவனம் , நீதிமன்றங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு அங்குள்ளவர்களின் புகைப்படங்களை எவ்வாறு சேகரிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

போர்க்குற்றங்களை விசாரிப்பவர்கள் இணையத்தில் உள்ள புகைப்படங்களை நம்ப முடியாது என்ற பரவலான பார்வைக்கு எதிராகவும் போராடுகின்றனர்.

"இணையத்தில் பல பயனுள்ள, சரிபார்க்கக்கூடிய தகவல்கள் வெளியிடப்படுவதை இது தவறவிடுகிறது," என்று வாட்டர்ஸ் கூறுகிறார். உண்மையான நிகழ்வுகள் பல்வேறு வகையில், ட்வீட் மூலம் வருவதால், இணையத்தில் சம்பவங்களை போலியாக காட்டுவது கடினம் என்று கூறுகிறார்.

இதுகுறித்து மேலும், வாட்டஸ் கூறுகையில், "நாம் சமூக ஊடகங்கள், ஸ்மார்ட்போன்களின் வருகையுடன், நீங்கள் நம்பமுடியாத அளவுக்கு மிகவும் பயனுள்ள தகவல் வலையமைப்பைக் கொண்டிருக்கிறோம், அங்கு மக்கள் புகைப்படங்களை எடுக்கவும், நடக்கும் சம்பவங்கள் குறித்து காணொளிகளை பதிவுசெய்யவும் முடியும்", என்றார். 

பெல்லிங்கேட் மற்றும் மனித உரிமைகள் தொண்டு நிறுவனமான குளோபல் லீகல் ஆக்ஷன் நெட்வொர்க் (Global Legal Action Network) ஆகியவற்றுடன் வழக்கறிஞர் டியர்ப்லா மினாக் (Dearbhla Minogue) பணியாற்றுகிறார்.

காணொளி மூலம் சட்ட நடவடிக்கை

ஒரு சம்பவம் குறித்து யாரோ ஒருவர் அதைப் பற்றி பேசுவதைக் கேட்பதை விட, ஏதோ ஒரு காணொளியைப் பார்ப்பது அதிக கவனத்தை பெறக்கூடியது என்று அவர் கூறினார்.

"ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் பற்றி சிந்தித்து பாருங்கள்" என்று மினாக் கூறுகிறார். 

"அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர், படம்பிடித்த காணொளியை, நீதிக் குழு உட்பட மக்கள் உண்மையில் பார்த்தார்கள். இது அந்த விசாரணையின் தீர்ப்பை பாதித்தது. ஏனெனில் இது ஒரு நபர் கூறிய வார்த்தையை மற்றொருவரது வார்த்தையை எதிர்க்கும் நிலையை தாண்டிவிட்டது", என்கிறார். 

"பெர்க்லி புரோட்டோகால் எனப்படும் டிஜிட்டல் திறந்தவெளி தகவல்களைப் பயன்படுத்துவதற்கான விதிகளை கலிபோர்னியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது." 

அரசியல் காரணங்களுக்காக ஒரு காணொளி போலியானதாகவோ அல்லது மாற்றம் செய்யப்பட்டதாகவோ இல்லை என்று நீதிபதிக்கு எப்படி உறுதி செய்வது என்பதே போர்க்குற்ற வழக்குறிஞர்கள் எதிர்கொள்ளும் கேள்வி என்று மினாக் கூறுகிறார். 

"வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இணையத்தில் உள்ள காணொளியைக் கொண்டு, அது காட்டுவது சரியா என்பதை நாம் எப்படி அறிவது?", அவர் கூறுகிறார்.

"இந்த புச்சா காணொளிகள் குறித்த விஷயத்தில், சித்தரிக்கப்பட்டவையோ அல்லது போலியானவையோ அல்ல என்பதை எப்படி உறுதி செய்வது போன்ற சிக்கல்களை ரஷ்யா எழுப்புகின்றது."

"உள்நாட்டு நீதிமன்றங்களில், அதை படம்பிடித்த நபரை நீதிமன்றத்தில் சாட்சியாக அழைப்பது ஓர் எளிய வழி." என்று மினாக் கூறுகிறார். 

"ஆனால், உங்களிடம் இருக்கும் திறந்தவெளி தகவல்களில், அதாவது அதை உருவாக்கியவர் யார் என்பது தெரியாத நிலையில், , அவர்கள் அதை எவ்வாறு உருவாக்கினார்கள், அவர்கள் அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்தார்களா, வேறு யாராவது அதில் மாற்றங்கள் செய்தார்களா என்று நீங்கள் அவர்களிடம் கேட்க முடியாது."

"காணொளிகளில் உள்ள தகவலைப் பயன்படுத்தி அதன் மற்ற செயற்கைக்கோள் படங்கள் அல்லது அதே நிகழ்வைக் காட்டும் மற்ற காணொளிக்களுடன் ஒப்பிடுவதன் மூலம், அவர்கள் இந்த தகவல்களை தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து, அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை மதிப்பிடலாம்."

திறந்தவெளி தகவல்கள் உதவிகரமானதே, அதே சமயத்தில், இவை இதில் மனிதர்கள் தரப்பு பேசும் விஷயங்களை இழக்காமல் இருப்பது முக்கியம்", என்று பேராசிரியர் மெக்டெர்மொட் ரீஸ் எச்சரிக்கிறார்.

 "யேமனில், இத்தகைய ஆதாரங்கள் தானாக உருவாகவில்லை. இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட கணக்குகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இருந்தது."

"யுக்ரைனில், பாலியல் வன்முறையில் இருந்து மீண்டவர்கள் தங்களின் வாக்குமூலத்தில் இருந்து, பாலியல் வன்முறை குறித்த ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். "மனிதர்களின் தரப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதை நாம் குறைத்து மதிப்பிடாமல் இருப்பது மிகவும் முக்கியம்".

"இது சர்வதேச குற்றங்கள் செய்யப்படும்போது, அவை தீங்கு விளைவுக்காமல் செய்யப்படுவதில்லை என்பதைக் காட்டுவதாகும்" ,என்று பேராசிரியர் மெக்டெர்மொட் ரீஸ் கூறினார்.

"எனவே, ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்களைச் சேகரிக்கும் பணி என்பதுஅது நீதிமன்றத்தில் நின்று பேசும் என்பதையும், நமக்கு நீதி கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்."

"புச்சா மற்றும் யுக்ரைனில் உள்ள பிற பகுதிகளிலிருந்து மிகவும் கொடூரமான தகவல்கள் வெளிவருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். உலகளவில், அதற்கு நீதி கிடைப்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்." என்கிறார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :