You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரலாறு: ஹிட்லரை ஏமாற்றி தோற்கடித்த பேய்ப் படையும், தந்திரக் கலைஞர்களும்
- எழுதியவர், மேத்யூ வில்சன்
- பதவி, பிபிசி கல்சர்
இரண்டு உலகப் போர்களிலும் மாயத் தோற்றங்களை உருவாக்க கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். நேச நாடுகளை வெற்றிக்கு இட்டுச் செல்ல உதவிய "ஏமாற்று வேலைகளில்" ஒரு உருமறைப்புப் பிரிவும், 'பேய்ப் படையும்' பயன்படுத்தப்பட்டன.
போர்க்காலத்தில் கலைஞர்கள் என்றால், ஏதாவது பரப்புரைக்காக பாடுவார்கள், ஓவியம் வரைவார்கள், எழுதுவார்கள், நாடகம் நடத்துவார்கள் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்கள் படைகளை விரட்டுவதற்கு போர்க்களத்திலேயே பணியாற்றியிருக்கிறார்கள்.
போர்கள் நிறைந்திருந்த 20-ஆம் நூற்றாண்டில் ஆண்களும் பெண்களும் அதில் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்க வேண்டியிருந்தது. கலைஞர்கள், கலை வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற கலை வல்லுநர்கள் ஆகியோரும் அளப்பரிய பங்காற்றியிருக்கின்றனர். ஆனால் அவை இன்னும் முழுமையாகச் சொல்லப்படவில்லை.
இரண்டாம் உலகப் போரின் இரண்டு ராணுவப் பிரிவுகளின் கதையும், முதல் உலகப் போரில் பணியாற்றிய கலைஞர்களின் பங்களிப்பும் போரில் கலைஞர்கள் எவ்வாறு முக்கிய வீரர்களாக மாற முடியும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. முதன்முறையாக, அவர்கள் போர்க்களத்தை படைப்பாற்றலுக்கான களமாக மறுவடிவமைத்தனர்.
அமைதி காலத்தில் கலைஞர்களின் பங்கு வேறுமாதிரியானது. அவர்கள் ஓவியத்தை வரையலாம், மாயத் தோற்றத்தை உருவாக்கலாம். ஆனால் முதல் உலகப் போரில் அவர்களின் கலைத்திறன் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.
முதல் உலகப் போரில் விமானங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தன. அவற்றிடம் இருந்து துருப்புகளை மறைப்பது அவசியமானது. அங்குதான் மாய உருவங்களைத் தோற்றுவிக்கும் கலைஞர்களின் தேவை ஏற்பட்டது. ஒளி, நிழல் மற்றும் பார்வை பற்றிய நுண்ணறிவுடன், ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் தங்களது வேலைக்கான திறமைகளை மட்டுமே கொண்டிருந்தனர். ஆனால் அதுவே போர்க்களத்தில் ஆயுதமாக்கப்பட்டது.
முதல் உலகப் போரின் மிக முக்கியமான பிரிட்டிஷ் உருமறைப்பு (Camouflage) கலைஞர் சாலமன் ஜே சாலமன். அவர் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் அலெக்ஸாண்ட்ரே கபனெலினிடம் படித்தவர். முதல் உலகப் போரில், படைகளை மறைக்கும் உத்திகளை அவர் வகுத்தார்.
அகழிகள், பதுங்குமிடங்களை மறைப்பதற்காக ஒரு வகையான வலையை அவர் உருவாக்கியது மிகவும் புகழ்பெற்றது. "கண்காணிப்பு மரம்" போன்ற எதிரிகளை ஏமாற்றும் திட்டங்களிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
கண்காணிப்பு மரம் என்பது யாருமற்ற பகுதியில் உலோகத்தால் போலியாக ஒரு மரத்தை அமைத்து அதற்குள் வீரர்கள் பதுங்கியிருந்து எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் திட்டம். எதிரிகளின் பார்வைக்கு அது பட்டுப்போன ஒரு மரம்போலத் தெரியும். உண்மையில் அது கண்காணிப்புக் கோபுரம்.
முதல் உலகப் போரில் போரில் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்ட மற்றொரு கலைஞர் நார்மன் வில்கின்சன். போருக்கு முன்னர் அவர் சுவரொட்டிகள் மற்றும் விளக்கப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். ஆனால் பிரிட்டிஷ் கடற்படை அவரது பணியை போருக்குப் பயன்படுத்தியது.
எதிரிகளின் ஏவுகணைகளில் இருந்து கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். கடல்களில் மிதக்கும் கப்பல்கள் முழுமையாக மறைக்க முடியாதவை. அதற்காக மிகவும் வியக்கவைக்கும் ஒரு உருமறைப்பு மாதிரியை அவர் உருவாக்கினார். எதிரிகளால் கப்பலின் வேகம் மற்றும் நிலையைத் தீர்மானிக்க முடியாதபடிக்கு கோடுகளால் கப்பல்களின் வெளிப்புறத்தை மாற்றினார். இது எதிரிகளைக் குழப்பியது.
சாலமன், அண்டர்வுட், வில்கின்சன் மற்றும் வாட்ஸ்வொர்த் ஆகியோரின் மறைத்தல் உத்திகள் முதல் உலகப் போரில் நாஜிகளுக்கு எதிரான ஏமாற்று நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றின. ஆனால் அதற்கு அடுத்து வந்தவர்கள் அவர்களையும் விஞ்சினார்கள்.
இரண்டாம் உலகப் போரில் ஏமாற்றுத் தந்திரங்கள்
1942 ஆம் ஆண்டில், வட ஆப்பிரிக்க பாலைவனத்தில் நாஜிப் படைகளுக்கு எதிராக தோல்வியுறும் நிலையில் நேச நாட்டுப் படைகள் இருந்தன. அப்போது சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் வலிமையான ராணுவ வீரர்கள் அல்லர். முன்னாள் கலைஞர்கள், மேடை வடிவமைப்பாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள் போன்றோர். மேஜிக் கலைஞர்களும் இருந்தார்கள். அவர்களில் அயர்டன் ஒரு முன்னாள் ஓவியர், பர்காஸ் ஒரு திரைப்பட எழுத்தாளர் - 1936 இல் ஒரு ஆவணப் படத்துக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றவர்.
மிகப் பெரிய தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பு அவர்கள் இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. ராணுவத்திடம் ஏராளமான போர்க்கப்பல்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் இருந்தன. ஆனால் அவை எதுவும் இவ்விருவருக்கும் தேவைப்படவில்லை.
கற்பனையான ராணுவத்தையும் ஆயுதங்களையும் உருவாக்குவது, உண்மையான ராணுவத்தை மறைப்பது ஆகியவைதான் இவர்களின் வேலையாக இருந்தது.
எதிரிகளின் உளவு விமானங்கள் வானில் பறக்கும்போது அவற்றை ஏமாற்றுவதற்காக விமான நிலையங்களில் துப்பாக்கிச் சூட்டில் சேதமடைந்து கிடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர். விமானங்களின் மேற்பகுதி வீடுகள் போலத் தோன்றுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஹிட்லரின் நாஜிப் படைகள் திணறின.
1942 வாக்கில் இன்னும் புதுமையான உத்திகள் தேவைப்பட்டன. ஏனெனில் ஹிட்லர் தலைமையிலான அச்சு நாட்டுப் படைகள் தீவிரமாக முன்னேறி வந்தன. அவற்றை ஏமாற்றவும், வேறு திசையில் இருந்து தாக்குதல் நடத்துவது போன்ற காட்டவும் சில தந்திரங்களை நேச நாட்டுப் படைகள் பயன்படுத்தின.
அதற்காக போலியான ராணுவ டாங்கிகளைத் தயாரித்து வேறொரு திசையில் வைத்தார்கள். வடக்கு திசையில் உண்மையான படைகள் இருக்கும்போது, தெற்கு திசையில் போலியான படைகள் வைக்கப்பட்டன. டாங்கிகளைத் தவிர, கடைகள், எண்ணெய் டாங்குகள், வெடிமருந்துக் கிடங்குகள் என பலவும் செட்களாக உருவாக்கப்பட்டன.
நாஜி படை விமானங்கள் இவற்றை உண்மை என்றே கருதின. அவற்றைத் தாக்குவதற்காக ஒரு திசையில் அச்சுப் படைகள் முன்னேறியபோது, திடீரென வேறு திசையில் இருந்து நேசப்படைகள் தாக்குதலைத் தொடுத்தன. அந்தச் சண்டையில் நேசப் படைகள் வெற்றி பெற்றன. கலைஞர்கள் வெற்றி பெற்றார்கள்.
இந்த புத்திசாலித்தனமான தந்திரங்கள் இரண்டாம் உலகப் போரின் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அமெரிக்க ராணுவப் படைப்பிரிவுக்கு காரணமாக இருந்தன. அதற்குப் பெயர் "கோஸ்ட் ஆர்மி". பேய்ப் படைகள். இதில் 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள்.
30,000 துருப்புகளைக் கொண்ட ஒரு பெரும்படை தாக்க வருவது போன்று ஜெர்மானியப் படையை நம்ப வைப்பது இதன் நோக்கமாகும். இதனால் தேவைப்படும் வேறு இடங்களுக்கு உண்மையான படைகளை அனுப்ப முடிந்தது.
கோஸ்ட் ஆர்மியும் பல கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், விளம்பரப் படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை வழக்கமான வீரர்கள் மற்றும் பொறியாளர்களுடன் சேர்த்துக் கொண்டது. கோஸ்ட் ஆர்மியின் பிரபலமான உறுப்பினர்களில் புகைப்படக் கலைஞர் ஆர்ட் கேன், ஆடை வடிவமைப்பாளர் பில் பிளாஸ் மற்றும் ஓவியர் எல்ஸ்வொர்த் கெல்லி ஆகியோர் அடங்குவர்.
1944 மற்றும் 1945 க்கு இடையே அது செயல்பட்ட காலத்தில், ஜெர்மானியப் படைகளை ஏமாற்ற 22 ஏமாற்று தந்திரங்களை உருவாக்கியது. ஹிட்லருக்கு எதிரான இறுதி வெற்றியிலும் இதற்கு முக்கியப் பங்கு உண்டு.
ரப்பரால் உருவாக்கப்பட்ட டாங்கிகள், பிற உபகரணங்கள் போன்றவை இதில் பயன்படுத்தப்பட்டன. தொலைவில் இருந்து பார்த்தால் அவரை உண்மையானவை போன்றே தோன்றும். இதனால் ஜெர்மானிய விமானப்படை தங்களது குண்டுகளை தேவையில்லாமல் பயன்படுத்த நேர்ந்தது.
இதேபோல போலியான ரேடியோ தொடர்பையும் ஒரு குழு செய்தது. இதை நாஜி உளவாளிகள் ஒட்டுக்க கேட்டு அதற்கேற்றபடி செயல்பட படைகளுக்கு அறிவுறுத்தினார்கள். இதுவும் நாஜிக்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.
பாலம் கட்டுவது, துருப்புகளின் நடமாட்டம் போன்ற ஒலிகள் போலியாக உருவாக்கப்பட்டன. கோஸ்ட் ஆர்மியின் உறுப்பினர்கள் நடிகர்களாகவும் செயல்பட்டனர். வெவ்வேறு படைப்பிரிவுகளின் சீருடைகளை அணிந்துகொண்டு உள்ளூர் நகரங்களில் கலந்து கொண்டனர். எதிரி உளவாளிகளுக்கு உதவுவது போலச் செயல்பட்டு தவறான தகவல்களை அளித்து அவர்களை ஏமாற்றினர்.
உலகப் போருக்குப் பிறகு, கோஸ்ட் ஆர்மி பற்றி வெளியே ஏதும் கூறக்கூடாது என்று உறுதியளிக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகும்வரை இதுபற்றி அரசல்புரசலான தகவல்கள் மட்டுமே உண்டு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் :
- டிவிட்டர் :
- இன்ஸ்டாகிராம் :
- யு டியூப் :