உடல் நலம்: 'பிஎம்ஐ சரியாக இருந்தாலும் இடுப்புப் பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து' - 10 முக்கிய தகவல்கள்

    • எழுதியவர், ஃபிலிப்பா ரோக்ஸ்பி
    • பதவி, சுகாதார நிருபர்

இடுப்புப் பகுதியில் அதிகளவு எடையையும் ஆபத்தான கொழுப்பையும் கொண்டிருப்பது பல்வேறு வாழ்வியல் நோய்களுக்கு வழிவகுக்கும் என, பிரிட்டனின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹெல்த் அண்ட் எக்ஸ்லன்ஸ் (NICE) வெளியிட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், இடுப்புப் பகுதியின் சுற்றளவை எப்போதும் கண்காணிப்பது முக்கியம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுப்பின் சுற்றளவு எவ்வளவு இருக்க வேண்டும்? இடுப்புப்பகுதியில் அதிகளவு கொழுப்பு இருந்தால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது குறித்து, பிரிட்டனின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹெல்த் அண்ட் எக்ஸ்லன்ஸ் கூறுவது என்ன?

  • ஒருவர் தன்னுடைய பிஎம்ஐ அளவை கணக்கிட்டுக் கொள்வது பயனளிக்கக்கூடியதுதான், ஆனால், வயிற்றுப்பகுதியில் உள்ள அதிகப்படியான எடையை பிஎம்ஐ உள்ளடக்குவதில்லை. ஆரோக்கியமான பிஎம்ஐ எடையை கொண்டிருப்பவர்களும் இடுப்புப் பகுதியில் அதிகளவு எடையை கொண்டுள்ளனர்.
  • இடுப்புப்பகுதியில் அதிகளவு கொழுப்பையும் எடையையும் கொண்டிருப்பது டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்துகளை அதிகரிக்கும்.
  • இடுப்புப்பகுதியில் கொழுப்பு சேர்வதால், சில ஆசிய நாடுகளின் மக்கள் மற்றும் கருப்பின மக்கள் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.
  • "அடிப்பகுதி விலா எலும்புகள் மற்றும் மேல் வயிற்றுப்பகுதி இரண்டுக்கும் நடுப்பகுதியில் அளவுநாடாவை வைத்து, இயல்பாக சுவாசத்தை வெளியிட்டு, இடுப்பு சுற்றுப்பகுதியை அளக்க வேண்டும்," என, NICE வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.
  • உதாரணமாக, நீங்கள் 175 செ.மீ. (5'9) உயரம் கொண்டவர் எனில், உங்களுடைய இடுப்பு சுற்றளவு 87.5 செ.மீ-க்கு (34 இன்ச்) குறைவாகவே இருக்க வேண்டும் அல்லது உங்களின் உயரத்தில் பாதிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • 35க்கும் அதிகமான பிஎம்ஐ கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 2 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இடுப்பு சுற்றளவு துல்லியமாக இருப்பதில்லை. மேலும், உயரம் மிகவும் குறைவானவர்கள், வயதானவர்களுக்கும் இடுப்பு சுற்றளவு துல்லியமாக இருப்பதில்லை.
  • உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் உட்சுரப்பியல் நோய்களுக்கான ஆலோசகரான பேராசிரியர் ரேச்செல் பேட்டர்ஹாம் கூறுகையில், "வயிற்றுப்பகுதியில் அதிகளவு கொழுப்பை கொண்டிருப்பது, மிக ஆபத்தான வாழ்வியல் நோய்களான டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்" என்றார்.
  • இதனை தடுக்க ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி மேற்கொண்டு, உடல் எடை குறித்து கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என, இந்த வழிகாட்டுதலில் பொது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
  • "இடுப்பு சுற்றளவு - உயரம் விகிதத்தைக் கண்டறிவது எளிமையானது. இதன்மூலம் யாருக்கெல்லாம் வாழ்வியல் நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என கண்டறிய முடியும்," எனவும் பேராசிரியர் ரேச்செல் பேட்டர்ஹாம் தெரிவித்துள்ளார்.
  • இந்த அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடுப்பு சுற்றளவு - உயரம் விகிதத்தை 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பயன்படுத்தி, நோய் குறித்த ஆபத்துகளை கணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான பிஎம்ஐ என்ன?

ஆரோக்கியமான எடை: பிஎம்ஐ 18.5 கி.கி/எம்2 - 18.5 கி.கி/எம்2

அதிக எடை: பிஎம்ஐ 25 கி.கி/எம்2 - 29.9 கி.கி/எம்2

உடல் பருமன் பிரிவு 1: பிஎம்ஐ 30 கி.கி/எம்2 - 34.9 கி.கி/எம்2

உடல் பருமன் பிரிவு 2: பிஎம்ஐ 35 கி.கி/எம்2 - 39.9 கி.கி/எம்2

உடல் பருமன் பிரிவு 3: பிஎம்ஐ 40 கி.கி/எம்2 அல்லது அதற்கும் மேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :