பழைய நோக்கியா கைபேசிகளுக்கே திரும்பும் மக்கள் – ஸ்மார்ட்ஃபோன் சலிப்பு தட்டிவிட்டதா?

    • எழுதியவர், சூசான் பேர்ன்
    • பதவி, வணிகப் பிரிவு செய்தியாளர்

பதினேழு வயதான ராபின் வெஸ்ட் அவருடைய சகாக்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறார். அவர் தனித்திருப்பதற்கான காரணம், அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை.

டிக்டோக், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் பழைய சாதாரண கைபேசியைப் பயன்படுத்துகிறார்.

ஐஃபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் இருப்பதைப் போன்ற அம்சங்கள் இந்த அடிப்படை கைபேசிகளில் இருக்காது. அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திக்கான் வசதிகள் மட்டுமே இவற்றில் இருக்கும். மேலும், சிலவற்றில் வானொலியைக் கேட்கலாம் மற்றும் மிக அடிப்படையான கேமிரா படங்களை எடுக்கலாம். ஆனால், நிச்சயமாக இணையம் அல்லது செயலிகளுக்கான வசதி கிடையாது.

இந்த வகை தொடர்புச் சாதனங்கள், 1990களின் பிற்பகுதியில் மக்கள் பயன்படுத்திய அடிப்படையான கைபேசிகளைப் போன்றவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது ஸ்மார்ட்ஃபோனை கைவிட வெஸ்ட் எடுத்த முடிவுதான் இந்த கைபேசிகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு தூண்டுதலாக அமைந்தது.

பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் கடையில் மாற்று கைபேசியைத் தேடும்போது, பழைய கைபேசி ஒன்றின் மிகக் குறைந்த விலையால் அவர் ஈர்க்கப்பட்டார்.

அவர் இப்போது பயன்படுத்தும், மொபிவொயர் எனப்படும் பிரெஞ்சு நிறுவனத்தின் கைபேசியுடைய விலை வெறும் 8 யூரோ மட்டுமே. அவர் இப்போது ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தாத காரணத்தால், ஒவ்வொரு மாதமும் இணையவசதிக்காக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

"நான் மிகச் சாதாரண அடிப்படையான கைபேசியை வாங்கும் வரை, ஒரு ஸ்மார்ட்ஃபோன் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்வதை நான் கவனிக்கவில்லை," என்கிறார் ராபின் வெஸ்ட். "என்னிடம் நிறைய சமூக ஊடக செயலிகள் இருந்தன. மேலும் நான் எப்போதும் எனது ஸ்மார்ட்ஃபோனிலேயே மூழ்கிக் கிடந்ததால், வேலைகள் சரியாக நடக்கவில்லை."

லண்டனில் வசிக்கும் அவர், தான் இன்னொரு ஸ்மார்ட்ஃபோன் வாங்குவது குறித்துச் சிந்திப்பதில்லை என்கிறார். அதோடு, "என்னுடைய இந்த அடிப்படையான கைபேசியிலேயே நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது என்னை மட்டுப்படுத்துவதாக நான் கருதவில்லை. நான் நிச்சயமாக அதிகம் செயலாற்றுகிறேன்," என்கிறார்.

நோக்கியா 3310 மீண்டும் பிரபலமானது ஏன்?

அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட பழைய கைபேசிகள் இப்போது மறுமலர்ச்சியைச் சந்தித்து வருகின்றன. செம்ரஷ் (SEMrush) என்ற மென்பொருள் நிறுவனத்தின் அறிக்கைப்படி, கூகுள் தேடல்கள், 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கு இடையில் 89% வரை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.

விற்பனை புள்ளிவிவரங்கள் கிடைப்பது கடினமாக இருந்தாலும், உலகளவில் விற்பனையான அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட கைபேசிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு பில்லியனை நெருங்கிவிட்டதாகக் கூறுகிறது. 2020-ஆம் ஆண்டு, உலகளவில் 1.4 பில்லியன் ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனையாகியுள்ளன. அந்த ஆண்டில் ஆன விற்பனை வழக்கத்தைவிட 12.5% குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, 2021-ஆம் ஆண்டு கணக்கியல் குழுவான டெலாய்ட் நடத்திய ஆய்வில், இங்கிலாந்தில் கைபேசி பயன்படுத்துபவர்கைல் 10 பேரில் ஒருவர் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட கைபேசியை வைத்திருப்பதாகக் கூறியது.

"இது ஃபேஷன், பழைய கால நினைவலைகள் மற்றும் டிக்டோக் காணொளிகளில் இவை பங்கு பெறுவது போன்றவை இவற்றின் மறுமலர்ச்சியில் பங்கு வகிக்கிறது," என்கிறார் விலை ஒப்பீட்டுத் தளமான Uswitch.com-இன் கைபேசி நிபுணர் எர்னஸ்ட் டோகு. அவர், "எங்களில் பலர் எங்கள் முதல் கைபேசியாக அந்த அடிப்படை கைபேசியையே கொண்டிருந்தோம். எனவே, இந்த உன்னதமான கைபேசி மீதான நினைவலைகளும் ஏக்கமும் இருப்பது இயற்கையானது," என்கிறார்.

நோக்கியாவின் 3310 கைபேசி 2000-ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியானது. 2017-ஆம் ஆண்டில் மறுவெளியீடு செய்யப்பட்டது. மேலும், அனைத்து காலத்திலும் விற்பனையான கைபேசிகளில் அதுவும் ஒன்று. இது இந்த வகை அடிப்படை கைபேசிகளின் மறுமலர்ச்சியைத் தூண்டியது என்கிறார் டோகு. "உயர் வசதிகளைக் கொண்ட கைபேசிகள் நிறைந்திருக்கும் உலகில், மலிவு விலையில் அவற்றுக்கு மாற்றாக நோக்கியா 3310 அமைந்தது," என்கிறார்.

அவர் மேலும், செயல்திறன் அல்லது செயல்பாடு குறித்த விஷயத்திற்கு வரும்போது, சமீபத்திய ப்ரீமியம் ஆப்பிள் மற்றும் சாம்சங் மாடல்களுடன் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட கைபேசி போட்டியிட முடியாது என்பது உண்மைதான் என்றாலும், "பேட்டரி ஆயுள் மற்றும் கைபேசியின் ஆயுள் ஆகியவற்றில் அவற்றை மிஞ்சும் வகையில் அடிப்படை கைபேசிகள் இருக்கின்றன" என்கிறார்.

ஸ்மார்ட்ஃபோனில் இருந்து பழைய கைபேசிக்கு மாறுவதில் உள்ள சவால்கள்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் உளவியலாளரான ஷெம்க் ஒலெய்னிஜாக், தனது ஸ்மார்ட்ஃபோனுக்கு மாற்றாக நோக்கியா 3310-வை மாற்றிக் கொண்டார். ஆரம்பத்தில் நீண்ட கால பேட்டரி காரணமாக இதை மாற்றியிருந்தாலும், இதில் பிற நன்மைகள் இருப்பதை அவர் விரைவில் உணர்ந்தார்.

"முன்பு நான் எப்போதும் ஸ்மார்ட்ஃபோனுக்குள் மூழ்கியிருப்பேன். ஃபேஸ்புக்கில் மூழ்கியிருப்பது, செய்திகளுக்குள் உலாவுவது, அல்லது நான் தெரிந்துகொள்ளத் தேவையில்லாத விஷயங்களுக்குள் மூழ்கியிருப்பேன்," என்று அவர் கூறுகிறார்.

மேலும், "இப்போது எனக்கும் என் குடும்பத்திற்கும் அதிக நேரமுள்ளது. ஒரு பெரிய நன்மை என்னவெனில், நான் விரும்புவது, பகிர்வது, கருத்து தெரிவிப்பது அல்லது மற்றவர்களுக்கு என் வாழ்க்கையை விவரிக்கும் பழக்கம் இல்லை. இப்போது எனக்கு அதிக தனியுரிமை உள்ளது," என்கிறார்.

இருப்பினும் போலாந்து நகரமான லோட்ஸில் வசிக்கும் ஒலெய்னிஜாக், தொடக்கத்தில் இந்த மாறுதல் சவாலாக இருந்ததை ஒப்புக் கொள்கிறார். அதுகுறித்துப் பேசியவர், "முன்பு நான் எனது ஸ்மார்ட்ஃபோனில் பேருந்துகள் மற்றும் உணவகங்கள் போன்ற அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருப்பேன். இப்போது அது சாத்தியமற்றது. எனவே வீட்டில் இருந்தபடி எல்லாவற்றையும் நானே செய்யக் கற்றுக்கொண்டேன். இப்போது பழகிவிட்டேன்," என்கிறார்.

நியூ யார்க் நிறுவனமான லைட் ஃபோன், அடிப்படை கைபேசிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒருவர். இந்த நிறுவனம் சற்று புத்திசாலித்தனமாக அத்தகைய கைபேசிகளில், இசை மற்றும் பாட்கேஸ்ட்களை கேட்க அனுமதிக்கின்றன. மேலும் ப்ளூடூத் மூலம் ஹெட்ஃபோன்களுடன் இணைக்கும் வசதியையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், நிறுவனம் அதன் கைபேசிகளில், "ஒருபோதும் சமூக ஊடகங்கள், துணுக்குச் செய்திகள், மின்னஞ்சல், ப்ரவுசர் போன்ற எந்த அளவின்றிப் பயன்படுத்தத் தூண்டும் வசதிகளும் இருக்காது," என்று உறுதியளிக்கிறது.

அடிப்படை கைபேசிகளில் பொதுவாக ஒப்பிடுகையில், 99 டாலர் வரை அதிகபட்ச விலைக்கு விற்கப்பட்டும் கூட, 2020-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2021-ஆம் ஆண்டில் லைட்ஃபோன் நிறுவனத்தின் அடிப்படை கைபேசிகள் 150% விற்பனையில் வலுவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

லைட் ஃபோன் நிறுவனத்தின் இணை நிறுவனர், கைவேய் டாங், "ஆரம்பத்தில் வார இறுதியில் தங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருந்து சற்று விலகி, ஓய்வெடுக்க விரும்பும் நபர்களுக்காக, இரண்டாம் நிலை கைபேசியாகப் பயனபடுத்த என்றே உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது நிறுவனத்தின் பாதி வாடிக்கையாளர்கள் தங்கள் முதன்மை சாதனமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.

"ஏலியன்கள் பூமிக்கு வந்தால், கைபேசிகள் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் சிறந்த உயிரினம் என்று நினைப்பார்கள்," என்று கூறும் கைவேய் டாங், "இது நிற்கப் போவதில்லை. இன்னும் மோசமாகத்தான் வளரும். நுகர்வோர் ஏதோ தவறாக இருப்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள். நாங்கள் அதற்கொரு மாற்றை வழங்க விரும்புகிறோம்," என்கிறார்.

இளைஞர்களே அதிகமாக இதை விரும்புகின்றனர்

இந்த அடிப்படை கைபேசியை வாங்குபவர்கள் மிகவும் வயதானவர்களாக இருக்க வேண்டும் தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக 25 மற்றும் 35 வயதிற்கு உட்பட்டவர்களே நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்காக இருப்பதாக டாங் கூறுகிறார்.

தொழில்நுட்ப வல்லுநரும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் மூத்த ஆய்வாளரான பேராசிரியர் சாண்ட்ரா வேக்டர், நம்மில் சிலர் எளிமையான கைபேசிகலைத் தேடுவது புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விஷயம் தான் என்கிறார். மேலும் அவர், "நியாயமாகப் பார்த்தால், ஸ்மார்ட்ஃபோனில் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கான வசதி என்பது, அதிலிருக்கும் திறன்களில் ஒன்று மட்டுமே. பொழுதுபோக்கு மையம், செய்திகள், வழிகாட்டும் வசதிகள், மின்னணு பணப்பை போன்ற வசதிகள் தான் ஆகியவற்றுக்கான மையமாக ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது," என்கிறார்.

அறிவிப்புகள், புதுப்பிப்புகள் மற்றும் புதுப்புது செய்திகள் மூலம் ஸ்மார்ட்ஃபோன்கள் எப்போதும் "உங்கள் கவனத்தை ஈர்க்கவே விரும்புகின்றன என்னும் அவர், "இது உங்களை விளிம்பிலேயே வைத்திருக்கலாம். கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கலாம். அதிலேயே உங்களை மூழ்க வைக்கக்கூடிய வகையில் இருக்கலாம்" என்றும் கூறுகிறார்.

மேற்கொண்டு பேசிய பேராசிரியர் வேக்டர், "இப்போது நம்மில் சிலர் எளிமையான தொழில்நுட்பங்களைத் தேடுகிறோம். அடிப்படை கைபேசிகள் அதற்கான வாய்ப்பாக இருப்பதாக நினைப்பது அர்த்தமுள்ளது தான். இதன்மூலம் ஒரு வேலையில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கும் அதிக கவனத்துடன் ஈடுபடுவதற்கும் அதிக நேரத்தை வழங்கலாம். இது மக்களை அமைதிப்படுத்தவும் கூடும். அதிகப்படியன தெர்வு மகிழ்ச்சியற்ற தன்மையையும் கிளர்ச்சியையும் உண்டாக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன."

லண்டனில், ராபின் வெஸ்ட் தேர்ந்தெடுத்துள்ள கைபேசியைப் பார்த்து பலரும் குழப்பம் அடைந்துள்ளனர். "அனைவரும் இதுவொரு தற்காலிக முடிவு என்று நினைக்கிறார்கள். அவர்கள் நான் எப்போது ஸ்மார்ட்ஃபோன் வாங்குவேன் என்று எதிர்பார்க்கிறார்கள்."

பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின்மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து கூறிய விளக்கம் என்ன? - காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: