You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா ஈஸ்டர்ன் விமானம் போயிங் 737 எம்யூ5735 விபத்து: 132 பேருடன் சீன விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது
132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதை சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர். என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனினும் இதுவரை உயிர்பிழைத்தோர் பற்றிய தகவல் ஏதும் இல்லை.
இந்த நிலையில், பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் சீனாவுக்கும், பயணம் செய்தோரின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளன. அதனால் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்தில், வெளிநாட்டுப் பயணிகள் யாரும் இல்லை என, பயணிகளின் தகவல் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளதாக, சீன ஊடகக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் உறுதியான தகவல் பெறப்படும் என, ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சீன ஊடகக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் விவரம் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. ஆனால், விபத்தில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என, நிகழ்விடத்தில் உள்ள மீட்புக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது.
விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் குழுவினர் நிகழ்விடத்துக்குச் சென்றடைந்திருக்கின்றனர்.
வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரான குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.
சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் விமான விபத்து இதுவாகும்.
MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:11க்கு (05:11 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மதியம் 03:05-க்கு குவாங்சோவை அடைந்திருக்க வேண்டும்.
சீனா பொதுவாக பாதுகாப்பான விமான விபத்துக்கு பெயர்பெற்றது. கடந்த 12 ஆண்டுகளில் பெரிய அளவில் விமான விபத்துக்கள் நடக்கவில்லை.
இந்த விபத்து தொடர்பாக, சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ள இயலவில்லை.
சீனாவின் அரசுக்குச் சொந்தமான ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், நாட்டின் மூன்று பெரிய விமானச் சேவை நிறுவனங்களுள் ஒன்று. சீனா சதர்ன், ஏர் சீனா ஆகியவை மற்ற இரு நிறுவனங்கள்.
இந்த விபத்து தொடர்பாக, தீயணைப்பு அதிகாரி ஒருவர் 'குளோபல்' டைம்ஸ்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "25 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 117 தீயணைப்புப் படையினரை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆனால், அந்த பகுதி மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். எனவே, தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதியை அடைய முடியவில்லை. தீயணைப்புப் படையினர் நடந்தே அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்" என தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானம் சுமார் ஆறரை ஆண்டுகளாக இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் மொத்தமாக 162 இருக்கைகள் உள்ளன. இதில், 12 பிசினஸ் வகுப்பு இருக்கைகள் மற்றும் 150 பொருளாதார வகுப்பு இருக்கைகள் ஆகும்.
இதனிடையே ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் கருப்பு - வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது.
மொத்தமாக 450 வன தீயணைப்புப்படையினர் விபத்து நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளதாக, சிஜிடிஎன் ஊடகம் தெரிவித்துள்ளது.
இவர்களுள் 300 பேர் மாலை 6.30 மணியளவிலும், 150 பேர் இரவு 10.30 மணியளவிலும் நிகழ்விடத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை
132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்துக்குள்ளான போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலத்தில் நடந்த பெரிய விமான விபத்துகள்
2021
கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தனர்.
2020
மே 22 அன்று, 91 பயணிகள் மற்றும் விமானக்குழுவை சேர்ந்த 8 பேருடன் பயணித்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறைந்தது 2 பேர் மட்டுமே இந்த விபத்தில் உயிர்பிழைத்தனர்.
2019
மார்ச் 10 அன்று, எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், அடிஸ் அபாபா பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 157 பேரும் இதில் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
2018
அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்ஸில் ஏப்ரல் 11 அன்று, ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானக்குழுவை சேர்ந்த 10 பேர் உட்பட பயணித்த 257 பேரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானோர், ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினருமாவர்.
2017
2017ஆம் ஆண்டில் எந்தவொரு விமான விபத்தும் நடைபெறவில்லை.
2016
டிசம்பர் 25 அன்று, கருங்கடலில் ரஷ்ய ராணுவ விமானமான Tu-154 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 92 பேரும் உயிரிழந்தனர். சிரியாவில் ரஷ்ய படையினருக்காக கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ராணுவத்தினர் இவ்விபத்தில் உயிரிழந்தனர்,.
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்