You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘முஸ்லிம் ஹைக்கர்ஸ்’: விமர்சனங்களை கடந்து பயணத்தைத் தொடரும் இளைஞர்கள்
ஹாரூன் மோடா, 'முஸ்லிம் ஹைக்கர்ஸ்' என்கிற பக்கத்தை ஊரடங்கின் போது உருவாக்கிய போது, பலரிடமிருந்து இவருக்கு நிறைய மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்தன.
இக்குழு பின்னர் பிரிட்டன் முழுவதும் பரவி, நூற்றுக்கணக்கானவர்களின் குழுவாக வளர்ந்துள்ளது. இவர்கள் ஒன்றாக இணைந்து வெளியே செல்ல முஸ்லிம் ஹைக்கர்ஸ் குழு பாலமாக இருக்கிறது.
ஆனால் கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரிட்டனில் உள்ள பீக் மாவட்டத்தில் இவர்கள் நடத்திய பெரிய பயணத்தின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தபோது, அவர்களை விமர்சிக்கும் ரீதியில் பல கடுமையான கருத்துகளை எதிர்கொண்டனர்.
அவை தங்களைத் தடுக்காது என்றும், அவற்றை விட ஹைக்கிங் சமூகத்தின் உண்மையான உற்சாக மனநிலை அதிகமாக இருப்பதாகவும் கூறினார் ஹாரூன் மோடா.
'வெளியே செல்ல தடை'
அனைத்து சமூக மற்றும் மதப் பின்னணியைச் சேர்ந்த மக்களும் 'முஸ்லிம் ஹைக்கர்ஸ்' குழுவில் சேர வரவேற்கப்படுகிறார்கள் என்றாலும், ஊரடங்கு காலத்தில் தனிமையில் இருக்கும் மக்களுக்கு ஆதரவளிக்க ஹாரூன் மோடா இக்குழுவைத் தொடங்கினார்.
வெவ்வேறு வாழ்க்கை முறை மற்றும் கலாசார விதிமுறைகள் காரணமாக, இஸ்லாமிய பின்னணியில் இருந்து போதுமான மக்கள் வெளி உலக பொழுதுபோக்குகளை அனுபவிப்பதில்லை என்று இவர் கூறுகிறார்.
"உதாரணமாக, என்னை எடுத்துக் கொண்டால், வளர்ந்து வரும் போது, தேசிய பூங்காக்களுக்குச் செல்வது, மலையேற்றம் செய்வது போன்ற அனுபவங்கள் எனக்கு கிடைத்ததில்லை," என்கிறார் ஹாரூன்.
சில நாட்களுக்கு முன், கிறிஸ்துமஸ் தினத்தன்று, கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனித்து விடப்பட்ட விவாகரத்தான பெண்களுக்கான ஆதரவுக் குழுக்கள் உட்பட 130 க்கும் மேற்பட்டோர் சில மணி நேர மலையேற்ற பயணத்தில் இணைந்தனர்.
இந்த முயற்சி குளிர்கால நடைபயணமாக திட்டமிடப்பட்டது,
கிராமப்புறங்களில் கடந்து சென்றபோது அங்குள்ள மக்கள், இவர்களை வரவேற்றனர்.
ஆனால் இவர்கள் ஃபேஸ்புக்கில் அன்றைய படங்களை பதிவிட்டபோது, அவர்கள் "சரியான நடைப்பயணிகள்" அல்ல என்று சிலர் எதிர்கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஒரு பெரிய மலையேற்றக் குழு, பாதைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்தும் என்றும் சிலர் பதிவிட்டனர்.
பெரும்பாலான கருத்துகள் ஆதரவானதாக இருந்தன, ஆனால் மற்றொரு நடைபயிற்சி குழுவில் பகிரப்பட்ட படங்கள் சில விமர்சனங்களை ஈர்த்தன.
அந்தக் கருத்துக்களால் மக்களின் உற்சாக மனநிலை பாதிக்கப்படக் கூடாது என இவர்கள் விரும்பினர்.
"நான் எப்போதும் வெளி உலகில் மிகவும் வரவேற்கப்படுவதாக உணர்ந்துள்ளேன்" என்று கூறுகிறார் ஹாரூன்.
ஆனால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவைகளுக்கு வரும்போது நாங்கள் மிகவும் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல.
"எங்கள் சமூகத்திற்கான தடைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், உதவுவதும் மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன், பிறகு எங்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்யுங்கள்."
குழுவில் இருக்கும்போது மக்கள் பாதுகாப்பாக உணர்வதாக அவர் கூறுகிறார்.
"இந்த விரும்பத்தகாத கருத்துகள் அனைத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக பெரும்பான்மையானவர்கள் ஆதரவாக இருந்தனர், ஆனால் இழிவான கருத்துக்கள் பெருமளவில் குவிந்தன.
"இது மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஒருவரை தடுப்பதாக இருக்கும்." என்கிறார் ஹாரூன்.
முதல்முறை பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் மோசமானது என ஹாரூன் கூறுகிறார்.
"நாங்கள் இணையத்தில் இந்த மாதிரியான கருத்துகளை எதிர் கொண்டுள்ளோம், ஆனால் அவை நேரிலும் நடக்கலாம்.
"வெளியே வெள்ளையர்கள் மட்டுமே இருப்பது போன்ற சில கருத்துக்கள், புரிதல் நிலவுகின்றன, இது விரும்பத்தகாதது.
"ஹிஜாப் அணிந்தவர்கள் அல்லது பாரம்பரிய உடையில் இருக்கும் ஆண்கள் மோசமான கருத்துக்கள் மற்றும் இனவெறி அவதூறுகளுக்கு ஆளாவதாக பல ஆவணப்படுத்தப்பட்ட சம்பவ அறிக்கைகள் உள்ளன."
வானிலை மேம்பட்டதும் 'முஸ்லிம் ஹைக்கர்ஸ்' குழு மற்றொரு பெரிய நடை பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.
"கடந்த இரண்டு நாட்களில் நாங்கள் பரந்த சமூகத்தின் ஒற்றுமையைக் கண்டோம். அதுதான் வெளி உலகத்தில் உள்ள உண்மையான உற்சாகம். ஒரு சிறு குழுவினர் எங்களுக்கான விஷயங்களை கடினமாக்க விரும்புகின்றனர்," என்கிறார் ஹாரூன் மோடா.
பிற செய்திகள்:
- டாஸ்மாக் பார் டெண்டர் சர்ச்சையில் செந்தில்பாலாஜி: ``எனக்கு எதிராக தி.மு.கவினரே போராட்டமா?''
- குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கியூபாவில் 2 வயது முதல் தொடங்கிய திட்டம் - மற்ற நாடுகளில் என்ன நிலவரம்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- டெஸ்லா ஆட்டோ பைலட் குழு தலைவராக தமிழ்நாட்டின் அசோக் எல்லுசுவாமி - யார் இவர்?
- ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்