'பெண்களை பசுக்களாக' காட்டிய விளம்பரம்: மன்னிப்பு கேட்ட தென்கொரிய பால் நிறுவனம்

பெண்களை பசுக்களைப் போல் சித்தரித்த விளம்பரம் தென்கொரியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை தயாரித்த பிரபல பால் உற்பத்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

சியோல் மில்க் என்ற பிரபல பால் உற்பத்தி நிறுவனத்தின் விளம்பரத்தில், வயல்வெளியில் இருக்கும் பெண்களை ஒருவர் ரகசியமாக படம் பிடிக்கிறார். பின், அங்குள்ள பெண்கள் பசுக்களாக மாறுகின்றனர்.

பொதுமக்களிடையே வலுத்த எதிர்ப்பு காரணமாக, அந்தக் காணொளியை யூ-டியூப்பிலிருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது. ஆனால், பலர் அந்த காணொளியை இணையத்தில் பதிவேற்றம் செய்ய, அது வைரலாகியுள்ளது.

சிலர் அந்த காணொளியின் இருந்த ஆணின் நடத்தையை, "மொல்கா"வுடன் ஒப்பிட்டுள்ளனர். தென்கொரியாவில் மொல்கா என்றால் சட்டத்துக்கு புறம்பாக மனிதர்களை ரகசியமாக படம் பிடிக்கும் செயல்.

"கடந்த மாதம் 29ம் தேதி வெளியான பால் விளம்பரத்தை பார்த்து சங்கடம் அடைந்தவர்கள் அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்", என்று சியோல் மில்க்கின் தாய் நிறுவனமான சியோல் மில்க் கூட்டுறவு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

"இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். இதுகுறித்து மறு ஆய்வு நடத்தி, வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க மேலும் கவனமாக இருப்போம். நாங்கள் மன்னிப்புக் கோரி தலை வணங்குகிறோம்," என்று தெரிவித்துள்ளது.

வயல்வெளியில், ஒருவர் கேமராவுடன் சுற்றித் திரிவது போல் அந்த விளம்பரக் காணொளி தொடங்குகிறது.

"பண்டைய காலத் தூய்மையுடன் உள்ள அந்த இடத்தில் நாம் கடைசியாக படம் பிடிக்க முடிந்தது", என்று ஓர் ஆணின் பின்னணிக் குரல் கேட்கிறது.

அதன் பின், புதர்களில் மறைந்துள்ள ஒருவர், ஒடையிலிருந்து தண்ணீர் குடிக்கும், யோகா பயிற்சி செய்யும் பெண்கள் குழுவை படம் பிடிக்கிறார்.

அப்போது ஒரு குச்சியை தற்செயலாக அந்த நபர் மிதிக்க, அதன் சத்தம் கேட்டு திரும்பும் பெண்கள் பசுக்களாக திடீரென மாறுகின்றனர்.

"தூய்மையான நீர், இயற்கையான உணவு, 100% தூய்மையான சியோல் பால். சியோக்யாங்கின் ரம்மியமான இயற்கை பண்ணையிலிருந்து இயற்கையாகத் தயாரிக்கப்படும் பால்," என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் முடிவடைகிறது.

பாலின வேறுபாடு மற்றும் உணர்வுப்பூர்வமான பிரச்னைகள் குறித்து, இந்த விளம்பரம் தேசிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பெண்களை பசுக்களாக சித்தரிப்பதுடன் இந்த விமர்சனம் நிற்கவில்லை.

பெண்கள் குழுவை ரகசியமாக படம் பிடித்திருப்பதை பற்றியும் சிலர் குரல் கொடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, தென்கொரியாவில் உளவு கேமரா மூலம் குற்றங்கள் நடந்துள்ள நிலையில், இது விமர்சிக்கப்பட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.

"ரகசிய கேமரா" என்றழைக்கப்படும் "மொல்கா", தென் கொரிய பெண்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக உள்ளது.

தவறான காரணங்களுக்காக, செய்திகளில் சியோல் மில்க் இடம்பெறுவது இதுவே முதல்முறையல்ல.

2003ம் ஆண்டு, இந்நிறுவனம் நடத்திய மேடை நிகழ்ச்சியில், மாடல் பெண்கள் நிர்வாணமாகத் தோன்றி, ஒருவர் மீது ஒருவர் தயிரைத் தெளித்தனர்.

பின்னர், அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவருக்கும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடல்களுக்கும் ஆபாசமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

பிபிசி கொரிய சேவையின் யோஜங் கிம்மின் கூடுதல் தகவல்களுடன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :