You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா?
பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் கூறும் ஆலோசனைகள்:
உலகில் இறையாண்மை பெற்றுள்ள நாடுகள்தான் செலாவணிகளாக நோட்டுகளையும் காசுகளையும் அச்சிட முடியும். ஆனால், அதற்கு மாற்றாக தனியார் உருவாக்கியுள்ள செலாவணிதான் கிரிப்டோகரன்சி எனப்படுகிறது.
ரூபாய் நோட்டுகள் என்பவை வெறும் காகிதங்கள். ஆனால், அவற்றுக்கு மதிப்பு எப்படி வருகிறதென்றால், அரசு என்ற அமைப்பின் மீது உள்ள நம்பிக்கையால்தான் வருகிறது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக ரிசர்வ் வங்கியில் தங்கம் இருக்கிறது என பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அப்படி ஏதும் கிடையாது.
நாடுகள் தங்கள் விருப்பம்போல நோட்டுகளை அடிக்க ஆரம்பித்துவிட்டன. அமெரிக்காவிலும் அதுதான் நடக்கிறது. இந்த நிலையில்தான், சிலர் ஒன்று சேர்ந்து, கிரிப்டோ கரன்சியை உருவாக்கினர். நாடுகள் எந்த அடிப்படையான ஆதாரமும் இல்லாமல் பொறுப்பற்ற வகையில் நோட்டுகளை அடித்துத் தள்ளுவதால் அதற்கு மதிப்பில்லாமல் போவதாகக் கூறி இந்த செலாவணியை உருவாக்கினார்கள். இதற்கு பிளாக் செயின் என்ற கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கிரிப்டோகரன்சியில் மிக முக்கியமான விஷயம், அது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும். புதிய கிரிப்டோகரன்சிகளை டேட்டா மைனிங் செய்து எடுப்பது செல்லச்செல்ல கடினமாகிக்கொண்டே போகும்.
சென்னையில் ஒரு யூ டியூப் சேனலில் பணியாற்றியவர்கள், அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் மிக விலை உயர்ந்த சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்களை வாங்கி, ஒரு பிட்காயினை மைனிங் செய்துவிட்டார்கள்.
ஆனால், அடிப்படையில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கென எந்த மதிப்பும் கிடையாது. அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றன என்பதுதான் அவற்றின் ஒரே மதிப்பு. ஒரு நாள் கிரிப்டோ கரன்சிகள்தான் உலகை ஆளப்போகின்றன என்று சொல்லி நம்மை நம்பவைக்கிறார்கள். அதானால் தான் இவற்றின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது.
பிட் காயினுக்குக் கிடைத்த வெற்றியால் பலரும் இது போன்ற கிரிப்டோ கரன்சிகளை உருவாக்க ஆரம்பித்தார்கள். ஈதரம் என ஒரு கிரிப்டோகாயின் உருவாக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஈலோன் மஸ்க் ஒரு கிரிப்டோவை உருவாக்கினார். இப்போது ஆயிரக்கணக்கில் கிரிப்டோ கரன்சிகள் வந்துவிட்டன.
தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களில் பெயர் தெரியாத கிரிப்டோ கரன்சிகளை வணிகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது சீனா கிரிப்டோ கரன்சிக்கு தடை விதித்துவிட்டது. இதனால், முதல் மூன்று - நான்கு இடங்களில் உள்ள கிரிப்டோகரன்சிகள் பாதிக்கப்படாது.
ஆனால், மிகச் சிறிய அளவிலான கிரிப்டோ கரன்சிகள் காணாமல் போகக்கூடும். நம் ஊரில் இந்த சிறிய கரன்சிகளில்தான் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே நாம் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம்.
வேறு சில நிறுவனங்கள், ஒரு பிட் காயினை வாங்கி, அதனை பிரித்து விற்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்களிடம் பிட்காயின் இருக்கிறதா என்பது தெரியாது. இது யாராலும் கட்டுப்படுத்தப்படாத, கண்காணிக்கப்படாத பரிவர்த்தனை என அவர்களே சொல்கிறார்கள். ஏமாற்றப்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது. இதில் அந்த நிறுவனத்துக்கு உள்ளேதான் வர்த்தகம் நடக்கும்.
இப்படி கிரிப்டோ கரன்சிகளை வளர விடுவது தேசத்திற்கு ஆபத்து என மெல்லமெல்ல நாடுகள் உணர ஆரம்பித்திருக்கின்றன. சீனா முதலில் விழித்துக் கொண்டுவிட்டது. அதைத் தடைசெய்துவிட்டது. மற்ற நாடுகள் இதனை உணரும்போது, அவர்களும் தடைசெய்வார்கள்.
கிரிப்டோகரன்சி உருவான விதம், அவற்றில் செய்யப்படும் முதலீடுகளின் பாதுகாப்பு, அதிலிருக்கும் அபாயங்கள் ஆகியவை குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் அளித்த முழுமையான பேட்டியைக் காண:
பிற செய்திகள்:
- ஜெர்மன் தேர்தல்: ஏங்கலா மெர்க்கலுக்கு பிறகு புதிய ஆட்சித்துறைத் தலைவர் யார்?
- சாஃபோ: லெஸ்பியன் உறவுக்காக கவிதையில் உருகிய பழங்கால கிரேக்க பெண் கவிஞர்
- பெண்ணின் இதயத்தை துளைத்த தோட்டா - ஆறு மாதங்களுக்குப் பிறகு மீட்ட மருத்துவர்
- DC vs RR: தனியொருவனாக போராடிய சஞ்சு சாம்சன் - ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய ராஜஸ்தான் பேட்ஸ்மென்கள்
- மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை தராதது ஏன்?
- நரேந்திர மோதியின் ஐ.நா உரை: "இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - 10 முக்கிய அம்சங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்