You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வதேச விண்வெளி நிலையம்: ரஷ்யா விடுக்கும் புதிய எச்சரிக்கை
காலாவதியான கருவிகள், வன்பொருள்கள் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சரி செய்ய முடியாத கோளாறுகள் ஏற்படலாம் என்று ஒரு ரஷ்ய அதிகாரி எச்சரித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பகுதியில் உள்ள கருவி அமைப்புகளில் 80 சதவீதம் காலாவதியானவை என அரசு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார் விளாதிமிர் சோலோவ்யோவ் என்ற அந்த அதிகாரி.
இது தவிர, சிறிய விரிசல்கள் தென்படுவதாகவும் அது காலப்போக்கில் பெரிதாகலாம் என்றும் அவர் கூறுகிறார்.
வன்பொருள்கள் குறித்து ரஷ்யா முன்பே கவலை தெரிவித்து வந்திருக்கிறது. 2025க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறிவிடப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து கூட்டாக இந்த விண்வெளி நிலையத்தை 1998ல் கட்டமைத்தன. தொடக்கத்தில் 15 ஆண்டுகள் செயல்படுவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டது.
இந்த நிலையத்தின் கருவி அமைப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட அடுத்த நாளே சரி செய்யமுடியாத கோளாறுகள் தோன்றும் என்று சோலோவ்யோவ் கூறியுள்ளார்.
விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பகுதியை கட்டமைக்கும் முன்னணி நிறுவனமான எனர்ஜியா-வின் முதன்மைப் பொறியாளர் அவர். அது தவிர அவர் ஒரு முன்னாள் விண்வெளி வீரரும்கூட.
நிலையத்தின் ரஷ்யப் பகுதியில் உள்ள கருவிகள் பழையதாகத் தொடங்குவதாகவும் விரைவில் அவற்றை மாற்றுவதற்கான தேவை வரும் என்றும் அவர் கடந்த ஆண்டு எச்சரித்தார்.
விரிசல்கள் அதிகமாகும்
விண்வெளி நிலையத்தில் இடம் பெற்றுள்ள 'ஜர்யா கார்கோ மாட்யூல்' என்ற ரஷ்ய அலகில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் காலப்போக்கில் அதிகமாகும் என்று சோலோவ்யோவ் ஆர்.ஐ.ஏ. செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். 1998ல் ஏவப்பட்ட இந்த அலகு விண்வெளி நிலையத்தில் உள்ள பழமையான அலகுகளில் ஒன்று. பெரிதும் இது சரக்குகளை இருப்புவைக்கவே பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழையதாகிக்கொண்டிருக்கும் உலோகங்கள் சரி செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். பேரழிவு ஏற்படும். அப்படி ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது என்று ரஷ்யாவின் துணைப் பிரதமர் யூரி போரிசோவ் கடந்த ஏப்ரல் மாதம் அரசுத் தொலைக்காட்சியிடம் கூறினார்.
கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொய்வுகள் காரணமாக 2030ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் செயல்படமுடியாது என்று ராஸ்காஸ்மோஸ் என்ற ரஷ்ய விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
தொடர்ந்து நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது, ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றால் ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் பாதிக்கப்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பகுதியும் தொடர் பிரச்சனைகளை எதிர்கொண்டன.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்